ADVERTISEMENT

முதல்வர் வழங்கிய பதவி உயர்வு; சலசலப்பில் தலைமைச் செயலகம்! 

05:29 PM Dec 08, 2023 | tarivazhagan

அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில் பணி நீட்டிப்பும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்ட விவகாரம், அரசு அதிகாரிகளிடம் கொந்தளிப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருப்பவர் சீனிவாசன். கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலுக்கு மிக நெருக்கமானவர் இந்த சீனிவாசன். இவரை வைத்து சட்டப்பேரவை செயலகத்தில் நடக்கவேண்டிய பல காரியங்களை எடப்பாடி பழனிச்சாமியும் தனபாலும் நடத்திக்கொண்டனர். இதற்காகவே, சிறப்பு செயலாளர் என்ற நிலையிலிருந்த சீனிவாசனை, பேரவையின் செயலாளராக 2018-ல் பதவி உயர்வளித்து அழகுபார்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட அ.தி.மு.க. விசுவாசி சீனிவாசன், நவம்பர் 30-ந் தேதி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த நிலையில், மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்பும், முதன்மைச் செயலாளராக பதவி உயர்வும் அவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது தி.மு.க. அரசு. சீனிவாசனின் இந்த பணி நீட்டிப்பும் பதவி உயர்வும்தான் தற்போது பலத்த சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.

இந்த பணி நியமன சர்ச்சை, கோட்டையிலுள்ள உயரதிகாரிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி வரும் நிலையில், இந்த பணி நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர் தமிழ்நாடு தலைமைச் செயலகம் சங்கத்தினர்.

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசனிடம் பேசியபோது, "அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட எந்த ஒரு உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளாக இருந்தாலும் பணி நீட்டிப்பு வழங்குவதில்லை என்கிற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது தி.மு.க. அரசு. அப்படிப்பட்ட நிலையில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவானுக்கு 3 ஆண்டுகால பணி நீட்டிப்பும், பதவி உயர்வும் கொடுத்திருப்பதுதான் எல்லோருக்கும் அதிர்ச்சி.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உயர்த்தப்பட்ட விவகாரத்தில், பலரின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. புதிய பணியிட நியமனங்களும் பாதிக்கப்பட்டன. அப்படிப்பட்ட சூழலில், சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பணி நீட்டிப்பு, சட்டப்பேரவை செயலக ஊழியர்கள் பலரின் பதவி உயர்வு உரிமைகளை பறித்திருக்கிறது.

பேரவையின் செயலாளராக அ.தி.மு.க ஆட்சியில் சீனிவாசன் நியமிக்கப்பட்டபோது, ‘பேரவைத் தலைவர் (தனபால்) விரும்புகிறார் என்பதற்காக பேரவை விதிகளின் முதுகெலும்பை உடைக்க முடியாது. இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில் பணி மூப்பு, கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி சீனிவாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்று அன்றைக்கு கண்டித்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த சீனிவாசனுக்குத் தான் தி.மு.க. ஆட்சியில் தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத்தான் ஜீரணிக்க முடியமால் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் சீனிவாசன் இருந்தபோது விதிகளை மீறி சிறப்பு செயலாளர் மற்றும் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ள நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது ஆரோக்கியமானதல்ல! இந்த பணி நீட்டிப்பை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்'' என்கிறார் வெங்கடேசன்.

அரசியல் ரீதியாகவும் சீனிவாசனின் பணி நீட்டிப்பு விவகாரம் விமர்சிக்கப்படும் நிலையில், இதுகுறித்து அறிக்கை கொடுத்துள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமானால், ஓய்வுபெறும் நிலையில் இருப்பவரின் இடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் இல்லையெனில் பணி நீட்டிப்பு கொடுத்து நியாயப்படுத்தலாம். ஆனால், சீனிவாசன் அத்தகைய தனிச்சிறப்பு கொண்டவரல்ல! அவரது இடத்தை நிரப்ப தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். பேரவை செயலாளராக விதிகளுக்குப் புறம்பாக 2018-ல் சீனிவாசன் நியமிக்கப்பட்ட போதே, கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சீனிவாசனை விட கூடுதல் தகுதிகளைப் பெற்றவர்களாக இருந்தனர். இவர்களில் ஒருவரைத்தான் பேரவை செயலாளராக நியமித்திருக்கவேண்டும்.

அன்றைக்கு பாதிக்கப்பட்ட வசந்திமலர், சீனிவாசன் ஆகியோர் தற்போது சிறப்பு செயலாளர், கூடுதல் செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களைத்தவிர, இணைச் செயலாளர் நிலையில் உள்ள 7 பேரில் மூத்தவரான (சீனியர்) சாந்தி என்பவரும் பேரவை செயலாளருக்கு தகுதியானவர். ஆனால், அவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதால் அவரைவிட கூடுதல் தகுதிகளும் பணி மூப்பும் (சீனியாரிட்டி) கொண்ட வசந்திமலர், சுப்பிரமணியன் ஆகியோரின் செயலாளராகும் வாய்ப்பு சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்'' என்கிறார்.

அரசியல்ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சீனிவாசனின் பணி நீட்டிப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கோட்டையில் மேலும் நாம் விசாரித்த போது, "ஆளும் கட்சியினருக்கு சாதகமாக இயங்கினால் அல்லது முக்கிய அமைச்சர்களை கைக்குள் வைத்துக்கொண்டால் அந்த அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில், பேரவை செயலாளராக இருந்த ராஜாராமன், செல்வராஜ், ஜமாலுதீன் ஆகியோருக்கு இப்படித்தான் பணி நீட்டிப்பு வழங்கினர். இதனால் பலர் பாதிக்கப்பட்டதுடன், பணி நீட்டிப்பு என்கிற விவகாரத்தில் ஆளும் கட்சிமீது கறைபடிந்தது.

இத்தகைய கறை, தி.மு.க. ஆட்சியில் படிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஓய்வு பெறும் அரசு அதிகாரிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அவர் எடுத்த முடிவை அவரே மாற்றிக்கொள்ளும் வகையில் சீனிவாசனுக்காக முக்கிய அமைச்சர் ஒருவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இயங்கி சாதித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வை வீழ்த்தி தி.மு.க. ஆட்சி 2021-ல் அமைந்தபோது, அ.தி.மு.க. விசுவாசிகளாக அதுவும் எடப்பாடியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள் பலரும் மாற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தலைமைச் செயலகத்தில் இருந்தது. அந்த வகையில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர விசுவாசியான சீனிவாசனும் உடனடியாக மாற்றப்படுவார் என சட்டப்பேரவை செயலகமே எதிர்பார்த்தது.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசிகளாக இல்லாதவர்கள் பலர் மாற்றப்பட்டார்களே தவிர, உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகளான பலர் மாற்றப்படாததுடன் முன்பை விட வலிமையான துறைகளில் உயர் பதவிகளை கைப்பற்றிக்கொண்டார்கள். இல்லையெனில், எடப்பாடி ஆட்சியின் சுகாதாரத் துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்கும் சூத்திரதாரியான, மு.க.ஸ்டாலினால் கண்டிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாநாத், முதல்வர் ஸ்டாலினின் செயலாளராக நியமனம் பெற்றிருக்கமுடியுமா?

அந்த வகையில், எடப்பாடியின் விசுவாச ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பலரும், தி.மு.க. ஆட்சியில் பசையான துறைகளைக் கைப்பற்றிய அதே டெக்னிக்கை பயன்படுத்தி சீனிவாசனும் தனது பதவியை தக்கவைத்துக் கொண்டார். கடந்த இரண்டரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மிக பவர்ஃபுல் அதிகாரியாக தற்போது வளர்ந்து நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசியான சீனிவாசன். இந்த விவகாரம், நேர்மையான நிர்வாகத்தைத் தர நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கெட்டபெயரை உருவாக்கும்'' என்கிறார்கள் சட்டப்பேரவை செயலக அதிகாரிகள்.

இந்த நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக ஆலோசித்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT