Skip to main content

"தங்கமணிக்கு உடம்பெல்லாம் மூளை... ஆயிரம் சோதனை நடத்தினாலும் டிவிஏசி-ஐ திணறடிக்கும் திறமை அவருக்கு உண்டு.." - ரெய்டு பற்றி புகழேந்தி பேட்டி!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

iop

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பான வழக்கிலிருந்து அதிமுக தலைமை தப்பித்த நிலையில், அதிமுக முன்னணியினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளது. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வீரமணி, சி. விஜயபாஸ்கர், வேலுமணி என்று அடுத்தடுத்த பிரபலங்களை நோக்கி பாய்ந்தது. உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமியின் மிக முக்கிய தளபதியாக இருக்கும் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 69 இடங்களில் அதிகாரிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று (15.12.2021) சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை, எல்லாம் பொய் என்று நேற்று இரவு செய்தியாளர்களிடம் ஆவேசம் காட்டினார் தங்கமணி. இந்நிலையில், தங்கமணியிடம் நடைபெற்ற சோதனை குறித்து அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தி முடித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

சோதனையில் அங்கிருந்து என்ன கைப்பற்றினார்கள் என்று முதலில் பார்க்க வேண்டும். நீங்கள் தங்கமணியை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஒரு டிவிஏசி அல்லை, ஆயிரம் டிவிஏசி வந்தாலும் அவர் சமாளிப்பார். லஞ்ச ஒழிப்புத்துறை எத்தனையோ வழக்குகளைப் பார்த்திருந்தாலும், தங்கமணி வழக்கை மட்டும் அவர்கள் வெற்றிகொண்டால் அது மிகப்பெரிய ஆச்சரியம்தான். சிலருக்கு உடம்பெல்லாம் மூளை என்று கிண்டலாகக் கூறுவார்கள். அது தங்கமணிக்கு நூறு சதவீதம் உண்மை. அவருக்கு உடம்பு முழுவதும் மூளை. அவர் அமைதியை வைத்துக்கொண்டு சாதாரணமாக நினைக்கக் கூடாது, வித்தைக்காரர். அதுவும் நிறைய மாதங்கள் கடந்து இப்போதுதான் அங்கே லஞ்ச ஒழிப்புத்துறை சென்றுள்ளதால் இந்த விவகாரத்தில் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

எனவே எடப்பாடி பழனிசாமி கொள்ளைக் கூட்டத்தின் தளபதியாக இதுவரை இருந்துவந்தவர்தான் இந்த தங்கமணி. இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், தங்கமணி மிக ஜாக்கிரதையான ஆள். என்ன செய்தால் தப்பிக்கலாம், எப்படி செய்தால் மாட்டாமல் இருக்கலாம் என்ற அரசியல் மூலமே அவருக்கு அத்துப்படி. எனவே இப்போது அவர் மீது கை வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே திணறக் கூட வாய்ப்புண்டு. சாதாரண ஆள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் போடவில்லை. இது அவர்களுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். இடைவெளி அதிகம் கொடுத்தது தங்கமணிக்கு மிக வசதியாக மாறியிருக்கும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும், யார் வெற்றிபெறுகிறார்கள் என்று. எது எப்படி இருந்தாலும் லஞ்ச போலீசாருக்கு இது கடினமான காரியமாகத்தான் இருக்கும்.

 

இந்த விவகாரத்தில் அதிமுக எழுச்சியைப் பார்த்து திமுக பயப்படுவதாகவும், அதனால்தான் வழக்கு போட்டு மிரட்டுவதாகவும் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூறியிருக்கிறார்கள். முன்பெல்லாம் அதிமுகவில் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதில்லை. தற்போது விருப்பமனு வாங்க வந்தவர்கள் மீது அடிதடி தாக்குதலும் நடைபெறுகிறது. இதைத்தான் இவர்கள் எழுச்சி என்று கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த ரவுடி ராஜ்ஜியத்தைத்தான் அவர்கள் பெருமையாக கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒன்றையாவது இவர்கள் சரியாக செய்திருக்கிறார்களா? அம்மாவுடைய வீட்டை நினைவு இல்லமாக மாற்றினார்கள், அது என்ன ஆனது? இப்போது கடையை மூடிவிட்டார்கள். 10.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், அது இப்போது நடுத்தெருவில் நிற்கிறது. இவர்கள் கொண்டுவந்தது என்ன சிறப்பாக இருக்கிறது, இவர்கள் பெருமைப்படுவதற்கு. எதுவும் இல்லை. 

 

உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீத இடங்களில் தோல்வி, என்ன எழுச்சி என்று இவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிவில்லை. உட்கட்சித் தேர்தலில் போட்டியிட வந்தவர்களைக் குண்டர்களை வைத்து அடித்து துவைத்து இவர்கள் தலைமைப் பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளார்கள். இதுதான் இவர்கள் எழுச்சி என்று கூறுகிறார்கள். இதனால் அடிமட்ட தொண்டனுக்கு என்ன வந்துவிடப் போகிறது. அவன் தெருவில் அடிவாங்கிக்கொண்டுதானே நின்றுகொண்டிருக்கிறான். உண்மையை யாராவது கேட்டால், உள்ளாட்சித் தேர்தலில் எங்களைப் பணியாற்ற விடமால் தடுக்கிறார்கள் என்று இதுவரை கூறிவந்தவர்கள் தற்போது, அதிமுக ஏற்கனவே அறிவித்த போராட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள் என்று உப்புசப்பில்லாத காரணத்தைக் கூறுகிறார்கள். அதிமுகவில் 72 மாவட்டங்கள் இருக்கிறது. ரெய்டு நடக்கும் இடத்திற்கு எம்எல்ஏக்களுக்கு என்ன வேலை. அப்படி வருபவர்கள் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று கூறி வழக்குப்போட்டால் யாராவது அங்கே வருவார்களா? போராட்டம் நடத்த துப்பில்லாத இவர்கள், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சப்பை கட்டு கட்டுகிறார்கள். தங்கமணி மட்டுமல்ல இன்னும் பல மணிகள் அதிமுகவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

 

 

 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய மரணம்; அதிமுக வழக்கு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
counterfeiting liquor; AIADMK case

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

counterfeiting liquor; AIADMK case

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல்கள் தகனம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.