Skip to main content

தலைமைகளுக்கு சங்கடத்தை உருவாக்கிய ரஜினியின் அறிவிப்பு: பொங்கலூர் மணிகண்டன்! 

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

pongalur manikandan

 

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் 'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' எனப் பதிவிட்டுள்ளது பற்றி அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், இரண்டு ஆட்சிகளையும் பார்த்த பொதுமக்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு உற்சாகமாக இருக்கிறது. இதனை அறிவிக்கும்போது ரஜினிக்கே ஒரு மிகப்பெரிய சந்தோஷம் தெரிகிறது. பா.ம.க போராட்டம், புயல் அறிவிப்புகள், டெல்லி போராட்டம் எல்லாமே காணாமல் போய்விட்டது. 

 

திமுகவில் வாரிசு அரசியல், அதிமுக அரசில் நடக்கக் கூடிய தவறுகள், இந்த இரண்டையுமே தடுக்கவும், கேள்வி கேட்கவும் புதிதாக ஒருவர் வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சியும் தமிழக மக்களுக்கு வருகிறது. எந்தக் கட்சியிலும் இல்லாத பொதுவாக்குகள் வரும் சட்டமன்றத் தேர்தலில், யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கப் போகிறது. அந்த வாக்குகள் நிச்சயமாக ரஜினிக்கு வரும். அதுவே மிகப்பெரிய பலம். மேலும் இன்னொன்று அவர் செய்ய வேண்டும். யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவித்தால் கூடுதல் பலமாக இருக்கும். ஏனென்றால் மு.க.அழகிரி வரவேற்றுள்ளார். இதேபோல் பலரும் வரவேற்றுள்ளனர். 

 

ddd

 

நீங்கள் சொன்னதுபோலவே பா.ம.க போராட்டம், புயல் அறிவிப்புகள், டெல்லி விவசாயிகள் போராட்டம் எல்லாமே ரஜினி அறிவிப்புக்குப் பின்னர் காணாமல் போய்விட்டது. மத்திய அரசுக்கு எதிரான விஷயங்களை திசை திருப்பவே, 'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என ரஜினி திடீரென்று இதுபோன்று அறிவிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுகிறதே?

 

அது உண்மை இல்லை. இந்த அறிவிப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்னர்தான் முழு மனதுடன் ரஜினி அறிவிக்கிறார். ரஜினி தொடங்கும் கட்சிக்கு பாஜகவின் சாயல் இருந்தால், தமிழக மக்கள் வெறுப்பார்கள். பாஜகவின் சாயல் நூறு சதவிகிதம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர் எடுக்கும் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். 

 

cnc


வரும் சட்டமன்றத் தேர்தலில் கமல் - ரஜினி கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?

 

கூட்டணி வைத்தால் நல்லது. கண்டிப்பாக அதற்கான வாய்ப்பு உள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பு, தி.மு.க தலைமைக்கும், அ.தி.மு.க தலைமைக்கும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு கட்சிகளின் தலைமைகளும் கூட்டணிக் கட்சிகளை மிரட்டி வைக்கலாம் என நினைத்தார்கள். ஆனால், இப்போது ரஜினி அறிவிப்புக்குப் பிறகு கூட்டணியில் உள்ள கட்சிகள், கூடுதல் இடங்கள் கேட்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியில்லையென்றால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து ரஜினியை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. திமுகவோ, அதிமுகவோ தனித்து ஆட்சி அமைக்க நூறு சதவிகிதம் வாய்ப்பு இல்லை. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!