2005ல் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், பாமக கோட்டை என சொல்லி வந்த விருத்தாசலத்தில் 2006ல் தனித்து நின்று வெற்றி பெற்றார். பாமகவின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமியை தோற்கடித்தார். அதிலிருந்து தேமுதிகவை கடுமையாக சாடி வந்தது பாமக. சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும், தேர்தலில் நிற்பதையும் கடுமையாக விமர்சித்து வந்தது பாமக.

Advertisment

ramadoss-vijayakath

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவை கடுமையாக விமர்சனம் செய்தது பாமக. அந்த தேர்தலில் பாமகவின் தோல்விக்கு பெரிதும் காரணம் தேமுதிக என கூறப்பட்டது. வடமாவட்டங்களில் பாமகவின் இடங்களை பறித்தது தேமுதிக. அதனைத் தொடர்ந்து நடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இணைந்தன. அந்த தேர்தலில் பாமகவுடன் சுமூகமான உறவு தேமுதிகவுக்கு இல்லை. ராமதாஸ் - விஜயகாந்த் ஒரே மேடையில் பிரச்சாரமும் செய்யவில்லை. தேமுதிக, பாமக தொண்டர்களுக்கும் நல்ல சுமூகமான உறவு அப்போது இல்லை.

Advertisment

ramadoss-vijayakath

அதனைத் தொடர்ந்து நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து நின்றது. மக்கள் நலக்கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக உளூந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு இரண்டாம் இடத்தை பிடித்தார்.

தற்போது நடைபெறவுள்ள 2019 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முந்தி சென்று 7+1 வாங்கிய பாமக, அதிமுக தலைவர்களுக்கு தைலாபுரத்தில் விருந்து வைத்து கொண்டாடியது. மேலும், வட மாவட்டங்களில் தங்களுக்கு தொகுதிகளை கேட்டது. தேமுதிகவோ பாமகவைவிட அதிகம் சீட் வேண்டும் என்று அடம் பிடித்ததுடன் வடமாவட்டங்களையே குறிவைத்தது. இறுதியாக 4 தொகுதிகளை கொடுத்து தேமுதிகவை வலைக்குள் விழ வைத்தது அதிமுக.

Advertisment

ramadoss-vijayakath

யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி முடிவு எடுக்க புதன்கிழமை மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. இதில் பாமக - தேமுதிக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும், வாக்குகள் சிதறக்கூடாது என்றும், பாமக நிறுவனர் ராமதாஸை, உங்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும் என சுதீஷுக்கு அதிமுக ஆலோசனை வழங்கியது.

அப்போது, ''நாங்கள் சென்று ராமதாஸை பார்த்தால் தேர்தலுக்கான சந்திப்பு என்பார்கள், விஜயகாந்தை சந்தித்து ராமதாஸ் உடல்நலம் விசாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று சுதீஷ் கூறியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, ''இதுவும் நல்லதுதான் இருதலைவர்களின் சந்திப்பு நடந்தால்தான் இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கோகுலஇந்திராவை அனுப்பி வைப்பதாக'' தெரிவித்துள்ளார்.

அதன்படி வியாழக்கிழமை காலை 11.10 மணிக்கு விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி. அவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செய்தித் தொடர்பாளர் கோகுலஇந்திராவும் சென்றனர்.