Skip to main content

"பாமக போராட்டத்தில் வன்முறை... சுய சாதி பெருமை என்பது ஒரு மனநோய்" -ராஜூவ் காந்தி காட்டம்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
h

 

 

20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு சில தினங்களுக்கு முன்பு பட்டாளி மக்கள் கட்சி சார்பாக சென்னையில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த அக்கட்சி தொண்டர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் கோபமான பாமக தொண்டர்கள் ஓடும் ரயில் மீது கல்லெறிந்தார்கள். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக நம்முடைய கேள்வி ஒன்றுக்கு வழக்கறிஞர் ராஜூவ் காந்தி விரிவாக பதில் அளித்துள்ளார். அவரின் பதில் வருமாறு,

 

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி தராத காரணத்தால் போராட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் போனது. இந்த போராட்டத்தில் ரயில் மீது கல்லெறியப்பட்டது. இதுதொடர்பாக நீங்கள் ட்விட்டரில் கடுமையான வார்த்தைகளுடன் கருத்து தெரிவித்திருந்தன. இந்த போராட்டத்தை நீங்கள் தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறீர்களா? 

இடஒதுக்கீட்டிற்கான நோக்கம் சாதி பெருமையை பேசுவதல்ல. இட ஒதுக்கீடு என்பது சாதியை பெருமைபடுத்துவது என்பது அல்ல. அப்படி செய்தால் இட ஒதுக்கீட்டிற்கான நோக்கமே சிதைந்து விடும். பழைய காலம் தொட்டே மக்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினராக பிரித்து இந்த சமூகம் நடந்தால் குற்றம், படித்தால் தவறு, நீர் எடுப்பது குற்றம் என்று பல்வேறு வகையில் குறிப்பிட்டு மனுநீதியின் அடிப்படையில் பிரித்து வைத்திருந்தனர். மனுநீதியை வைத்து ஒரு அநீதி செய்யப்பட்ட இடம்தான் இந்த இந்திய மண். அப்படி இருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட சூத்திரன் என்று சொல்லக்கூடிய பெருவாரியான மக்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களால் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் மறுக்கப்படுவதை பார்த்து ஆங்கிலேயர்கள்தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தனர். பிறப்பால் சாதி பார்க்கப்படுகிறது, இதன் மூலம் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, இதற்கு ஒரு சமூக நீதி வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே சமூகத்தில் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு கொண்டிருந்தவர்களை முன்னோக்கி அழைத்து வரவே இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. 

 

சமூகநீதி குறித்த தெளிந்த பார்வை அனைவருக்கும் வர வேண்டும். சமூக நீதி பார்வையில் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதை தங்கள் கட்சியின் தொண்டர்களிடம் கொண்டு சேர்த்துள்ளாரா என்பதை தெளிவாக பார்க்க வேண்டும். ராமதாஸ்க்கு இருக்கிற புரிதல் அவருடைய அன்பு மகன் அன்புமணிக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஆனால் பெருங்களத்தூரில் நேற்று நடந்த சம்பவம் என்று நமக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சாதாரணமாக பேருந்து மறியல், தொடர்வண்டி மறியல் என்பது ஒரு அடையாளப் போராட்டம். அதில் வன்முறை வருவது என்பது சில நேரங்களில் நடக்கிறது. அதில் அனைவரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் போடுகின்ற கோஷம் என்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அங்கே வந்த இளைஞர் வன்னியருக்கான உரிமை என்பதை தாண்டி வன்னிய சாதி பெருமை என்பதைத்தான் முன் எடுத்தார்கள். கழுத்தில் மஞ்சள் துண்டை கட்டிக்கொண்டு வன்னியருனா யாரு, வன்னியருனா வெயிட்டு என்று சுய சாதி பெருமையை பேசினார்கள். எது எங்கே எதிரொலிக்கிறது என்றால் திருவண்ணாமலையில், விழுப்புரத்தில், கடலூரில் இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களிடம் வன்னியர் பெரியவனா, அல்லது பறையர் பெரியவனா என்ற அளவில் இது நிர்மாணிக்கப்படுகிறது.

 

எந்த சாதியால் தாங்கள் ஒதுக்கப்பட்டு நீங்கள் சத்ரியன், நீங்கள் இதுக்குதான் லாய்க்கு, நீங்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு வரக்கூடாது, எங்கள் சாலையில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் வரக்கூடாது என்று கொடுமைக்குள்ளான நீங்கள், அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் மீண்டும் நீங்கள் எந்த கொடுமையில் இருந்து வெளிவே வந்தீர்களோ அதே போல் மற்றொரு சமூகத்தினரை நடத்த முயல்வது எவ்விதத்தில் சரியாக இருக்கும். இதில் சமூக நதி துளி அளவேனும் இருக்கிறதா?  சாதிய பெருமைக்கான நீதி மட்டுமே இடஒதுக்கீட்டுக்கு தீர்வல்ல. இது ஒரு மனநோய். அனைவருக்கு இடஒதுக்கீடு வேண்டும், அனைத்து சாதியினருக்கும் வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் என் சாதி உயர்ந்தது, உன் சாதி மட்டம் என்று கூறுவது என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

 

 

Next Story

“பல லட்சம் கமிஷன் வாங்கிய சீமான்” - ராஜீவ் காந்தி கண்டனம்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Seaman talks about artist pen memorial; Rajiv condemned

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

 

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாம் தமிழர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். சமூக ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டார். முதலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாக பேசிய சங்கர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

 

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேச ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய சீமான், ''கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிய அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப் பாருங்க.. ஒருநாள் நான் வந்து உடைக்கலன்னா பாருங்க.. யார் கேட்டா பேனா சின்னம்? ஏன், பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள்; நினைவிடம் கட்டி உள்ளீர்களே, அங்கே வையுங்கள் கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. இதனால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' என்று பேசினார்.

 

இது தமிழக அரசியலில் பரபரபை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது கண்டனத்தை தெரித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது, “அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தினை என் உயிரை கொடுத்தாலும் தடுத்து கடல் வளம் காப்பேன் என 2021-ல் பேசிய சீமான் இப்ப ஏன் பேசுவது, போராடுவது இல்லை? பல லட்சம் ரூபாய் கமிசன் வாங்கி கொண்டு அமைதியானார்! வசனம் பேசுவதும், வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல!

 

சீமான் விட்ட முதல் உதார்-வாய்ச்சவடால் என்ன தெரியுமா? சிங்களன் எம் மீனவனை அடித்தால் நான் சிங்கள மாணவனை அடிப்பேன்! - 2008ம் ஆண்டு பேசியது. எத்தனை சிங்களவனை அடிச்சிங்க சீமான். வாய்ச்சவடால், பீலா விடுவதில் சீமான் எப்போதும் king தான்!” எனக் கூறியுள்ளார்.

 

 


 

Next Story

“விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதாலேயே போகச் சொல்லமுடியாது” - நால்வரின் பாஸ்போர்ட் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

"You can't tell them to go just because they have been released" - Minister Raghupathi on the passport issue of the four

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

அதன்படி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் விடுதலை செய்யப்பட்டுள்ள மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து அவர்களை விடுதலை செய்தது. 

 

இந்நிலையில், முருகன் உட்பட 4 பேருக்கு பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் இது குறித்து கூறியதாவது, “முருகன் உட்பட நால்வரும் அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தால் கூட முறையான பாஸ்போர்ட் வாங்கி விட்டு தான் அவர்களை வெளியில் அனுப்ப முடியும். அதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் நிச்சயமாக எடுத்து அவர்களுக்கு உதவி புரிய முடியுமே தவிர, விடுதலை செய்துவிட்டார்கள் என்பதாலேயே உடனடியாக போகச் சொல்ல முடியாது. அதனால் தான் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் வந்ததும் நிச்சயமாக அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் போகாமலேயே இருக்கலாம்” எனக் கூறினார்.