Advertisment

ராஜேஷ்தாஸ் லீலைகள்! அம்பலப்படுத்தும் அதிகாரிகள் வாட்ஸ் ஆப்! - இ.பி.எஸ். டோட்டல் அப்செட்!

ddd

Advertisment

‘விக்ரம் வேதா’ படத்தில், "நான் ஒரு கதை சொல்லட்டுமா சார்'’ என காவல் துறையில் நடக்கும் குளறுபடிகளை மாதவனுக்கு விஜய்சேதுபதி மெல்ல மெல்ல புரியவைப்பார். தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பாலியல் குற்றச்சாட்டு விவகாரமும் அப்படித்தான் இருக்கிறது.

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் இணைந்துள்ள டி.என்.ஐ.பி. எஸ்.ஏ. வாட்ஸ்அப் குழுவில், எரிந்த கட்சி - எரியாத கட்சி போல, கச்சைக்கட்டி விதவித தகவல்கள் வெளியாகின்றன. இந்த வாட்ஸப் குழுவின் அட்மின் தனக்கெதிரான, தவறான, பெயரைக் கெடுக்கும் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டும் என ராஜேஷ்தாஸே கொந்தளிக்குமளவுக்கு விஷயம் போயுள்ளது.

6 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதியின் அறைக்கு நேரெதிர் அறையில் தனது பணியைத் துவக்கினார். கடந்த சில மாதங்களாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆய்வுக்கூட்டம், தேர்தல் பரப்புரைக்காக சென்றுகொண்டிருப்பதால் அவர் செல்லுமிடங்களை முன்கூட்டியே ஆய்வுசெய்யும் பணி ராஜேஷ்தாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

Advertisment

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் வந்திருந்தார் ராஜேஷ்தாஸ். அப்போது, குறிப்பிட்ட மாவட்ட எல்லையில் தன்னை வரவேற்ற பெண் எஸ்.பி.யைத் தன்னோடு அவர் அழைத்துச் செல்லவே, இருவரும் ஒருவரோடு ஒருவர் மனரீதியாக ஐக்கியமாகி, பிறகு கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் வரை நெருக்கம் நீடித்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதியன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு முதல்வர் வருகை தந்தபோதும், தனது மாவட்ட எல்லையில் இவரை வரவேற்ற பெண் எஸ்.பி.யை சென்னைக்குத் திரும்பிச் செல்லும்போது கள்ளக்குறிச்சியில் இறக்கிவிட்டிருக்கிறார் ராஜேஷ்தாஸ்.

அப்போது, அந்த பெண் எஸ்.பி.யை அழைத்துச் செல்வதற்காக அவருடைய வாகனமும் அந்த இடத்தில் காத்திருந்த நிலையில், அம்மாவட்டத்தின் சார்பாக இவரை வரவேற்பதற்காக எஸ்.பி. ஜியாவுல் ஹக், வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் ஆகியோரும் அங்கே நின்றிருக்கிறார்கள். அதிகாலை நேரத்தில் ராஜேஷ் தாஸுடன் பெண் எஸ்.பி.யும் வந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரின் முகமும் வெளிறிவிட்டதாம். இந்த விஷயம் மேலிடத்திற்குச் செல்லவே, ரகசியமாக விசாரித்து வந்திருக்கிறார்கள் உளவுத்துறையினர். இதுபற்றி குறிப்பிட்ட அந்த எஸ்.பி.யிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

'இந்த நிலையில்தான் பெண் எஸ்.பி., தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராஜேஷ்தாஸ் மீது புகாரளித்திருக்கிறார். இது ஒருதரப்பு அதிகாரிகளின் வாட்ஸ்ஆப் கதையாடல். இதற்கு நேர் எதிராக, ராஜேஷ்தாஸின் பழைய கதைகளைக் கிளறி, திருச்சி, தூத்துக்குடி என தமிழகத்தின் பல இடங்களிலும் அவர் பணியில் இருந்தபோது மேற்கொண்ட லீலைகளை அம்பலடுத்தியிருந்தது இன்னொரு தரப்பு அதிகாரிகள் டீம். பெண் எஸ்.பி.யின் மாவட்டத்தில் தீவிர தொடர் கொள்ளை, மாவட்ட தலைநகரிலேயே கொள்ளைகள் எனப் பெருகிய நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்த கேள்வி எழுந்தது.

அத்துடன் அ.தி.மு.க. வி.ஐ.பிகளின் சிபாரிசுகளுக்குப் பெண் எஸ்.பி. மதிப்பளிப்பதில்லை என்று ஆளுந்தரப்பு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான அந்த வி.ஐ.பி.யிடம் புகார் தெரிவித்தனர் அ.தி.மு.கவினர். இது மேலிடம் வரை செல்ல, எஸ்.பி.க்குப் பணிமாறுதல் வரப்போவதாக காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

அந்தப் பட்டியலில் எஸ்.பி.யின் பெயரும் இடம்பெற்று இருந்துள்ளதாம். இந்தச் செய்தி எஸ்.பி.க்குத் தெரியவர, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மூலம் தனது பணி மாறுதலைத் தடுத்து நிறுத்திவிட்டார். இதன் பிறகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் விசிட் வந்தபோது பாதுகாப்புக்கு வந்த டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் எஸ்.பி.யை சந்தித்துப் பேசியுள்ளார்.

ddd

கரூர் விசிட் முடிந்து சென்னை திரும்பும்போது, டி.ஜி.பி. காரில் ஒன்றாக எஸ்.பி. பயணம் செய்துள்ளார். அந்தக் காரை பின்தொடர்ந்து எஸ்.பி.யின் காரும் சென்றுள்ளது. அப்போது, ராஜேஷ்தாஸ் தன்னுடைய காருக்கு எஸ்.பி.யை அழைத்துள்ளார். உயரதிகாரி மற்றும் பணி மாறுதலைத் தடுக்க உதவியவர் என்ற மரியாதையில் எஸ்.பி.யும் காரில் ஏற, கூடுதல் டி.ஜி.பி. சில்மிஷமாக நடக்க, அடுத்த மாவட்ட எல்லையில் வரவேற்க நின்ற உயரதிகாரிகளைப் பார்த்ததுடன், பதறியடித்து இறங்கிய பெண் எஸ்.பி.யின் நிலையை அங்கிருந்த அதிகாரிகள் உணர்ந்துகொண்டனர். பெண் எஸ்.பி.யை அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என காவல் உயரதிகாரிகளின் வாட்ஸ்-அப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க எஸ்.பி.யை சென்னைக்கு வரவிடாமல் தடுத்த எஸ்.பி. கண்ணனுக்கு தமிழக அரசு அளித்த சிறந்த காவலருக்கான பதக்கத்தைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

மொத்தத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், தன்கீழ் வரும் காவல் துறையிலேயே இத்தனை சர்ச்சையா… என எடப்பாடி பழனிசாமி டோட்டல் அப்செட்டாக, முதல்வரின் கீழ் உள்ள காவல்துறையில் பெண் எஸ்.பிக்கே பாதுகாப்பில்லை என கனிமொழி தலைமையில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது தி.மு.க.

- எஸ்.பி.எஸ்., மகேஷ்

police officers eps ips Rajesh das
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe