/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/305_10.jpg)
ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு பீகார் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்கதொரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அக்டோபர் 8-ஆம் தேதி இரவு அரசியல் களத்தை தன் வாரிசுகளிடம் விட்டுவிட்டு மறைந்திருக்கிறார்.
ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல் வாழ்க்கை மற்ற அனைத்து அரசியல்வாதிகளையும் போலவே விமர்சனங்களும் பாராட்டுகளும் நிறைந்தது.
அடிப்படையில் காவல்துறையைச் சேர்ந்தவரான பஸ்வான் 1969-ல் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்க இருந்தார். அவரது நண்பர்களோ அவரை தேர்தலில் இறக்கிவிட ஆர்வமாக களமிறங்கினார். பஸ்வானுக்கோ தயக்கம்,நண்பர்கள் விடவில்லை… வலுக்கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வலியுறுத்த, அப்படி தொடங்கியதுதான் ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/307_8.jpg)
கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக அரசியலில் கோலோச்சிய பஸ்வான், பிரதமராக ஆகாவிட்டாலும் பலரை பிரதமராக உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். ராம்விலாஸ் பஸ்வானை அரசியல் வானிலை அறிவிப்பாளர் என பலரும் பாராட்டுவதுண்டு. அதற்கு காரணம் அவர் யாருடன் கூட்டணி அமைக்கிறாரோ… அந்த கட்சிதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஜெயிக்கும்.
எட்டுமுறை மக்களவை உறுப்பினராக இருந்து ரயில்வே அமைச்சர், தகவல்- தொலைத்தொடர்பு துறை அமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், வேதிப்பொருள், உரத்துறை அமைச்சர், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் என பல்வேறுபட்ட அமைச்சர்பொறுப்புகளை வகித்தவர். தற்போதைய மோடி அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் சூத்திரதாரி எனப் போற்றப்படுபவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/306_7.jpg)
நெருக்கடி நிலை காலத்தில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாக செயல்பட்டவர். வி.பி.சிங். பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வரவேற்றவர். அதைத்தொடர்ந்துதான் 2000-ல் லோக் ஜனசக்தி கட்சி உருவாகியது. வி.பி.சிங், தேவகெளடா, ஐ.கே. குஜ்ரால், நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி என ஆறு பிரதமர்களுக்கு கீழே அமைச்சராகப் பணியாற்றியவர் என்ற பெருமையும் உண்டு.
கூட்டணிகளை எளிதாக மாற்றிக்கொள்பவர் என்ற பெயரும் அவருக்குண்டு. தனது சகோதரர்கள், மருமகன், தற்போது மகன் சிராஜ் பஸ்வான் என பலரையும் கட்சிக்குள் கொண்டுவந்ததால், அரசியல்வாதிகள் மீது பிரதானமாகக் கூறப்படும் குடும்ப அரசியல் செய்பவர் என்ற விமர்சனமும் இவர்மீது உண்டு.
நடக்கவிருக்கும் பீகார் தேர்தலில் தனது மகன் சிராஜ் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க, அதை நித்திஷ்குமார் மறுத்துவிட்டார். அதனால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் முடிவுக்கு அவரது கட்சி வந்தது. மேலும் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடாது எனவும், மற்ற தொகுதிகளில் மட்டுமே போட்டி என்ற நிலைப்பாடு பா.ஜ.க.வை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவதற்கான ஏற்பாடு என எதிர்க்கட்சிகள் நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றன.
இருந்தபோதும், பீகாரில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் பாதையை வகுத்துத்தந்து, வெற்றிகரமான தலைவராக திகழ்ந்தவர் ராம்விலாஸ் பஸ்வான் என்பதை அவரது அரசியல் எதிரிகள்கூட மறுக்கமுடியாது. பஸ்வான் தொடங்கிய பாதையில் சிராஜ் பஸ்வான் தனது வெற்றித் தேரை ஓட்டிக்காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)