Skip to main content

“அமித்ஷா பேசும்போது வெட்கமே இல்லாமல் ஆர்.பி. உதயகுமார் உட்கார்ந்திருக்கிறார்” - புதுமடம் ஹலீம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

 Pudhumadam Haleem  talk about annamalai and admk

 

அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம்.

 

“பாஜக நடத்திய வேல் யாத்திரை என்பது எவ்வளவு காமெடியாக இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம். வேல் யாத்திரையால் தான் 4 தொகுதிகளில் வென்றது போல் எல்.முருகன் பேசியுள்ளார். ஆனால் அந்த தேர்தலில் அவரும் தோற்றார், அண்ணாமலையும் தோற்றார். பாரதத் தாய்க்கு இவர்கள் கொடுத்த மரியாதையை நாம் மணிப்பூரில் பார்த்தோம். இப்போது அவர்கள் மதவாத அரசியலைத் தாண்டி, மொழி அரசியலைக் கையில் எடுத்துள்ளனர். தமிழ் மொழிக்கு இவர்கள் தான் நிறைய செய்தது போல் பேசுகின்றனர். 

 

திருக்குறளை இவர்கள் தான் உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்தது போல் பொய் சொல்கின்றனர். திருக்குறள் உலகளவில் பேசப்படும் நூலாக எப்போதுமே இருந்திருக்கிறது. முதலில் மோடியும் அமித்ஷாவும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழுக்கு இவர்கள் ஒதுக்கிய நிதி என்பது சில கோடிகள் தான். இந்தியில் இன்றுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இவர்களால் திராவிட அரசியல் பேச முடியாது, மத அரசியல் செல்லுபடியாகவில்லை. அதனால் தான் மொழி அரசியல் பேசுகின்றனர்.

 

தமிழ் மொழிக்கு உண்மையிலேயே யார் அதிகம் செய்தது என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். அண்ணாமலை யாத்திரை செல்லும் கேரவன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கிறது. ராகுல் காந்தி பயன்படுத்திய கேரவன் சாதாரணமான ஒன்றாக இருந்தது. வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா இங்கு பேசுகிறார். பாஜகவில் பல வாரிசுகள் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். அவர் எப்போதாவது கிரிக்கெட் விளையாடியிருக்கிறாரா? அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?

 

அண்ணாமலையின் யாத்திரை தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அன்புமணி கலந்துகொள்ளவில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திட்டங்களை அண்ணாமலை கொண்டுபோய் சேர்ப்பார் என்று அமித்ஷா பேசுகிறார். இதைக் கேட்டுக்கொண்டு ஆர்.பி.உதயகுமார் வெட்கமில்லாமல் அங்கு உட்கார்ந்திருந்தார். இது அதிமுக தொண்டர்களை அவமானப்படுத்தும் செயல். மணிப்பூர் விவகாரம் இன்று சர்வதேச அளவில் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இங்கு சட்ட ஒழுங்கு பற்றி பேசுகின்றனர். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

 

செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயத்துக்காகத் தான். குற்றமே நிரூபிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜி குற்றவாளி என்று அமித்ஷா பேசுவது எந்த விதத்தில் சரி? ஒரு நாளைக்கு வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் நடப்பதும், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பெயர் யாத்திரையா? சாதாரண மனிதர்கள் கூட தினமும் இதைவிட அதிகம் நடக்கின்றனர். ராகுல் காந்தி நடத்தியது தான் உண்மையான யாத்திரை. அண்ணாமலை செய்வது ஒரு அரசியல் ஸ்டண்ட். தமிழ் மக்களிடம் இது எடுபடாது” என்றார்.

 

 

 

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.