Skip to main content

மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது..! பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..!

Published on 30/11/2020 | Edited on 03/12/2020

 

ddd

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

 

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பிறகு விற்கலாம், அப்படியான ஒரு நல்ல காரியத்தை நாங்கள் செய்திருக்கிறோம் என்று மோடி சொல்லி வருகிறார். 

 

உண்மையில் விவசாயி இருப்பு வைக்க முடியாது. பெரிய வியாபாரிகள்தான் இருப்பு வைத்துச் சம்பாதிப்பார்கள். இதனை, பா.ஜ.க தலைவர்கள் உள்பட மோடி வரை அனைவரும் மறுத்தார்கள். பெரம்பலூரில் உள்ள குடோனில் வெங்காயத்தை டன் கணக்கில் பதுக்கி வைத்ததைப் பறிமுதல் செய்ததோடு நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க என்ன சொல்கிறது?

 

செப்டம்பரில் சட்டத்தை நிறைவேற்றினார்கள். மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் வெங்காயத்தை யார் இருப்பு வைத்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறதே?. 

 

ஒரு விவசாயி தன்னுடைய பொருளை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சென்று யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்கிறார்கள். எந்த ஒரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் அதுபோல் செய்வது நடைமுறையில் சாத்தியமே கிடையாது. 

 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு எதுவாக இருக்கட்டும், உடனே அதனை விற்க வேண்டும், அந்த காசை வாங்கி கடனை அடைக்க வேண்டும், குடும்பச் செலவு செய்ய வேண்டும், மறுபடியும் சாகுபடி செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதுதான் யதார்த்தமான நிலைமை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பொருளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பது என்பது சாத்தியமே கிடையாது. அதேபோல் இருப்பு வைப்பதும் சாத்தியமில்லை. 

 

விலை குறையாமல் இருப்பதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்யும்போது குறிப்பிடப்பட்டுள்ள தொகையைக் கொடுக்கவில்லை என்றால், புகார் செய்து அதனை வசூல் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. 

 

cnc

 

நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், கரும்பு விவசாயி கரும்பை உற்பத்தி செய்து ஆலைகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆலைதான் கரும்பின் விலையைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் அதனுடன் கூடுதலாகக் கொடுப்பதை தீர்மானிக்கிறது. ஆனால், அந்தத் தொகைகளை விவசாயிகள் பெற முடியவில்லையே. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆலைகளிலும் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது. 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள்தான் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கார்ப்பரேட் முதலாளிகள் பலமடைய வேண்டும் என்பதற்காக, நன்றி விசுவாசத்தோடு, அரசாங்கத்தின் சட்ட ரீதியான உதவிகளைக் கொண்டுவருவதற்கு, பா.ஜ.க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக. 

 

 

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Announcement of Communist Party of India candidates

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார். திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். 

Next Story

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Governor R.N. Ravi's trip to Delhi

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் நாளை அமைச்சராக பொன்முடி பதவியேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

Governor R.N. Ravi's trip to Delhi

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அமைச்சராக பொன்முடி நாளை பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.