Skip to main content

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டம் சாத்தியம் இல்லை"  - விவரிக்கிறார்  புதுமடம் ஹலீம்!

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Pudhumadam Haleem | Modi | Amit Shah

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

சனாதனம் என்பது வட மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும், தென் மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது. சனாதனமும் இந்து மதமும் வேறு வேறு என்கிற புரிதல் தென்னிந்தியாவில் இருக்கிறது. அதனால் தான் உத்தரப்பிரதேச சாமியாரின் வன்முறைப் பேச்சை அண்ணாமலையால் இங்கு ஆதரிக்க முடியவில்லை. ஆனால் சனாதனம் பற்றிப் பேசினால் கண்ணை நோண்டிவிடுவேன் என்கிறார் ஒரு ஒன்றிய அமைச்சர். மம்தா பானர்ஜி கூட உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. 

 

வட இந்தியாவில் செய்யப்படும் பிரச்சாரம் வேறு மாதிரியாக இருக்கிறது. இங்குள்ள பாஜக தலைவர்கள் வேறு மாதிரியாக பேசுகின்றனர். அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்பதே உண்மை. சனாதனம் என்றாலும் இந்து மதம் என்றாலும் ஒன்றுதான் என்கிற எண்ணத்தில் வட இந்தியர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இதுகுறித்த புரிதல் வேறுபட்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைத்தான் நாம் எதிர்க்கிறோம் என்பது இங்கு அனைவருக்கும் புரிகிறது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும். 

 

சனாதனமும் இந்து மதமும் ஒன்றுதான் என்று பாடநூலில் இருப்பதை தமிழக அரசு மாற்ற வேண்டும். அரசாங்கத்துக்கு சித்தாந்த தெளிவு இருந்தாலும், பல அதிகாரிகளுக்கு அப்படி இருப்பதில்லை. அதிகார மட்டத்தில் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் களைய வேண்டும். அனைத்து தளங்களிலும் அரசின் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் பெயரை பாரத் என இவர்களால் மாற்ற முடியாது. அது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டமும் சாத்தியம் இல்லை. 

 

ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநில அரசுகளையும் இவர்கள் கலைக்கப் போகிறார்களா? இப்போது வட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பு இருக்கிறது. மோசமான தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்கிற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. வருகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக தோற்றால், சர்வாதிகாரமாக ஒரே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் இந்த நாடு பிளவுபடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினரின் உடையை காவி நிறத்துக்கு நாங்கள் மாற்றுவோம் என்கிறார் ஹெச். ராஜா. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே இவர்கள் உத்தரப்பிரதேசம் போல் மாற்றிவிடுவார்கள். 

 

தேசிய சின்னத்தை தங்களுடைய கட்சியின் சின்னமாக யாராவது வைத்திருக்க முடியுமா? ஆனால் பாஜக வைத்திருக்கிறது. இதுபோல்தான் பாரத் என நாட்டுக்கு பெயரை மாற்றும் முடிவையும் எடுக்கிறார்கள். புறவாசல் வழியாக வருவதே பாஜகவின் பாணி.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 


 

 

Next Story

'என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'- மோடி பேச்சு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
mn

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்''  என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

Next Story

“பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் தேர்வுத்தாள் கசிவு மையமாக மாறிவிட்டன” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
 Rahul Gandhi criticized BJP-ruled states have become exam paper leak center

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்த விவகாரத்தில் நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதித்து வருகிறார்.

பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மூலம் தேர்வில் திட்டமிட்ட முறையில் ஊழல் நடந்திருப்பதையும், இந்த பாஜக ஆளும் மாநிலங்களில், தேர்வுத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளதையும் தெளிவாகக் காட்டுகிறது. நமது நீதித்துறையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், இளைஞர்களின் குரலை வீதிகளில் இருந்து பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுக்க உறுதி அளித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.