Skip to main content

பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்...   ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக???

 

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து அவர் பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தினர். “நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினி கூறி விட்டார். இப்படி அவர் அளித்த பேட்டியும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தன.

 

rajiniதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும் என கூறியுள்ளார். 
 

அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார் என கூறியுள்ளார். 
 

ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கை தான் காரணம் என்பதை மறக்க கூடாது, எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அரங்கில் கூட எடுபடாது. அவரைப் பற்றி கருத்து சொல்லும்போது ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக சொல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 
 

பாஜக எந்த ரூபத்திலும் தமிழகத்தில் காலுன்ற முடியவில்லை என்பதால் இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கலாம். இரண்டாவது நோக்கம், பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு, மோடி அரசுக்கு எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம், பொருளாதார கீழ்நிலை போன்றவைகளை திசை திருப்புவதற்காக ரஜினியை ஒரு ஆயுதமாக மத்திய அரசு கையாண்டிருக்கலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்வது, 95 ஆண்டு காலம் இந்த தமிழ் இனத்திற்காகவே போராடிய பெரியார் பற்றி பேசுகிறபோது, யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்று கூறினார்.


 

பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 
 

அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.
 

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது என்று குஷ்பூ தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதுபோல் நடிகரும், டைரக்டருமான பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

நடிகர் ரோபோ சங்கர், “தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

எந்த விதத்திலும் ரஜினிகாந்த்தை காயப்படுத்த முடியாது. அவரை சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 

ரஜினியின் பேச்சுக்கு இப்படி பிரபலங்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் விதமாக பேசியதாக ரஜினிகாந்த் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்திருந்தார். 
 

அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்குமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 

இதேபோல் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை நகர தலைவர் நேருதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ரஜினிக்கு எதிராக கோவை காட்டுர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். 
 

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் அதன் நிர்வாகிகள் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சத்தியமங்கலம் காவல்நிலையத்திலும், கோபி காவல்நிலையம், அம்மாபேட்டை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

இந்த நிலையில் ஒரு மாற்றத்துக்காக நான் இம்முறை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தரத் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ரஜினியின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது... அதேபோல அவருக்கு வேண்டிய ஒரு சிலர் ஆதரவும் அளித்துள்ளனர். மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாரா? வருத்தம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்