'Rabies in Tamil Nadu' - Report that rings alarm bells Photograph: (dog)
நாட்டையே பெரும்பாடு படுத்தி வருகிறது நாய்க்கடி சம்பவங்களும் ஆதனால் ஏற்படும் உயிரிழப்புகளும். தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது. மறுபுறம் தெருநாய்களை அகற்றுவது என்ற போர்வையில் அவற்றை அவதியுற வைக்கக்கூடாது என விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தெருநாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நாய் கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்று காரணமாக பலர் உயிரிழந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மிக அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள பழவூர் சிதம்பரபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 31) என்பவர் தெருநாய் கடித்தும் சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்த நிலையில் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நிகழும் நாய்க்கடி சம்பவங்களால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை தற்போது தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதித்துள்ளதாகவும் ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் 4.8 லட்சம் பேர் நாய்கடியால் பாதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 43 பேர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நகரப்புற மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளது. ரேபிஸ் நோயால் பாதிப்படைந்தவர்கள் ஏஆர்வி என்று சொல்லக்கூடிய தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல நாய் கடிப்பது மட்டுமின்றி நகத்தில் கிழித்தாலோ அல்லது நாய் மூலம் ஏதேனும் சிறிய காயங்கள் ஏற்பட்டாலோ ஆர்ஐ என்று சொல்லக்கூடிய ரேபிஸ் இமோனி குளோபின் என்ற மூன்றாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்வது நல்லது.
நாய்கால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நான்கு டோஸ் செலுத்தக்கூடிய ஏஆர்வி தடுப்பூசியை அட்டவணைப்படி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். சிலர் செல்லப் பிராணிகள் அல்லது பழக்கமான நாய்கள் கடித்தால் பாதிப்பில்லை என்று கருதி தடுப்பூசி போடுவதை தவிர்த்தால் அது ஆபத்தில் சென்று முடிந்துவிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே கடித்தது செல்லப் பிராணியா அல்லது தெரு நாய்களா என்பதைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசியை போடுவது மிகவும் அவசியம்.
தமிழகத்தில் எந்த பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகமாக இருக்கிறதோ நகராட்சி நிர்வாகத்துறை ஊழியர்கள் அதை பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர். அவ்வபோது தெருநாய்கள் பிடித்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நாய்க்கடியால் மருத்துவமனைக்கு வந்தால் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேபிஸ் நோயிலிருந்து மீள இந்த நான்கு டோஸ் தடுப்பூசி அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும் என முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
Follow Us