Skip to main content

ராஜேஷ்தாஸ் என்னென்ன செய்தார்? - அதிரவைக்கும் எஃப்.ஐ.ஆர்.

 

ddd

 

பெண் எஸ்.பி. தந்த பாலியல் தொந்தரவு புகார் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர். விவரம்:

 

21-02-21 அன்று, 9 மணியளவில் மதிப்புக்குரிய முதல்வரின் கரூர் வருகைக்காக பந்தோ பஸ்து பணிக்காகச் சென்றிருந்தேன். நான் லைட் ஹவுஸ் முனையில் இருந்தேன், அங்கே முதல்வரின் கான்வாய் 17.30 மணிக்கு வந்தடைந்தது.

 

முதல்வரின் உரை நிகழ்ந்துகொண்டிருந்தபோது, சிறப்பு டி.ஜி.பி. என்னிடம், இந்த நிகழ்வுக்குப் பின், அடுத்த கூட்டம் நிகழும் இடத்துக்கு நான் அவருடன் வரவேண்டியிருக்கும். அதன்பின் அவர் என்னை பெரம்பலூரில் விட்டு, மறுநாள் அடுத்த கூட்டம் நடக்கும் உளுந்தூர்பேட்டைக்குச் செல்வேன் எனக் கூறியிருந்தார்.

 

லைட் ஹவுஸ் முனையில் கூட்டம் முடிந்ததும், தோராயமாக 18.30 மணியளவில் திருச்சி ரேஞ்ச் டி.ஐ.ஜி. திருமதி அன்னி விஜயாவுக்கு தகவல் தெரி வித்துவிட்டு, தன் வண்டியில் சென்ற சிறப்பு டி.ஜி.பி.யை தொடர்ந்துசென்றேன்.

 

நாங்கள் அடுத்த கூட்டம் நிகழுமிடமான தண்ணீர் பந்தல்பாளையத்தின் விவசாய மாநாடு நடக்கும் இடத்துக்குச் சென்று முதல்வரின் கான்வாய்க்காகக் காத்திருந்தோம். முதல்வரின் கூட்டம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குப்பின் 19.20-க்குக் கிளம்பி நானும் டி.ஜி.பி.யும் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நான் எனது பி.எஸ்.ஓ. சந்திர சேகரை அழைத்து, எனது வாகனம் சிறப்பு டிஜி.பி.யின் வாகனத்தைத் தொடரும்படி கேட்டுக்கொண்டேன்.

 

உத்தரவைத் தவறாகப் புரிந்து கொண்டு அவர் நாமக்கல் நோக்கிப் போய்விட்டார். நாங்கள் நாமக்கல்லின் பரமத்திவேலூர் கூட்டம் நடக்குமிடத்தை அடைந்திருந்தோம். அங்கே சேலம் பகுதியின் டி.ஐ.ஜி. திரு. பிரதாப்குமார், நாமக்கல் எஸ்.பி. திரு. சக்தி கணேசன் ஆகியோர் இருந்தனர். சிறப்பு டி.ஜி.பி. காரிலிருந்தபடியே இரு அதிகாரிகளிடமும் பேசிவிட்டு உளுந்தூர் பேட்டை நோக்கி 19.40-க்குக் கிளம்பினோம். வழியில் சிறப்பு டிஜி.பி. எனக்கு காரில் வைத்திருந்த ஸ்நாக்ஸ் தந்ததோடு, 'ஹெட் ரெஸ்ட்'டுக்கான தலையணையும் தந்தார். பின் என்னை ஒரு பாடல் பாடச்சொன்னார். நான் தயங்கியபோது விடாது வலியுறுத்தினார். நான் ஒரு பாடல் பாடினேன். அப்போது, அவர் தனது வலக்கரத்தை நீட்டி, எனது கையை நீட்டச் சொன்னார். எனது பாடலை பாராட்ட விரும்புகிறார் என எண்ணி என் வலக்கையை நீட்ட, அவர் அதைப்பிடித்த விதம் வித்தியாசமாகவும் விரும்பத்தகாத வகையிலும் இருந்தது. அத்தோடு அவர் எனது இன்னொரு கையையும் நீட்டச் சொன்னார். நான் இடக்கையை நீட்ட, அவர் அதைப் பற்றிக்கொண்டு அவரது வலக்கையை அதன் மீது வைத்தார். சில நிமிடங்களுக்குப் பின், அவர் தனது கைவிரல்களை என் விரல்களோடு கோர்த்து, கண்களை மூடியபடி பாட ஆரம்பித்தார். இது 20 நிமிடங்rrகளுக்கு நீடித்தது.

 

அதன்பின், என்னிடம் எனக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்டார். அதேசமயம், ஓட்டுநரை ரியர்வ்யூ மிரரை மேல்நோக்கி உயர்த்துமாறு சொன்னார். கொஞ்ச நேரத்துக்குப்பின், என் கையை உயர்த்தி அதன் பின்புறத்தில் முத்தமிட்டார். அப்போது நான் என் கையை விலக்கிக்கொண்டு, எனது விருப்பமின்மையைக் குறிப்பிட்டேன். அவர் புன்னகைத்தபடி என் கைகளை விட்டார். சில நிமிடங்களுக்குப் பின் அவர் திரும்பவும் தன் கைகளை நீட்டி எனது கைகளை நீட்டும்படி கேட்க, அதில் எனக்கு விருப்பமில்லை, அது சரியானதும் இல்லையெனக் குறிப்பிட்டேன்.

 

அதற்கு அவர், சும்மா ஐந்து நிமிடம் மட்டும் என்றபடி என் கைகளை எடுத்துக்கொண்டார். இந்நிலையில், டென்ஷன் மற்றும் கவலையால் என் உள்ளங்கையில் வியர்வை உருவாக, இதைக் கவனித்து வியர்வையைத் துடைக்க தனது டவலைக் கொடுத்தார். அவர் பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேச, நான் உண்மையிலே அசௌகரியமாகி, அவர் சொல்வது அனைத்துக்கும் ஆம் இல்லையென மட்டும் பதில்சொல்லத் தொடங்கினேன். அவர், முந்தைய பெரம்பலூர் வருகையின்போது எடுத்த எனது புகைப்படமொன்றைக் காட்டி, அதை அவரது மொபைலில் ஃபேவரைட் புகைப்படங்களில் சேமித்து, எளிதாகப் பார்க்கும்படி வைத்திருப்பதாகச் சொன்னார். மேலும் இந்தப் பயணம் அவரது மறக்கமுடியாத பயணங்களில் ஒன்று எனவும், சிறப்பான கம்பெனி தந்ததற்கு நன்றி எனவும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். தானே பேசிக்கொண்டிருப்பதாகவும், என்னை பேசும்படியும் வலியுறுத்த நான் வழக்கமான போலீஸ் விஷயங்கள், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு, மதுவுக்கு அடிமையான போலீஸ் அதிகாரிகளுக்கான புத்துணர்வு முகாம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்தேன்.

 

உளுந்தூர்பேட்டையை நெருங்குகையில், அவர் தனது கையை நீட்டி எனது கையைத் தரும்படி கேட்டார். திரும்பவும் நான் மறுக்க அவர் என் கையை தன் கைகளில் மறுபடியும் எடுத்துக்கொண்டார். உளுந்தூர்பேட்டையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாவுல் ஹக் நின்றுகொண்டிருக்க, எனது கையை விட்டுவிட்டார். எனது வண்டி அவ்வளவு நேரமும் அந்த இடத்தை வந்தடையவில்லை. நான் அங்கிருந்த அதிகாரிகளுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, சிறப்பு டி.ஜி.பி. தனது காரை எடுத்துக்கொண்டு போகச்சொல்லியும் அதனைத் தவிர்த்துவிட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. காரில் ஏறிக்கொண்டேன். பின் அவ்விடத்தைவிட்டு விலகி ஈ.கோட்டையில் எனது வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.

 

cnc

 

மறுநாள் காலை (22-02-2021) மேற்சொன்ன புகாரின் வரைவை எழுதிக்கொண்டு, எனது ஐ.ஜி.யான மத்திய மண்டல அதிகாரி ஜெயராமிடம், "இந்தப் பிரச்சனை குறித்து டி.ஜி.பி.யிடம் புகார் தர சென்னை சென்றுகொண்டிருக்கிறேன்' எனத் தகவல் தெரிவித்துவிட்டு வந்தேன்.

 

நான் 11 மணியளவில் கிளம்ப, வழியில் சிறப்பு டி.ஜி.பி. தொடர்ந்து என்னை அழைத்துக் கொண்டேயிருந்தார். நான் அழைப்பை எடுக்காததால் வாட்ஸ் அப்பில்... “தயவுசெய்து எனக்கு போன் செய்’’ எனத் தகவல் கொடுத்திருந்தார். இதற்கிடையில் திருப்பூர் எஸ்.பி. திஷா மிட்டல், கள்ளக் குறிச்சி எஸ்.பி. ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி. ஸ்ரீ அபினவ் ஆகியோரிடம், "எனக்குத் தொந்தரவளித்துவிட்டு சென்னையில் யாரையோ சந்திக்கப் போய்க்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அவளை நிறுத்துங்கள்’’ எனக் கூறியிருக்கிறார். நான் செங்கல்பட்டு பரணூர் டோல்கேட்டை நெருங்கும்போது செங்கல்பட்டு எஸ்.பி. டி.கண்ணன், செங்கல்பட்டின் ரூரல் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், 10-15 காவலர்களுடன் எனது அலுவலகப் பயன்பாட்டு காரை மறித்தனர். எனது வாகனம் முன்னேறிச் செல்லாதவாறு ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் வாகனத்தைக் கொண்டுவந்து நிறுத்தினர். கண்ணன், "சிறப்பு டி.ஜி.பி. எனது காரை தடுத்து நிறுத்துமாறு' கூறியதாகக் கூறினார். நான் கேட்டுக் கொண்டபோதும் என்னைப் போக அனுமதிக்க வில்லை. பின் "சிறப்பு டிஜி.பி. லைனில் இருப்பதாக வும் பேசும்படியும்' கண்ணன் கூறினார். பேசாமல் என்னை அனுமதிக்காததுபோல் தெரிந்ததால், ஐந்து நிமிடத்துக்குப் பின் செல்ஃபோனை வாங்கினேன். எதிர்முனையில் சிறப்பு டி.ஜி.பி. "நான் நடந்துக்கிட்ட விதத்துக்காக உன் கால்ல வேணா விழறேன்'' என்றார்.

 

நான் டி.ஜி.பியைச் சந்திக்க விரும்புகிறேன். எனவே கண்ணனை எனக்கு வழிவிடுமாறு கூறும்படிச் சிறப்பி டிஜி.பி.யிடம் சொன்னேன். நான் அவரிடம் பேச விரும்பவில்லை என வலியுறுத்திச் சொல்லியும், “நான் உனது நலம்விரும்பி, நண்பன். நான் பின்னாலே வந்துகொண்டிருக்கிறேன். நான் அங்குவந்ததும் பேசிக்கொள்ளலாம்'’என்றார். நான் அவருடன் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை என்றபோதும் திரும்பத் திரும்ப அதே விஷயங்களைக் கூறினார். என்னைப் போக அனுமதிக்கும்படி கூறினேன். சில எஸ்.பி.களிடமாவது பேசும்படி கேட்க, அதில் அர்த்தமில்லை என்பதால் நான் மறுத்தேன். பின் நான் ஃபோனை எஸ்.பி. கண்ணனிடம் கொடுத்தேன். சிறப்பு எஸ்.பி. கூறியபிறகே என்னைப் போக அனுமதித்தார்கள்...'' என நீள்கிறது அந்த எஃப்.ஐ.ஆர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !