Skip to main content

'ஜக்கி ஒரு பிசினஸ்மேன்' கடவுள் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மனிதர் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

k


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜக்கி வாசுதேவ் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரை பற்றி ஒரு கருத்து கூற, அவரை எப்படி தவறாக பேசலாம் என்று பாஜக தலைவர்கள் சிலர் நிதியமைச்சருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதன் உச்சகட்டமாக நேற்று பேட்டியளித்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா, பழனிவேல் தியாகராஜனின் பின்னணியை நாங்கள் ஆராய்வோம் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இவரின் இந்த விமர்சனம் பற்றிய கேள்விக்கு இன்று பதிலளித்த நிதியமைச்சர், "மனிதர்கள் பேசினால் பதிலளிப்பேன், தெரு நாய்களின் பேச்சுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது" என்று ஹெச். ராஜாவை கடுமையாக தாக்கி பேசினார். இந்த சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, இதுதொடர்பான கேள்வியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,  


ஜக்கி வாசுதேவ் என்ற மனிதர் ‘நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்’ என்று திட்டத்தை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் நடத்தினார். அதற்காக கர்நாடகா மாநில நீதிமன்றத்தில் கூட அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த சமயம் நீங்களும் கூட உங்களை வித்தியாசமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதனால் இன்னும் அந்த கேள்விகள் இருப்பது போல தானே தெரிகிறது?


ஜக்கி வாசுதேவை நான் நல்ல நபராக கருதுவதில்லை. எனக்கு தெரிந்த வரையில் அவர் ஒரு நல்ல தொழிலதிபர். சிவராத்திரிக்கு, அங்கு வருபவர்களிடம் 5000, 50,000, 5 லட்சம் என டிக்கெட்டுக்காக பணம் வசூலிக்கிறார்கள். பின்னர் அங்கு சென்று பதிவு செய்தால் ஏடிஜி சான்று எழுதி கொடுக்கிறார்கள். வருமானத்துறை ஆணைப்படி, பலன் வாங்காமல் கொடுக்கிற பணத்திற்குதான் வருமான வரி நன்கொடை என்ற நடைமுறை உள்ளது. ஆனால் இவர்கள் நுழைவு பதிவிலேயே ஏடிஜி சான்று பதிந்து கொடுத்தால் என்ன அர்த்தம்? அதனால், நான் இதை பற்றியெல்லாம் பேச வரவில்லை. எனக்கு என்று எத்தனையோ பணிகள் இருக்கிறது. அவர் இறைவன் பெயரை வைத்து சம்பாத்தியம் செய்கிற ஒரு நபர், அந்த ஒரு வரியே அவருக்கு போதுமானது. அதனால் அதோடு அதை விடுங்கள். அவரை விட சிறந்த நபர், எந்த ஒரு தவறான நோக்கமும் இல்லாத, லாப எண்ணங்கள் இல்லாத ஏதோ ஒரு சமூதாய அடிப்படையில் வந்த பழைய வேதங்கள் சம்பந்தமாக படித்தவர்களிடம் இதை அனைத்தையும் எப்படி சிறப்பாக மாற்றலாம் என்று கேட்டு சொல்லுங்கள். எனக்கு நிறைய ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை சேர்ந்த நண்பர்கள் மற்றும் மிக மூத்த வழக்கறிஞர்களும் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். 

 

அதே போன்று சக்கரவர்த்தியை கூட எடுத்துக்கொண்டோம் என்றால் அவர் மிக நாகரிகமான நபர். அவருடைய சொந்தங்கள் நீதி கட்சிகளில் உள்ளவர்கள். மேலும் என்னுடைய அப்பாவுக்கு மிக நெருக்கமானவர், என் மேல் ஒரு நல்ல எண்ணம் வைத்திருப்பவர், எங்களுக்கு இடையிலான இந்த உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எங்களுடைய குடும்பத்தில் தாத்தா நீதி கட்சி, பாட்டிக்கு இரண்டு சகோதரிகள், அவர்களின் கணவரில் ஒருவர் பக்தவச்சலம், மற்றொருவர் ஜோதி அழகேசன் என இருவரும் காங்கிரஸ் கட்சியினர். ஆனால் நாங்கள் என்றாவது ஒரு நாள் இந்த வேறுபாட்டினால் சாப்பிடாமல், சந்தோஷமாக இல்லாமல் இருந்திருக்கிறோமா? அதிலும் என்னுடைய அப்பாவிற்கு வழி காட்டியாக இருந்தவர் பக்தவச்சலம் தாத்தாதான். காரணம் என்னுடைய தாத்தா அரசியல் விட்டு வந்து விட்டார். என்னுடைய அப்பாவின் முழு நேர அரசியல் ஆசானாக இருந்தவர் பக்தவச்சலம் தாத்தா. ஏனென்றால் எங்க அப்பா முழு நேரமும் அவர் வீட்டில் தங்கி படித்தார். ஆகவே அரசியல் என்பது மக்கள் பணி என்று இருக்க வேண்டும். கொள்கை, திட்டம் என அவர் அவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம்.  ஆனால் நமக்குள் இருக்கும் மனிதநேயம் வேறாக இருக்காது. ஜக்கி வாசுதேவ் கேட்கிற கேள்விக்கோ, இந்த மாதிரி தீவிர இந்துத்துவ ஆட்கள் கேட்கிற கேள்விக்கோ எனக்கு பதில் சொல்ல நேரம் கிடையாது. 

 

ஆனால் நல்ல நாகரிகமான மனிதர், அவருக்கு ஏற்கனவே தொழில் இருக்கு, நல்ல வளர்ச்சி இருக்கு அவர் ஆன்மிக அடிப்படையில் சொல்கிறார். இதை ஏன் தப்பா நினைக்கிறீர்கள்? ஏன் கோயில்களை அரசிடம் இருந்து பிரிக்கக் கூடாது என்று கேட்கிறார். அவரின் கேள்விக்கு நானே ஒரு முறை கூறியிருக்கிறேன், அரசாங்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர நினைக்கும் நீங்கள், அதற்கு பின்பு அதை என்ன பண்ணுவீர்கள், எப்படி கையாளுவீர்கள், யாரிடம் கொடுப்பீர்கள் என்று கேட்டேன். இப்பொழுது ஆட்சியில் இருக்கும் நான் சொல்கிறேன், ‘இந்த இந்த வகையில் இப்படி சிறப்பிக்கலாம், இதை எல்லாம் திருத்தலாம் அவ்வாறு நீங்கள் எதையாவது நினைத்தீர்கள் என்றால் அதை என்னிடம் எழுதி கொடுங்கள். நானே முதல் ஆளாக அதை எடுத்துக்கொண்டு என்னுடைய நண்பரான அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொடுத்து பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்கிறேன். நல்ல எண்ணத்துடன் வருபவர்கள் எப்படியோ ஒரு நல்ல முடிவுக்கு வந்து விடலாம். ஆனால் தவறான எண்ணத்துடன் வருபவர்களிடம் நான் என்றைக்குமே நாம் ஒரு நல்ல புரிந்துணர்வுக்கு வர முடியாது. 

 

சேகர் பாபு ஒரு பேட்டியில் அவர் மீது உள்ள முழு கருத்துகளை முழுவதையும் கேட்கப் பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், நான் அந்த பேட்டியை முழுவதுமாக பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய கருத்து  என்னவென்றால் இது ஒரு தனி நபர் சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு சிஏஜி ரிப்போர்ட். இதை மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில் என் கண்ணால்  பார்த்திருக்கிறேன். காரணம் நான் பொதுக்கணக்கு குழு உறுப்பினராக பணியாற்றி உள்ளேன்.  அதனால் எந்த வருடம் எந்த பத்தி என்பது வரை எனக்கு தெரியும். ஆனால் மாண்புமிகு அமைச்சர் இருப்பவற்றை முழுமையாக ஆய்வு செய்து சொல்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விஷயம் பல சமயங்களில் பொதுக்கணக்கு குழுவில் விவாதத்திற்கு வந்துள்ளது. அந்த விஷயம் அரசியல் ரகசிய மரபிற்கு உட்பட்ட ஒன்று. அதனால் அதை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. அறிக்கை ரகசியம் கிடையாது, தணிக்கை குழு நடவடிக்கை ரகசியமானது. காரணம் இந்த நடவடிக்கையானது என்றைக்கு அறிக்கையாக மேஜையில் சமர்பிக்கப்படுகிறதோ, அன்று அது பொதுவானவை என்றாகிவிடும். இதைஅறிந்த அமைச்சர், தான் பின்பு இதை முழுமையாக ஆராயவுள்ளோம் என்று கூறியுள்ளார். பொது அறிக்கையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் அனைத்துமே தெளிவாக உள்ளது. அதன்படி, ‘வனத்துறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பல 10 ஆயிரம சதுர அடி கட்டப்படிருக்கிறது. எந்த வகையான மையத்தில் கட்டக்கூடாதோ அந்த வகையான மையத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை போல் ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரில் குறிப்படப்படவில்லை. எந்த நிறுவனமோ அந்த பெயர் தான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது’ என்றார்.