Advertisment

பாஜக முடிவுக்கு ரஜினி சொன்ன நோ... தப்பித்த எடப்பாடி அரசு... தமிழ்நாட்டில் ஜெ.க்கு பிறகு நயன்தாரா தான்!

"சினிமா பிரபலங்களை பா.ஜ.க.வில் இணைக்கும் அசைன்மெண்ட் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படுவதன் முதல் வெளிப்பாடுதான், நமீதா இணைப்பு. இது போதாது என அடுத்த அசைன்மெண்ட் வேகமெடுத்துள்ளது. தமிழகத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் விசிட் அடித்தார் பிரபல நடிகை நயன்தாரா. அதே முருகன் கோவிலுக்கு சென்றிருந்த பா.ஜ.க. பிரமுகரும் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், நயன்தாராவிடம் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.

Advertisment

actress

நயன்தாராவிடம் பேசியது குறித்து நரசிம்மனிடம் நாம் கேட்டபோது... "சினிமா பிரபலங்கள் பலருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. அவர்களை பா.ஜ.க.வில் சேர்க்கும் முயற்சியிலும் நான் இருக்கிறேன். சினிமாவில் புகழ் கிடைக்க வைத்த மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என நயன்தாராவிடம் சொன்னேன்.

Advertisment

"தேசிய அளவில் மக்களின் ஏகோபித்த ஆதரவு பா.ஜ.க.வுக்கும் பிரதமர் மோடிக்கும்தான் இருக்கிறது. அதனால் பா.ஜ.க.வில் இணைந்து நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்' என அவரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. நான் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டதுடன், "அவசியம் உங்களிடம் பேசுகிறேன்' எனவும் தெரிவித்தார் நயன்தாரா. அரசியலுக்கு அவர் வருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என விவரித்தார் நம்மிடம்.

நடிகை நயனை சந்தித்துப் பேசியதை பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பாஸ் செய்திருக்கிறார் நரசிம்மன். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று திரும்பிய இரண்டாவது நாளில், பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமான இளம் நிர்வாகி ஒருவர், நயன்தாராவை தொடர்பு கொண்டு டெல்லிக்கு வருமாறு அழைக்க, "பிரதமர் மோடியை சந்திப்பதாக இருந்தால் வருகிறேன்' என சொல்லியிருக்கிறார் நயன்தாரா.

bjp

தேசிய தலைவர்களுக்கு நெருக்கமான தமிழக பா.ஜ.க.வினரிடம் நாம் பேசியபோது... "தமிழக அரசின் ஆயுள்காலம் 2021 மே மாதம்வரை இருந்தாலும், டெல்லி போட்டுள்ள சில ப்ளான்கள் வொர்க்அவுட் ஆகும் சூழல் வந்தால் தமிழகத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும். நடிகர் ரஜினியை மிகவும் நம்பியிருந்தது எங்கள் தலைமை. பா.ஜ.க.வில் இணையுமாறு பல சந்தர்ப்பங்களில் மோடி, அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் ரஜினியை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ரஜினி இதனை துவக்கத்திலிருந்தே ஏற்கவில்லை.

"அரசியலுக்கு வருவதாக இருந்தால் தனியாகத்தான் வருவேன். தேர்தலை சந்திப்பேன். தேர்தல் முடிவுகள் எனக்கு சாதகமாக இருந்தால், அப்போதைய சூழலில் விவாதிக்கலாம். பா.ஜ.க.வில் இணைவதோ, கூட்டணியோ எதுவும் இல்லை' என தெளிவாகவே கூறிவிட்டார் ரஜினி. பா.ஜ.க.வின் விருப்பத்தை ரஜினி ஏற்காததால்தான் எடப்பாடி அரசு தப்பித்து வருகிறது. பா.ஜ.க.வின் விருப்பத்தை ஏற்று குறைந்தபட்சம் கூட்டணிக்கு ரஜினி சம்மதம் தெரிவித்திருந்தால் கூட, தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வந்திருக்கும். இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து தமிழிசை விடுவிக்கப்பட்டதையடுத்து, வெற்றிடமாக இருக்கும் அந்த பதவியை மையப்படுத்தி மீண்டும் ஒருமுறை ரஜினியிடம் பேசிப் பார்த்தனர். தனது நிலையில் ரஜினி உறுதியாக இருந்ததால், "இனி அவரை பா.ஜ.க.வுக்கு அழைக்க வேண்டாம்' என மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்தனர். பா.ஜ.க.வின் அழைப்பு பட்டியலில் இருந்து ரஜினி பெயரும் நீக்கப்பட்டது. அதேசமயம், மக்களிடம் பிரபலமடைந்த சினிமா வி.ஐ.பி.க்களை கட்சிக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட்டும் கொடுக்கப்பட்ட நிலையில்தான்... தற்போது நயன்தாராவை பா.ஜ.க.விற்கு கொண்டுவரும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது'' என சுட்டிக் காட்டுகிறார்கள்.

rajini

பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரானவற்றை எதிர்கொள்வது குறித்து ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சில வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த க்ளாஸ் முடிந்ததும் தென்னிந்திய அரசியல் குறித்து முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விவாதித்தார் நட்டா. அதில் தமிழக பா.ஜ.க. குறித்தும் விவா திக்கப்பட்டபோது, "தமி ழக அரசியலுக்கும் சினிமா கிளாமருக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. புகழின் உச்சியில் இருக்கும் சினிமா பிரபலங்களை பா.ஜ.க.வில் சேர்ப்பது கட்சிக்கு வலிமை சேர்க்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தை ஈர்க்கும் பெண் பிரபலங்கள் யாரும் தற்போதைய அரசியலில் இல்லை' என சொல்லி, நயன்தாரா பற்றி விவாதித்தனர். இது குறித்து அமித்ஷாவிடம் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார் நட்டா'' என்கிறார்கள்.

இந்த நிலையில், ஷூட்டிங்கிற்காக கன்னியாகுமரிக்கு கடந்த 17-ந் தேதி வந்த நயன்தாரா, சாமி தோப்பிலுள்ள அய்யா வைகுண்டர் ஆலயத்துக்குச் சென்று வணங்கியிருக்கிறார். இந்த ஆலயத்துக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், தேவகௌடா போன்ற அரசியல் தலைவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்துசென்ற பிறகே பிரதமரானார்கள். ஊழல்களால் ஆட்சியை இழந்த ஜெயலலிதா, வைகுண்டர் ஆலயத்துக்கு வந்து சென்ற பிறகே 2001-ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார் என சென்ட்டிமெண்டாகவும் பேசப்படுகிறது ஆன்மிக நம்பிக்கை நிறைந்த பா.ஜ.க. தரப்பில்.

admk eps modi Nayanthara politics rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe