Advertisment

புதுக்கோட்டையில் அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!!!

Pudukkottai - Inscription - invention

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்தது குறித்தசெய்தியடங்கிய, பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரெங்கன்ஆகியோரடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு குறித்து தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது...

இக்கல்வெட்டு பலகைக்கல்லில் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளது. இரண்டே கால் அடி உயரத்துடனும் ஒன்னே கால் அடி அகலத்துடனும் சாய்ந்த நிலையில், அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. கல்வெட்டின் மேல்புறத்தில் தோரணவாயில் போன்றுசெதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில்14 வரிகளில் செய்திசெதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

Pudukkottai - Inscription - invention

கல்வெட்டின் காலம் :

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் காலக்குறிப்புகள் ஏதுமில்லை என்பதால் எழுத்தின்அடிப்படையில் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.

கல்வெட்டுச் செய்தி :

இதில் “சுபமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவுதந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குல சேகரபுரத்துக்குக் கழனிவாசலுடையான் திருக்கொடுங்குன்ற முடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம் சுபமஸ்து” என்று திருவோலக்க மண்டபம் அமைத்துக்கொடுக்கப்பட்ட செய்தி உள்ளது.

ஒரு பூவுகந்தருளிய நாயனார்:

ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளை காண முடியவில்லை, அதுமட்டுமின்றி வழிபாட்டிலிருந்த எவ்வித சான்றுகளும் காணப்படவில்லைஎன்றாலும் உமையாண்டி ஊரணி பிள்ளையார் என்ற சிற்பமும், வேல்களும் இக்கல்வெட்டு காணப்படும் இடத்தில் உள்ளது.

திருவோலக்க மண்டபம் :

திருவோலக்க மண்டபம் குறித்து கூறும் திருவாசக (திருவா.21, 6) பாடல் வரிகள்“ஏசா நிற்பர் என்னை உனக்கு, அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர் யான்தானும், பேணா நிற்பேன் நின்னருளே , தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோலக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே” என்கிறது.

Pudukkottai - Inscription - invention

அதாவது திருவோலக்கம் என்ற பதம் இறைவனாரின் திருச்சபை என்ற பொருளுடன் வழங்கப்பட்டுள்ளது. இது கொலு மண்டபம், தர்பார் என்று பரவலாக அறியப்பட்டாலும், முற்கால வழிபாட்டு மரபில்அத்தாணியிருப்பு மற்றும்திருவோலக்க மண்டபம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இறைவனாரின் திருவுருவம் பக்தர்களின் வழிபாட்டிற்காக, வைக்கப்படும் மண்டபம் என்பதால் திருச்சபை எனப்படும் திருவோலக்க மண்டபம் என்றே வழங்கப்படிருப்பதை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. என்றாலும் இவ்விடத்தில் எவ்வித கட்டுமானங்களும் காணப்படவில்லை.

குலசேகரபுரம் எனும் இளையாத்தக்குடி நகரத்தார்களின் அறப்பணி நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வணிகத்தை பிரதானமாகக்கொண்டவர்கள், இவர்கள் வணிகத்திற்காக பல ஊர்களிலும் தங்களது வசிப்பிடங்களை மாற்றி வசித்து வந்தாலும் தங்களது ஊர்ப்பெயரோடு கூடிய பெருந்தெரு எனப்பெயரிட்டு அழைத்து வந்துள்ளதையும், பல இடங்களில் கோயில் திருப்பணிகள், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

nakkheeran app

மலையாலங்குடி ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்றழைக்கப்பட்ட சிவாலயத்தில் திருவோலக்க (திருக்காட்சி) மண்டபத்தை குலசேகரபுரம் என்று அழைக்கப்பட்ட இளையாத்தக்குடி ஊரவர்களான கழனிவாசலுடையான், திருக்கொடுங்குன்ற முடையான், அழகிய திருச்சிற்றம்பலமுடையான் ஆகிய மூவரும் இணைந்து செய்து கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

இளையாத்தக்குடி, மாத்தூர், வைரவன்கோயில், நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோவில்களை அடிப்படையாகக்கொண்டு ஒன்பது குழுக்களாக அறியப்படும் நகரத்தார்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, தங்கி வணிகம் செய்தாலும், தங்களை தங்களது ஊர் பெயர்களோடே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை பல்வேறு சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வகையில் தாம் இளையாத்தக்குடியிலிருந்த கழனிவாசல், திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை, திருசிற்றம்பலம் ஆகிய தமது மூதாததையர்வாழ்ந்த ஊர்பெயர்கள் தாங்கிய உட்பிரிவுகளோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளதையும் இக்கல்வெட்டு சான்றாக அமைகிறது. என்றார் மேலும் இக்கல்வெட்டை கண்டுபிடிக்க உதவிய மல்லாங்குடியை சேர்ந்த பெரியவர்கள் நடராஜன், சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் உதயகுமார், தினேஷ்குமார், ராகுல், பிச்சைமுத்து, சந்தோஷ் குமார், ரூபினி,ஷாலினி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

inscription pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe