Advertisment

அதிமுக தோல்வி.. ரசிக்கும் அண்ணாமலை.. திருந்தாத எடப்பாடி - புதுமடம் ஹலீம்

 Pudhumadam Haleem Interview 

திருவிழா போல் நடந்து முடிந்திருக்கிறது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்கிற எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும், 66000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை ஈவிகேஎஸ் இளங்கோவன் வீழ்த்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தேர்தல் குறித்த பல்வேறு கருத்துகளை நம்மோடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம்பகிர்ந்துகொள்கிறார்

Advertisment

பொதுவாக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் சிறப்பு. 2011 ஆம் ஆண்டு அதிமுகவும் தேமுதிகவும் பலமான கூட்டணி அமைத்திருந்தபோது கூட வெறும் 11000 வாக்கு வித்தியாசத்தில் தான் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் இதே தென்னரசு தான் நின்றார். 9000 வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர் கிட்டத்தட்ட 9000 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். இவ்வளவு பலமான போட்டி வாய்ந்த ஒரு தொகுதியில் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது மிகப்பெரிய சாதனை.

Advertisment

அதிமுகவுக்கு இது சாதாரண தோல்வியல்ல. கட்சியே தன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்றும், கொங்கு மண்டலம் தங்களுக்கு சாதகமானது என்றும், அதனால் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் எடப்பாடி நினைத்துக் கொண்டிருந்தார். எடப்பாடியின் சுயநலத்தால் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். கை சின்னத்தை எதிர்த்தே அதிமுக இவ்வளவு பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது என்றால், உதயசூரியனுடன் மோதியிருந்தால் இன்னும் பெரிய தோல்வியை சந்தித்திருப்பார்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இணைந்திருந்தால் இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்காது என்பது போல் பேசுகிறார் அண்ணாமலை. கொங்கு மண்டலம் என்பதால் தான் எடப்பாடியை ஆதரித்தோம் என்றும் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். தாங்கள் தான் பெரிய எதிர்க்கட்சி என்றும், இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது என்றும் தேர்தலுக்கு முன்பு வரை சொல்லி வந்தார் அண்ணாமலை. இப்போது அதிமுக வாங்கியிருக்கும் வாக்குகளில் பாஜகவின் வாக்குகள் எத்தனை? தேர்தல் முடிவுகளின் மூலம் இந்த அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பது வெளிப்பட்டு விட்டது.

இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்ற பிறகும் எடப்பாடி இன்னும் தன் தோல்வியை உணரவில்லை. டெபாசிட் வாங்கவே போராடினார்கள். எடப்பாடியின் அதீத நம்பிக்கை தான் அவர் தோல்விக்குக் காரணம். அவர் பாஜகவை நம்பி ஏமாந்துவிட்டார். தான் என்கிற அகம்பாவமும் தோல்விக்குக் காரணம். பாஜகவும் ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி தோற்க வேண்டும் என்று அமைதியாக வேடிக்கை பார்த்தனர். எடப்பாடியின் தோல்வியை பாஜக ரசிக்கிறது. அதன் மூலம் தன்னுடைய பேர வலிமையை அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறது.

இந்தத் தோல்விக்குப் பிறகு உடனடியாக பாஜக மூன்று மாநிலங்களில் வென்றதற்கு வாழ்த்துக் கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பாஜக அவரை முழுமையாக ஆதரிக்க மறுக்கிறது. ஒழுங்காகத் தேர்தல் வேலையும் செய்யவில்லை. எடப்பாடி உண்மையிலேயே வலிமையானவராக இருந்தால் உடனடியாக பாஜகவுடனான உறவைத் துண்டித்திருக்க வேண்டும். இந்தத் தோல்வியின் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரையும் மீண்டும் சேரச் சொல்லி இனி பாஜக அழுத்தம் கொடுக்கும்.

ஓபிஎஸ் முழுமையான பாஜகவின் முகம். அவரை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு இந்தத் தேர்தலை பாஜக பயன்படுத்திக்கொள்ளும். ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் தான் பாஜகவுக்கு லாபம். தன் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதால் பாஜகவுக்கு அஞ்சுகிறார் எடப்பாடி பழனிசாமி. இனி எடப்பாடியின் மீதான பாஜகவின் நெருக்கடி அதிகரிக்கும். இந்தத் தேர்தல் தோல்வியால் எடப்பாடிக்கும் ஒரு பயம் வந்திருக்கிறது. எவ்வளவு தோற்றாலும் அதிமுக தன்னுடைய அணுகுமுறையை மாற்றுவதில்லை. மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூட எடப்பாடியால் சொல்ல முடியவில்லை.

இப்போதும் எடப்பாடி வாக்காளர்கள் மீதுதான் குற்றம் சுமத்துகிறார். தன்னுடைய தவறுகளை ஒத்துக்கொள்ளவில்லை. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்தனர். எடப்பாடியும் பக்குவம் மிக்க தலைவராக மாற வேண்டும்.

Annamalai admk interview
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe