/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pulwama_0.jpg)
இன்னும் மக்கள் சோகம் முழுதாய் நீங்காமல்தான் இருக்கின்றனர். இன்னும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் ஓயவில்லை. போர் தொடுக்க வேண்டும் என்று இந்தியாவில் பலரும் 'போர் தொடுத்தால் சந்திக்கத் தயார்' என்று இம்ரான்கானும் சொல்லி வருகின்றனர். எப்போதும் போல என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் காஷ்மீர் பொதுமக்கள். இதற்கெல்லாம் காரணம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல்.
கடந்த 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 30 வருடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் இது மிகப்பெரிய தாக்குதல் ஆகும். சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் ஸ்ரீநகர் செல்வதற்காக 70 வாகனங்களில் அணிவகுப்பாக அனந்த் நாகிலிருந்து சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்திலுள்ள லெதிபுரா என்னும் பகுதி வழியாக சி.ஆர்.பி.எஃப் அணிவகுப்பு சென்றுகொண்டிருக்கும்போது அஹமது தார் என்ற பயங்கரவாதி எஸ்யூவி வகை கார் ஒன்றில் 200 முதல் 350 கிலோ அளவு இருக்கக்கூடிய வெடிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு அணிவகுப்பில் வந்த ஒரு பேருந்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இறந்தனர்.
தாக்குதல் நடைபெற்ற ஒரு சில மணிநேரங்களிலேயே ஜெய்ஷ்-இ-முகமது என்ற பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலை நடத்திய அஹமது தார் தாக்குதலுக்கு முன்பு பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல் திட்டத்துக்கு தலைமை தாங்கியவர் மௌலானா மசூத் அசார். இவருடைய கொள்கை இந்தியாவிடம் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதுதான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/masood-azhar.jpg)
ஜெய்ஷ் - இ - முகம்மது என்பதன் பொருள் முகம்மதின் ராணுவம் என்பதாகும். மசூத் அசார் பல வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் பிடிப்பட்டார். பின்னர் 1999ஆம் ஆண்டு தாலிபன் பயங்கரவாதிகள் காத்மண்டுவிலிருந்து டெல்லி வரவிருந்த இந்திய விமானத்தை கடத்தி பிணைக் கைதிகளை வைத்து மிரட்டியதன் விளைவாக அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வேறு வழியின்றி மசூத் அசார் உட்பட மூன்று பயங்கவாதிகளை விடுதலை செய்தார்.
இதனை அடுத்து வெளியே வந்த மசூத் அசார், 2000 ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் நோக்கம் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானிடம் இணைக்க வேண்டும் என்பதுதான். இந்த அமைப்பை தொடங்குவதற்கு முன்பே மசூத் அசார் தாலிபன் தலைவர் முல்லா ஒமருடனும் அல் கொய்தா தலைவர் ஒசாமாவுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.
காஷ்மீர் வரலாற்றில் கடந்த பல வருடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மிகவும் மோசமான ஒன்றாக இந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல்களை கருதுகின்றனர். இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது இந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு. சமீபமாக நடந்த பத்தன்கோட் விமான இறங்குதள தாக்குதல், உரி தாக்குதல் ஆகியவையும் இவர்கள் நடத்தியதுதான். இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பங்கு இருக்கிறது. பாகிஸ்தான் அரசால் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ள மசூத் அசார் பின்னர் விடுவிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டது அந்த அமைப்பு. இப்போது மசூத் அசார் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தானுக்கும் தெரியாதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)