/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4492.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். அவரை விசாரித்தபோது, புதுக்கோட்டையில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, சில்லறை விற்பனை செய்வதாகச் சொல்ல, கிறுகிறுத்துப் போனார்கள் காவல்துறையினர்.
இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து நூல் பிடித்துச் சென்றவர்கள், புதுக்கோட்டை வடக்கு வீதியில் வசிக்கும் ராமையா மகன் சண்முகத்தின் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கே நடத்திய சோதனையில் கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தவர்கள், அங்கு கிடைத்த தகவலை வைத்து, பெரியார் நகரில் சேவகமூர்த்தி என்பவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கே பண்டல் பண்டலாக 100 கிலோ கஞ்சா பிடிபட, பிடித்த காவல்துறையினரே திகைத்துப்போய் நின்றார்கள்.
மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர் வந்து பார்த்த பிறகு, அந்த கஞ்சாப் புதையலைக் கைப்பற்றிய தனிப்படை போலீசார், சண்முகம், அவரது மனைவி வித்யா, சேவகமூர்த்தி ஆகியோரை அள்ளிக்கொண்டு சென்றார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இவர்களில் ஒருவரான வித்யாவின் அம்மாவான கோயில்பட்டி வசந்தி, பல வருடமாக தனது குடும்பத்தினருடன் இணைந்து ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, விற்று வந்ததோடு, இலங்கைக்கும் கடத்தி வந்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது 144 கிலோ கஞ்சா பிடிபட்டபோதும், வசந்தி சிக்காததால் தொடர்ந்து கஞ்சா விற்பனையை அதிகப்படுத்தி வந்திருக்கிறார். இதேபோல் கடந்த மாதம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மூலம் நடுக்கடலில் வைத்து கஞ்சா பண்டல்களை மாற்றும் போது, சிலர் போலீசிடம் பிடிபட்டிருக்கிறார்களாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1736.jpg)
பிடிபட்டவர்களும், "இது புதுக்கோட்டை வசந்தியின் கஞ்சா பண்டல்கள். எங்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து நடுக்கடலுக்கு வரும் இலங்கை காரர்களின் படகில் மாற்றிவிடச் சொன்னார். அதனால்தான் மாற்றினோம்’’ என்றிருக்கிறார்கள். இதனையடுத்தே வசந்தியின் பக்கம் கவனத்தை திருப்பிய போலீசார், கஞ்சா நெட்வொர்க்கையே மடக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே கைதான சண்முகம், வித்யா, சேவகமூர்த்தி ஆகியோருடன், மொத்த வியாபாரியான கோயில்பட்டி பாலகிருஷ்ணன் மனைவி வசந்தி, அவரது மகன் வினோத், உறவினர்களான பிரியதர்ஷினி, பவித்ரா, ஜானகி, வனிதா ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கும்பல் தான் புதுக்கோட்டையை மையமாக வைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஜரூர் காட்டி, புதுக்கோட்டையையே கஞ்சா கோட்டையாக்கி இருக்கிறது என்கிறார்கள். இதே போல இன்னும் சில கஞ்சா கும்பல்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்துவருகிறதாம். இவர்களால் மாணவர்களும் இளைஞர்களும் பைக் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல்கள் வருகின்றன.
இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் ஒரு டன் அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே கொடுத்த தகவலின் பேரில், ரோந்து சென்று மடக்கி கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனத்தில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே இந்த கஞ்சா மூட்டைகள் இருந்ததாம். பிடிபட்டவர்களை காவல்நிலையம் வரை கொண்டுவந்த போதும், அவர்களை அங்கிருந்த போலீசாரே வழியனுப்பி வைத்ததாகவும் சொல்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறைத் தரப்பிலேயே நாம் கேட்டபோது “சில ஆண்டுகளுக்கு முன்புவரை கஞ்சா உள்ளிட்ட பல கடத்தல் பொருட்களை, நாகப்பட்டினம் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்திய கடத்தல்காரர்கள், அங்கிருந்து தங்கம் கடத்தி வந்து பெரிய பெரிய நகைக்கடைகளில் விற்பனை செய்தார்கள். அதனால் கடத்தல் தடுப்புப் பிரிவின் கவனம் நாகை மாவட்ட கடற்கரைப் பக்கம் திரும்பியது. இதையறிந்த கடத்தல் கும்பல்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைக்கு தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில், கடலோர ரோந்துப் பணிக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதிநவீன படகு பழுதாகி கிடக்கிறது. படகு ஓட்டுநரும் இல்லை. இதெல்லாம் கடத்தல்காரர்களுக்கு வசதியாக இருக்கிறது. இங்கிருக்கும் பல கஞ்சா மொத்த வியாபாரிகள் இலங்கையில் உள்ள மொத்த வியாபாரிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு, பண்டல் பண்டலாக கஞ்சாவை கடத்தி வருகின்றனர். இதேபோல் அங்கிருந்து கடத்தல் தங்கம் இங்கே வருகிறது” என்றார்கள் மனம் வெதும்பி.
Follow Us