Skip to main content

பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா மனநலம் பாதிக்கப்பட்டவரைப்போல செயல்படத் தொடங்கினார். ஆம், அவரிடம் இயல்பாகவே இருந்த பழிவாங்கும் மனப்பான்மை உச்சத்திற்கு சென்றது.

பாஜக கூட்டணி ஆட்சியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

விசாரணை இல்லாமல் ஒரு ஆண்டுவரை சிறையில் அடைக்கவும், ஜாமீனில் வெளிவர முடியாத விதிகள் கொண்ட சட்டமாக பொடா சட்டம் இருந்தது. இந்தச் சட்டத்தை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது ஏவலாம் என்று கலைஞர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

எதிர்ப்புகளை மீறி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் பயந்தமாதிரி ஜெயலலிதா அந்தச் சட்டத்தை தனது பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்திக் கொண்டார்.

முந்தைய ஆட்சியில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் சந்தனக் கடத்தல் வீரப்பனை சந்தித்து பேட்டி எடுத்து பரபரப்பை ஏற்படு்த்தி இருந்தார். தீவிர அதிமுக எதிர்ப்பாளராக செயல்பட்டு வந்தார். எனவே, ஜெயலலிதா அவரை பழிதீர்க்க திட்டமிட்டார். அதற்கு இந்தப் 'பொடா' சட்டம் உதவியாக இருந்தது.

ஜூலை 11ந் தேதி. 2002. சிகாகோ சென்றிருந்த வைகோ, அன்றுதான் சென்னை வருகிறார். அவரைக் கைது செய்வதற்காக முதல் நாள் இரவிலிருந்தே போலீஸ் காத்திருந்தது. மதுரை திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆத ரித்து வைகோ பேசியிருந்தார். அதையே காரணமாக வைத்துத்தான் பொடாவில் அவரை உள்ளே தள்ளியது ஜெயலலிதா அரசு. வைகோவுடன் இந்த கூட்டத் திற்கு பொறுப்பு வகித்த ம.தி.மு.கவினர் 9 பேர் மீதும் பொடா வழக்குப் போடப்பட்டிருந்தது. அவர்களை ஜூலை 9-ந் தேதியே கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

வைகோவை கைது செய்வதற்கு முன், முதல்நாள் நள்ளிரவிலேயே சென்னையில் உள்ள ம.தி.மு.க.வினரின் வீட்டுக் கதவைத் தட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இப்படி 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், போலீசுக்கு சிக்காமல் ம.தி.மு.க.வினர் பலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். இந்திய அளவிலான மீடியாக்கள் அனைத்தும் குவிந்திருந்தன. வைகோவின் குடும்பத்தார், அவருக்குத் தேவையான உடைகள் மற்றும் பொருட்களுடன் விமான நிலையத்தில் காத்திருந்தார்கள்.

மாலை 5.10 மணி. மும்பையிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய வைகோவை உள்ளே சென்று கைது செய்ய போலீசார் நினைத்தனர். விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

குடும்பத்தினரிடம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பேசிவிட்டு, கைது பற்றி கவலைப்படாமல் வெளியே வந்த வைகோவிடம், பிடிவாரண்ட்டைப் போலீசார் காட்டினார்கள். சிரித்தபடியே அதைப் படித்துவிட்டு, கைதான வைகோ அங்கே திரண்டிருந்த மீடியாவிடம் ஆவேசமாகப் பேசினார்.

""கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகளான கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோரை தர்மபுரியில் பேருந்துக்குள் வைத்து உயிரோடு எரித்த சண்டாள ஆட்சி இது. சதிகாரியின் ஆட்சி இது. இந்தக் கைது நடவடிக்கையால் எங்கள் கொள்கைகளை விட்டுவிடமாட்டோம். தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளை ஆதரிப்போம். இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை மக்கள் சக்தியுடன் விரட்டியடிப்போம்'' என்றார் வைகோ.

வைகோ வைக் கைது செய்த போலீசார், அவரை மதுரைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பின் வேலூர் சிறையில் அடைத்தனர். வைகோவும் அவருடன் 9 பேரும் பொடாவில் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. அந்த பரபரப்பை அதிகரிக்கும் விதத்தில், ""ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று கோட்டையில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறினார்.

ம.தி.மு.க.வின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் எல்லா இடங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த நிலையில், டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த கேபினட் அமைச்சர் கள் மற்றும் உயரதிகாரிகள் கூட்டம் நடந்து முடிந்தது. அதிகாரிகள் வெளியேறிய நிலையில் பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வைகோ விவகாரம் குறித்து பேசினார்.

""பொடாவில் கைது செய்யப்பட்ட கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவரை நம்மால் காப்பாற்ற முடியலை. பா.ஜ.க.வின் நிலை என்ன என்பது எனக்குப் புரியவில்லை.''

"புலிகளை அவர் ஆதரித்துப் பேசியது சரியா?'- என்றார் பாஜக அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி.

அதற்கு பதிலளித்த மாறன், "பார்லிமெண்ட்டில் வைகோவை பார்த்து மணிசங்கரய்யர், "நீங்க ராஜீவைக் கொன்ற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்" என்றபோது, "நான் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்' என்றவர்தான் வைகோ. அப்போது நீங்கள் எல்லோரும் பார்லிமெண்ட்டில்தான் இருந்தீங்க. அன்றைக்கு தவறாக தெரியாத பேச்சு, இப்போது பொடா சட்டத்திற்கு உட்படுகிறதா? கூட்டணியில் உள்ள ஒரு தலைவரைக் காப்பாற்ற என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்?'' என்று முரசொலி மாறன் குரலை உயர்த்திக் கேட்டார்.

ஆனால், அவருடைய பேச்சை காற்றோடு பறக்கவிட்டது பாஜக அரசு. இதற்கு காரணம், உள்துறை அமைச்சரான அத்வானியுடன் ஏற்கெனவே இதுகுறித்து கலந்து பேசித்தான் ஜெயலலிதா வைகோவை அரெஸ்ட் செய்திருந்தார்.

வைகோ, மதிமுகவினர், தமிழ்தேசிய இயக்கத் தலைவர்கள் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என அடுத்தடுத்து ஜெயலலிதா பலரை சிறையில் அடைத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்தான் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நக்கீரன் கோபால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது அவருடைய பிறந்தநாளுக்கு மறுநாள். எதற்காக கைது செய்யப்பட்டார்? சந்தன வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் இன்பார்மர் ஒருவரின் கொலையோடு தொடர்புபடுத்தி அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் உரிமம் பெறாத துப்பாக்கி இருந்ததாகவும், தமிழ்தேசிய தீவிரவாதிகளின் நோட்டீஸ்கள் இருந்ததாகவும் காட்டி, அவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவர் 252 நாட்கள் சிறையில்அடைக்கப்பட்டிருந்தார். சட்டரீதியில் தனது கைதை எதிர்த்து இடைவிடாமல் போராடி வந்தார். தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னை போலீசார் கைது செய்துவிட்டு அவர்களாகவே கொண்டு வந்து துப்பாக்கியையும், தமிழர் விடுதலைப்படையின் நோட்டீஸையும் என்னிடம் இருந்தாகக் காட்டி பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

நக்கீரன் கோபாலின் இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி சண்முகம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கோபாலை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தது. தினமும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் அவர் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் அவர் சிறையில் இருந்த சமயத்தில் அவருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், பத்திரிகையாளர்களும் ஓரணியில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். பொடாவில் கைது செய்யப்பட்டவர்களில் அந்தச் சட்டத்தின் விதிகளை சட்டரீதியாக நொறுக்கி வெளியே வந்தவர் நக்கீரன் கோபால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டூழியங்களுக்கு மத்தியில் விவசாயத்திற்கு கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை ரத்துசெய்தார் ஜெயலலிதா. அதுமட்டுமின்றி, மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழிகளை பலிகொடுக்கத் தடைச் சட்டம் என அவருடைய அராஜகம் நீண்டுகொண்டே போனது.

இவையெல்லாம் போதாது என போராடும் ஆசிரியர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார். பல ஆசிரியர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தார்.

இவ்வளவு கொடுமைகளுக்கு இடையே, வைகோவை பொடாவிலிருந்து காப்பாற்ற கலைஞர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஓராண்டு முடிந்தும் வைகோ சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வர வைகோ விரும்பவில்லை. பாஜக அரசும் அவரைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், கலைஞரின் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளியே வர வைகோ ஒப்புக்கொண்டார்.

அந்தச் சமயத்தில்தான் 2004 மக்களவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தப் பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜகங்கள் அனைத்துக்கும் மக்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள்.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு, கோழி பலியிடத் தடைச்சட்டம், இலவச மின்சாரம் ரத்து அறிவிப்பு அனைத்தையும் திரும்பப் பெற்றார் ஜெயலலிதா.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி  நள்ளிரவு காஞ்சி மட சாமியார் ஜெயேந்திரர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் மிகப்பெரிய அதிகார மையமாக கருதப்படும் காஞ்சி மடத்துக்குள் போலிஸ் புகுந்தது மிகப்பெரிய சாதனை என்று கருதப்பட்டது.

இந்நிலையில்தான், 2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கையான சேதுசமுத்திர திட்டத்தை காங்கிரஸ் அரசு தொடங்கி வைக்க முன்வந்தது. பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக கலந்துகொண்டு அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில்தான் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் வைகோவின் முடிவு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை பொடாவில் போட்டு வாட்டிய ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்.

திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் என பல கட்சிகளுக்கு தொகுதிகளை பிரி்ததுக் கொடுக்க வேண்டிய நிலையில், மதிமுகவுக்கு தொகுதிகள் குறைவாக வரும் என்று கருதியே வைகோ அதிமுக அணிக்கு மாறினார். அதிமுக, பாஜக, மதிமுக ஆகிய கட்சிகள் அணி அமைத்து போட்டியிட்டன.

தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக 132 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. அவற்றில் 96 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களிலும், பாமக 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், சிபிஐ 10 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும், சிபிஎம் 13 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும் வெற்றிபெற்றன. திமுக ஆட்சி அமைக்க இந்தக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன் வந்ததால் கலைஞர் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது.

அதிமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டு 61 இடங்களைக் கைப்பற்றியது. மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தேமுதிக 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.

(தமிழ் செம்மொழி, புதிய சட்டமன்றக்கட்டிட திறப்புவிழா, 20 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி அறிமுகம், அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்பு, ஈழத்தமிழர் போராட்டம் முடிவு, 2ஜி அலைகற்றை வழக்கு குறித்து திங்கள்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதி :
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்