Advertisment

கட்சி பெயரில் கழகம் இல்லை...பாஜக வேண்டாம்...ரஜினியின் அதிரடி அரசியல் திட்டம்! 

"தர்பார்" படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடர்ச்சியாக முப்பது நாட்கள் நடந்து முடிந்த பின், சென்னை திரும்பினார் ரஜினி. பொதுவாக எந்தப் படத் தின் ஷூட்டிங்கும் தொடர்ச்சியாக நடந்தால், இடையில் சின்ன ரிலாக்ஸுக்காக சென்னை வருவார் ரஜினி. அப்படி ரிலாக்ஸுக்காக "தர்பார்" பட ஷூட்டிங்கிலிருந்து வந்தபோதுதான் ஆக. 11-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்; பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கிருஷ்ணர், அர்ஜுனர் என்றார். காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ஆஹா ஓஹோ வென புகழ்ந்தார்.

Advertisment

rajini

ஆக. 14-ஆம் தேதி கதை, வசனகர்த்தா கலைஞானத்திற்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட ரஜினி, மறுநாள் "தர்பார்'’படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஒருமாதம் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு விட்டு, சின்ன ரிலாக்ஸுக்காக சென்னை திரும்பி, வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போதுதான் அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சால் நாடே கொந்தளிப்பில் இருந்தது. அதிலும் தமிழ்நாட்டில் அதிகமாகவே அனல் அடித்தது.

Advertisment

rajini

மீண்டும் "தர்பார்' ஷூட்டிங்கிற்காக கடந்த 18-ஆம் தேதி மும்பை செல்வதற்காக, ரஜினி சென்னை ஏர்போர்ட் வந்திறங்கியதும், மீடியாக்கள் மைக்கை நீட்டின. "எந்த நாட்டுக்குமே பொதுவான ஒரு மொழி இருப்பது வளர்ச்சிக்கு நல்லது, ஆனா துரதிர்ஷ்டம் இந்தியாவில் அது முடியாமல் போச்சு. அதேநேரம் இந்தியைத் திணிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்''’என ஒரு தினுசாக பதில் சொன்னார் ரஜினி. ""தலைவர் என்ன சொல்ல வர்றாரு, காஷ்மீர் விவகாரத்துல பி.ஜே.பி. ஆள் மாதிரியே பேசுறாரு. இந்தி விஷயத்துல ரெண்டு பக்கமும் பேசுறாரு''’என ரஜினி மக்கள் மன்றத்தினரே குழம்பினார்கள். தனது போயஸ் கார்டன் வீட்டில் ஓய்விலிருந்த சில நாட்களில், தனது நம்பிக்கை வட்டத்துடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ரஜினி. அதன்பின், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திட்டம் வகுத்துத் தரும் ஐ-பேக் சி.இ.ஓ.வான பிரசாந்த் கிஷோருடன் மும்பையில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதுதான் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தினரிடையேயும் தமிழக அரசியல் களத்திலும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

"ரஜினி ஏரியாவுக்குள் என்னதான் நடக்கிறது?' என ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள், ரஜினிக்கு நெருக்கமான ஆலோசகர்கள் வட்டாரம் என பல திசைகளிலும் விசாரணையில் இறங்கினோம். முதலில் ர.ம.ம.வின் கொங்கு மண்டல மா.செ. ஒருவர் நம்மிடம் பேசினார். "கிருஷ்ணர், அர்ஜுனர்... இந்தி இருந்தா நல்லது, ஆனா திணிக்கக் கூடாதுன்னு எங்க தலைவர் பேசுறதப் பார்த்தா குழப்பமாத்தான் இருக்கும். ஆனா அவர் ரொம்ப தெளிவா இருக்கார். இன்னொரு விதமா சொல்லணும்னா அவர் ஜெயலலிதா மாதிரி. உதாரணத்துக்கு, ராமர் கோயில் கட்டுவதற்கு செங்கல்லும் அனுப்புவார், பி.ஜே.பி.யின் சீனியர் லீடர் அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியான்னும் சொல்வார். சொத்துக் குவிப்பு வழக்கு ஸ்ட்ராங்கா போய்க்கிட்டிருக்குன்னு தெரிஞ்சதும் பி.ஜே.பி. யிடம் பம்மினார். தனக்கு இந்துத்வா முகம் இருப்பதையும் காட்டிக்குவார், சிறுபான்மையினரிடம் மன்னிப்பும் கேட்டுக்குவார்.

அதே மாதிரிதான் எங்க தலைவரும். இப்போது அவருக்கு இருக்கும் சிலபல காரணங்களால் தான் பி.ஜே.பி. வாய்ஸ் கொடுக்கிறார். தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஸ்டேட்டஜி அரசியல் பண்ணினால் என்ன ரிசல்ட் வரும்னு அவருக்கும் தெரியும். அதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் வரைக்கும் இதே டிராக்லதான் போவார்''’என்கிறார். தென்மாவட்ட நிர்வாகி ஒருவரோ, "பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துத்தான் அரசியல் பண்ணணும்னா, அதுக்கு நான் கட்சி ஆரம்பிக்காமலேயே இருந்துருவேன். அதனால ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. என்னை நம்பி இத்தனை வருஷமா இருக்கும் ரசிகர்களைக் கைவிட மாட்டேன் என்பதிலும் உறுதியா இருக்கும் தலைவர் 234 தொகுதிகளிலும் ஆபீஸ் திறக்கச் சொல்லியிருக்கார்''’என உற்சாகமுடன் பேசினார்.

ரஜினியின் ஆலோசனை வட்டத்தில் உள்ள சிலரிடம் பேசியபோது, "என்னதான் சொல்றாருன்னு தெரிஞ்சிக்கத்தான் பிரசாந்த் கிஷோரை தலைவர் சந்தித்தாரே தவிர, வேறொன்றும் இல்லை. காற்று எந்தப் பக்கம் அடிக்குதுன்னு தெரிஞ்சு அந்தப் பக்கம் ஒதுங்குவது பிரசாந்த் கிஷோரின் பழக்கம். வருகிற அக்டோபர் 28-ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடக்குது. தலைவரின் மகர ராசி, திருவோண நட்சத்திரப்படி, அவரின் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்.

அதைவிட விசேஷமான நாள் என்னன்னா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாள்தான் தலைவரின் இஷ்ட சாமியான பாபாஜியின் பிறந்த நாள். இந்த வருஷம் பாபாஜியின் பிறந்த நாள் டிச. 11-ஆம் தேதி வருகிறது. அதற்கடுத்து தலைவரை பாபாஜி குகைக்கு அழைத்துச் செல்லும் ஹரியின் மகன் திருமணத்தை பெங்களூருவில் டிசம்பர் 15-ல் நடத்திவைக்கிறார் தலைவர். இப்படி எல்லா சுபநாட்களும் கூடிவருவதால், டிச. 12-ஆம் தேதி தலைவரின் பிறந்தநாளில் நல்லசேதி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அதேசமயம் கட்சிப் பெயரில் கண்டிப்பாக கழகம் கிடையாது. பாரதம், தேசியம் என்ற அர்த்தத்தில் தான் இருக்கும்''’என்கிறார்கள். ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

Announcement politics politics entry rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe