Skip to main content

மூவாயிரம் ஆண்டு பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமத்தில் கொம்படி ஆலயம் அடர்ந்த வனத்தில் கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில் அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத் தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் , உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் சீ.அ.மணிகண்டன், ஆசிரியர்  சோலச்சி திருப்பதி ஆகியோரடங்கிய குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் மூலம் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில்   இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளது.
 

muthu 1

 

 

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் , தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு, மொக்காண்டி, கொம்படி ஆலயம் வழிபாட்டிலுள்ளது.  கோயிலின் முக்கிய வழிபாட்டிலுள்ள பகுதியிலிருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த பலகை கற்கள் கோயிலுக்கு நேரெதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது. கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப்போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை ஆனால் கொம்படி வேல்  வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளது, ஆனால் நெடுங்கல் வழிபாடு ,  கல் திட்டை வழிபாடு, உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில்   இக்கோவிலில் மட்டும் கல் வட்டம் , கல் திட்டை வழிபாட்டிலுள்ள நிகழ்கால சான்றாக உள்ளது சிறப்பானது.


கல்பதுக்கை குறித்த இலக்கிய பார்வை
“நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் , கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை ’’ என்று அகநானூறு  பாடல் எண் 231 லும், ‘‘வெந்நுனை அம்பின் விசையிட வீழ்ந்தோர், எண்ணுவரம் பறிய உவலிடு பதுக்கைச் சுரங்கெழு கவலை’’ என்று பாடல் எண் 109 லும்  பாடற் பகுதிகள் இப்பதுக்கைகளைப் பற்றி அறிவிக்கின்றன. ‘‘தாம் வசித்த கற்களைவிட்டுத் தெய்வங்கள் நீங்கி விட்டமையால் அம்பலங்கள் பாழடைந்து கிடக்கின்றன’’ என்கிறது புறநானூறு 52 வது பாடல், பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலை  என்கிறது ஐங்குறு நூறு, இவ்வாறு சங்க காலம் வரை இந்த பெருங்கற்கால பண்பாடு நீடித்து நிலைத்து இருந்ததை இந்த இலக்கிய சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது. கல் பதுக்கைகளில் வைக்கப்படுபவர்கள் வீரத்தினாலும், தனது தலைமைப்பண்பாலும் உயர் நிலையில் உள்ளோருக்கு செய்யப்படும் மரியாதையாக இருந்துள்ளதை உணர முடிகிறது.


கல்வட்டங்களின் வடிவம்
ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத்தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டுள்ளன.
கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகி கிழக்குப்புற விளிம்பு பகுதியில் நான்கு பலகைக்கற்களை இணைத்து சதுரவடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது  கருங்கல்லினால் செய்யப்பட்டுள்ளது.
 

muthu

 

 

ஒரு சில இடங்களில் செம்புராங்கற்களுக்கு பதிலாக  கல் வட்டங்களை அமைக்க இப்பகுதியில் எளிதாக கிடைக்கும் கருங்கல் பலகைக்கற்களை பயன்படுத்தியுள்ளனர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவைகளில் கோயிலின் வடபுறம் உள்ள  கல் வட்டமே   24 அடி விட்டமுடையதாகும்  இதே அளவை ஒத்த கல்வட்டங்கள் இரண்டும். ஏனைய நான்கும் 14 அடி விட்டமுடைய கல்வட்டங்களாக உள்ளன. கல்லறையின் மேற்பகுதி மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் கல்வட்டத்திலுள்ள செம்புறாங்ககற்களை விடவும் சற்று கூடுதல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

     
இதனை திட்டை போன்ற கற்பதுக்கைகள் என வரலாற்று ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். கல் வட்டத்தின் உட்பகுதிகளில் சிறிய கற்கள் குவியலாக நிரப்பப்பட்டுள்ளது. சில கல் வட்டங்கள் கல் நிரப்பப்படாமல் உள்ளது.
 

வழிபடும் முத்தரையர்கள் 
இந்த கல் வட்டங்களில் அமைந்துள்ள நீத்தார் வழிபாட்டினை ஒட்டைப்பிச்சான் வகையறா எனப்படும் முத்தரையர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை வழிபடுபவர்களாக குப்பை கொட்டியான் வகையறா எனப்படுபவர்களும் சிவகங்கை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதே இனத்தைச் சேர்ந்தவர்களால் இந்த கல்வட்டக்கோயில் பல நூறு ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மொக்காண்டி என்பவர் இந்த குறிப்பிட்ட மக்களின் மூதாதையராக இருக்க வாய்ப்பு உள்ளது. 
 

தொல் மரபணு ஆய்வு
இத்தகைய தகவல்களை அறிவியல் முறைப்படி உறுதி செய்திட இப்பகுதியில் இருக்கும் கல்வட்டங்களை தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்து கிடைக்கும் கரிம சான்றுகள், மரபணு கூறுகள் ஆகியவற்றை  ஆய்வுகுட்படுத்துவதன் மூலம், இலக்கியங்களில் சொல்லப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையையும், வழிபடுபவர்களுடைய பண்பாட்டு தொடர்பையும்  உலகறியச்செய்ய முடியும்.  


கல்வட்டங்களின் காலம் 
உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் மெகாலித்திக் காலத்தில் ஆப்பிரிக்கா , ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனை பெருங்கற்கால பண்பாடு என தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர்.

     
குறிப்பாக கல்வட்டம், கல் திட்டை, கல் பதுக்கை, நெடுங்கல், கற்குவை உள்ளிட்ட அமைப்புகள் பரவலாக காணப்படுகின்றன. 


இந்த அமைப்புகளில் இறந்த முக்கியத்துவம் வாய்ந்த வீரர்கள் , வேட்டை, போர் உள்ளிட்ட பொதுவான காரணங்களால் இறந்தவர்களுக்கும், வயது மூப்படைந்தவர்கள் நினைவாக  பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டமையால் பெருங்கற்கால சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. 
இது இரும்பு உளி உள்ளிட்டகருவிகளின் துணையோடு பாறைகளை உடைத்து பயன்படுத்தியமையால் இது இரும்புக்காலத்தில் இருந்த மற்றொரு பண்பாடு என்றும் நோக்கப்படுகிறது .
 

muthu

 

 

பெருங்கற்கால சின்னங்களின் காலம்
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலுள்ள கல் வட்டங்களின் வயது  கி.மு 2500 லிருந்து 1500 வரையிலும் இது வடகிழக்கு பிரான்ஸ் பகுதியில் கி.மு 5000 எனவும், கணிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் நடந்த கொடுமணல் ஆய்வு முடிவுகளின் படி கி.மு 540  லிருந்து காலக்கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இவைகளில் எழுத்து பொறிப்புகளுடன் கிடைத்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுத்துவடிவம் இருந்துள்ளதை இந்த அகழ்வாய்வு வெளிப்படுத்தியது. இந்தியாவில் இரும்புக்காலம் என்பது கி.மு 1100 லிருந்து கி.மு 350 என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் கே.பி.ராவ் தலைமையில் நடந்த அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி , மட்பாண்டங்கள் உள்ளிட்டவற்றை காலக்கணிப்பு செய்தததில் கிடைத்த  முடிவுகளின் படி இரும்புக்காலம் கி.மு. 2400 முதல் அதாவது இன்றிலிருந்து 3400 வருடங்களுக்கு முன்னதாக   தொடங்குவதாக  செய்தி வெளிவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி, ராஜகுளத்தூர், செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள், கல் பதுக்கைகள், கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு  செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்பு முறைகளின் படி தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம் . 
  
இந்த கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதே போன்று பல வரலாற்று தடயங்கள் அடையாளம் காணப்படாமல் அழிந்து கொண்டிருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்துவதும், பாதுகாப்பதுமே நமது முக்கிய கடமையாகும் அதே நேரத்தில் தொல்லியல் தடயங்களை முறையாக பராமரிக்கவும் தொடர் பாதுக்காப்பை உறுதி செய்யவும் இவற்றை தொல்லியல் சின்னங்களாக அறிவிப்பது அவசியமாக உள்ளது. ஒரு சில இடங்களில் வனத்துறை இத்தகைய பெருங்கற்கால சின்னங்களை அழித்துவிட்டு யூகலிப்டஸ் கன்றுகளை நட்டு வருகிறது, இது குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அதிகமான தொல்லியல் முக்கியத்துவம் பகுதியாக புதுக்கோட்டை இருப்பதால் திருமயம் துணை தொல்லியல் வட்டத்தை, தொல்லியல் வட்டமாக தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு மாநில அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் புதிய இடங்களை தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாதுகாக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.
    
புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புகள் புதைந்து கிடக்கிறது. அந்த வரலாற்றை ஆவணப்படுத்துவதுடன் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட சில இடங்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவுகளை பெற்றுக் கொடுத்தார். ஆனால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர் முன்வைத்துள்ளார். அப்படி ஆய்வுகள் செய்து பாதுகாக்கவில்லை என்றால் வனத்துறையின் பிடியிலும் ஆக்கிரமிப்பிலும் உள்ள வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு தமிழர்களின் வரலாறும் அழிக்கப்படலாம்...

 

 

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.