ADVERTISEMENT

"எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இவ்வளவுதான்; பணத்தை கையில் கொடுக்க மறுத்த எம்ஜிஆர்..." - ராஜன் பகிர்ந்த சுவாரசியம்

07:16 PM Nov 07, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் எம்ஜிஆர் தொடர்பாகப் பேசினார். அவர் பேசியதாவது, "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு மனிதத் தன்மை மிக்க, மனிதநேயம் மிக்க, மனிதாபிமானம் உள்ள மாமனிதராக வாழ்ந்து மறைந்தவர். எம்ஜிஆர் போல் ஒரு மனிதரை இந்த தமிழ்ச் சமூகம் இதற்கு முன் கண்டதில்லை. அவர் ஆரம்பத்தில் திரையுலகிற்கு வந்தபோது அவருக்கு 5 ஆயிரம்தான் சம்பளம். ஒரு படம் வெற்றி பெற்றால் அது ஏழாயிரம், எட்டாயிரம் என்று அவர் சம்பளம் உயரும். இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் பத்தாயிரம் என்ற அளவில் அவரின் சம்பளம் உயர்ந்து வந்தது. எம்ஜிஆர் கடைசியாக வாங்கிய சம்பளம் ஒரு லட்சம். அவர் நடித்த படம் நன்றாக ஓடினால் தயாரிப்பாளர் லாபம் அடைவார், இயக்குநர் லாபம் அடைவார், வினியோகஸ்தர் லாபம் அடைவார்கள். ஆனால் இது அனைத்தும் அந்தக் காலம். தற்போது என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.

ஒரு படம் வெளியாக வேண்டும் என்றால் இவன் முதலில் 5 லட்சம் கொடுக்கிறான். படம் ஓடினால் 10 லட்சம் திருப்பி கேட்கிறான். இயக்குநரின் சாமர்த்தியத்தால் படம் ஹிட் அடித்தால் சம்பளம் 5 கோடி என்கிறான். அடுத்த படம் 50 கோடி என்கிறார்கள். இதை எல்லாம் நாம் இந்தக் காலத்தில் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். ஆனால் சினிமா உலகில் எம்ஜிஆர் இறைவனாக வாழ்ந்தார். ஶ்ரீதர் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநர். நல்ல படங்களைக் கொடுத்து இந்தியாவின் புகழை உலக அளவுக்கு எடுத்துச் சென்றவர். ஆனால் அவரின் கடைசிக் காலத்தில் நொடித்துப் போனார். கடன் பிரச்சனை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்.

எம்ஜிஆருக்கு அவர் ஒரு இயக்குநர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட பழக்கம் எதுவுமில்லை. ஆனால் அவர் கஷ்டப்பட்டு வருகிறார் என்பதை அறிந்த அவர், தன்னுடைய உதவியாளர் மூலம் அவரை வீட்டுக்கு அழைக்கிறார். அதுவும் காலையில் வரச் சொல்கிறார். ஏனென்றால் அவருடன் சாப்பிட வேண்டும் என்று அனைவரையும் விரும்புவார். வெறுங்கையை மட்டும் கொடுத்து அனுப்பும் ஆள் அவர் அல்ல. அதே போல் அவர் வருகிறார், என்ன காரணம் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்கிறார். அவரும் என்ன காரணம் என்று கூற, இப்போது ஒரு படத்தை இயக்குகிறீர்களா என்று கேட்கிறார். அவரும் நிச்சயம் செய்வேன் என்கிறார். அப்படி என்றால் தெலுங்கில் தற்போது நல்ல ஹிட் படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த உரிமையை வாங்கிக் கொள்ளுங்கள். நாம் சேர்ந்து அந்தப் படத்தைச் செய்வோம் என்றார்.

அவரும் மிகுந்த சந்தோஷத்தோடு சரி என்று சொல்லிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்து ஏதோ யோசனையில் நின்றார். உடனடியாக சுதாரித்த எம்ஜிஆர் அந்தப் படத்தை வாங்கப் பணம் வேண்டுமல்லவா என்று கூறிக்கொண்டே ஒரு லட்சம் பணத்தை அவரிடம் உதவியாளர் மூலம் கொடுக்கிறார். இவ்வாறு எத்தனையோ கலைஞர்களை அவர் வாழ வைத்தவர். ஒரு கட்டத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் வருமானமின்றி பணத்தை இழந்து நொடிந்து போய்விட்டார். அவரைப் பற்றி எம்ஜிஆரே பலமுறை கூறியிருக்கிறார். என்னை எல்லாரும் வள்ளல் என்கிறார்கள், எனக்கு அந்த குணத்தை ஏற்படுத்திக் கொடுத்தவரே இவர்தான் என்று. அந்த அளவுக்கு அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்தார்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், என்எஸ்கே உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் சென்ற எம்ஜிஆர், அவரிடம் நலம் விசாரித்துவிட்டு ஒரு கட்டு பணத்தை எடுத்து அவரின் தலையணைக்குப் பின்புறம் வைத்துவிட்டு வந்துவிடுகிறார். வீடு திரும்பும் வழியில் அவரின் உதவியாளர் அண்ணே, பணத்தை அவர் கையில் கொடுக்காமல் ஏன் நீங்கள் பின்புறம் வைத்துவிட்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு எம்ஜிஆர், நான் அவரிடம் சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். அவருக்கு என்னால் பணம் தர என் மனம் இடம் தராது என்றார். எம்ஜிஆர் மாதிரி இன்னொரு மனிதன் இந்த பூமியில் இனி பிறக்கவே முடியாது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT