'Races that take lives...' - The right solution suggested by the common man Photograph: (chennai)
2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளில் இரு சக்கர விபத்துகள் மட்டும் தோராயமாக 45% என்கின்றன புள்ளிவிவரங்கள். 2022 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 11,140 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ரைடர்களே என்றும் கூறப்படுகிறது. பைக் பந்தயத்தால் ஏற்பட்ட இறப்பு விகிதம் என எதுவும் குறிப்பாக இல்லை எனினும் ஆய்வுகளின் தரவுகளில், இருசக்கர வாகன விபத்துக்களால் ஏற்பட்ட இறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பவை அதிக வேகமும் ஹெல்மெட் பயன்பாடு இல்லாதது போன்ற காரணிகள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
கதிகலங்கும் சில நிகழ்வுகளுக்கு பிறகுதான் புள்ளி விவரங்களை தேட ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் தமிழக தலைநகரில் தலைதூக்கி நிற்பதாக தீர்மானிக்க வைக்கிறது தொடர் பைக் ரேஸ் சம்பவங்களும் அதனால் ஏற்படும் இறப்புகளும்.
நேற்று இரவு சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள பீட்டர்ஸ் மேம்பாலத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் சுகைல்(19) மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த குமரன் என்ற நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாணவன் சுகைல் உடன் ரேஸில் ஈடுபட்ட சோயல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கத்தில் மாஸ் கட்டுவதற்காக பைக்கை ரேஸ் விட்டு அதை வீடியோவாக பதிவிட்டு இருப்பது தெரிய வந்தது. இருவர் மட்டும் தான் ரேஸில் ஈடுபட்டனரா அல்லது பலர் சேர்ந்து ஈடுபட்டனரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதிலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இன்னைக்கு நேற்று நடக்கவில்லை இந்த ரேஸ். நான் வண்டியில வரும்போது தீபாவளி டைம்ல பார்த்திருக்கிறேன். ரோட்டில் நின்று அந்த பாலத்தின் மீது நின்று பைக்கில் சென்றபடியே பட்டாசு வெடித்துக் கொண்டு போகிறார்கள். இதையெல்லாம் யார் கேட்பார்கள். இதில் இறந்த குமரன் நகைக்கடை வைத்திருக்கிறார். பிசினஸ் பண்றார். அவருக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் கிடையாது. வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு ஏர்போர்ட் போவதற்காக வீட்டில் இருந்து ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கொண்டு தான் போனார். போகும்போது ஏர்போர்ட் போய்க் கொண்டிருக்கிறேன் என எனக்கு இன்பார்ம் பண்ணார் . ராயப்பேட்டையில் இப்பொழுது மட்டும் கிடையாது இங்கு நிறைய பேர் ரேஸ் ஓட்டுகிறார்கள்.
அவர் என்னிடம் சொல்லுவார் தம்பி இந்த ரோட்டில் வரும்போது பார்த்து வா ரேஸ் ஓட்டுகிறார்கள் என்று. இப்போது ரேஸ் ஓட்டியவர்களால் அவரின் உயிர் போய்விட்டது. தமிழ்நாட்டில் என்ன நடக்குது என்று தெரியவில்லை. ரொம்ப சின்ன சின்ன பசங்க எல்லாம் இப்படி பண்ணுகிறார்கள். இதற்கு முடிவு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். இனிமேலும் உயிர்கள் போகக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் பேரிகார்டு போடுவது அதன்பிறகு விட்டுவிடுவது. பாலத்தில் சிசிடிவி கேமரா செட் பண்ணலாம். எதுவுமே செய்ய மாட்டேன் என்கிறார்கள். இன்னும் எத்தனை உயிர்தான் போகும். நைட் டைமில் அநியாயம் பண்ணுகிறார்கள். போலீஸ் எல்லாம் என்னதான் பண்ணுகிறது'' என ஆத்தங்த்தை கொட்டி தீர்த்தார்.
இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவர் பேசுகையில், ''இதுகுறித்து பலமுறை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளோம். ரேஸில் ஈடுபடும் பைக்குகளில் முக்காவாசி பைக்குகளில் நம்பர் பிளேட் கிடையாது. குறிப்பாக மிக அதிவேகமாக ஓட்டும் டியூக், யமஹா rx15 பைக்கில் பின்னாடி நம்பர் பிளேட் சுத்தமாக இருப்பதில்லை. பைன் போடுவது தீர்வு கிடையாது. அதிவேகமாக பைக் ஓட்டும் வாலிபர்களை பிடித்து சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் 15 நாட்கள் தன்னார்வலராக பணி புரிந்தால் தான் ஜாமீன் என்று கொடுத்தால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்றார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவ்வளவு பரபரப்புகளுக்கு மத்தியில் பத்தாயிரம், இருபதாயிரம் என பெட் வைத்து நடக்கும் ஆட்டோ ரேஸ் ஒருபுறம் கலக்கத்தை கொடுத்திருக்கிறது. சென்னை மதுரவாயல் சாலையில் போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ஆட்டோக்கள் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை இந்த ரேஸ்கள் நடத்தப்படுவதாகவும், காவல்துறை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
ரேஸ் மாந்தர்களால் ஏற்படும் இந்த தொடர் சம்பவங்கள் தலைநகரில் ஒருவித கலக்கத்தை கொடுத்திருக்கிறது.
Follow Us