Advertisment

"பள்ளிக்கு படிக்க வந்த என்னை கூலி வேலை செய்வதற்கான ஆட்களாக மாற்ற போகிறார்கள்..." கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு!

PRINCE GAJENDRA BABU

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வித்துறையில் இன்று நிலவும் சவால்கள், தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது, புதிய கல்விக்கொள்கை எனக் கல்வி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பேசினார். அவை பின்வருமாறு...

Advertisment

"கல்வி உரிமைச் சட்டம் என்பதையே கல்வி மறுக்கும் உரிமைச் சட்டமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. கல்வி கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகுவதற்காகத்தான் தனியார் பள்ளியில் 25 சதவீதம் குழந்தைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது. அந்தச் சட்டம் கூறும் 25 சதவீதம் என்பது யார்? வாய்ப்பு வசதியற்ற விளிம்புநிலை குழந்தைகள்தான் இந்தப் பட்டியலில் வருகிறார்கள். இவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்தால் இவர்களுக்கு மதிய உணவு, சீருடை எல்லாம் கிடைக்குமல்லவா. நீங்கள் அந்தக் குழந்தைக்குத் தனியார் பள்ளிக்கான கட்டணத்தை செலுத்திவிட்டீர்கள். மதிய உணவு, சீருடையெல்லாம் அந்தக் குழந்தைகளுக்கு யார் கொடுப்பது? அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தி ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் அருகமை பள்ளியாக அறிவித்து, அரசுப் பள்ளி மூலமாக கல்வியைக் கொடுப்பதுதான் மெய்யான கற்றல் செயல்பாட்டிற்கு உதவும். அதுதான் உண்மையான கல்வி உரிமையும்கூட.

Advertisment

உங்களுக்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன். நுங்கம்பாக்கம் லேக் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அந்த லேக் ரோட்டின் பின்புறம் கக்கன் காலணி, காமராஜபுரம் உள்ளது.அந்தப் பகுதியில் இருந்து எத்தனை மாணவர்கள் அந்தத் தனியார் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள் எனக் கணக்கெடுத்துப் பாருங்கள். அதேபோல திருமலை பிள்ளை ரோட்டில் ஒரு பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் பின்புறம் பெரிய குடிசைவாழ் பகுதி உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த எத்தனை பேர் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் எனக் கணக்கெடுத்துப் பாருங்கள். உன் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் ஏன் உன் பள்ளியில் சேரவில்லை என்ற கேள்வியை அந்தந்த தனியார் பள்ளிகளிடம் அரசாங்கம் கேட்க வேண்டுமா இல்லையா?

அரசுப் பள்ளிகள் தரமற்றது என பிரச்சாரம் செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் நிறைய விளம்பரங்கள் கொடுக்கின்றன. அரசுப் பள்ளிகளுக்கு யார் விளம்பரம் கொடுப்பது? எந்த வகையான வசதிகளும் இல்லை என்று நீங்கள் கூறினாலும்கூட, அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் மெய்யான கற்றல் செயல்பாடுகள் உள்ளன. கற்றல் என்பது ஒரு குழந்தை எவ்வாறு ஒரு விஷயத்தை உள்வாங்குவது எனக் கற்றுக்கொள்வது. பாடப்புத்தகங்களில் நீங்கள் எழுதியதை மனப்பாடம் செய்து கூறுவது கற்றல் செயல்பாடல்ல. மெய்யான கற்றல் செயல்பாடுகள் நடைபெறும் இடம் அரசுப் பள்ளிதான்.

புதிய கல்விக்கொள்கை செயல்படுத்தப்படும்போது தற்போது இயங்கும் தன்மையோடு பள்ளிகள் இயங்காது. பள்ளிகள் என்பது வெறுமனே வேலைத்திறன் பெறக்கூடிய மையங்களாக மாறிப்போகும். கல்வி பெறுவதற்காகத்தான் நான் வருகிறேன்; ஆனால், என்னைக் கூலி வேலை செய்வதற்கான ஆட்களாக மாற்றி அனுப்பப்போகிறார்கள். 3ஆம் வகுப்பிலேயே குழந்தைக்கு ஒரு வேலையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்குள்ளேயே உள்ளூர் வேலைத்திறன் தேவையைக் கற்றுக்கொண்டு, எட்டாம் வகுப்பு முடித்து வெளியே வருகையில் அதற்கான சான்றோடு வெளியே வர வேண்டுமாம். இது மூதறிஞர் ராஜாஜி காலத்தில் கொண்டுவரப்பட்ட கல்விக்கொள்கைக்கு இணையானது. இதைத்தான் தந்தை பெரியார் குலக்கல்வி என்று கண்டித்தார். இவர்கள் கூறுவது தொழிற்கல்வியோ, தொழில்நுட்பக் கல்வியோ அல்ல; வேலைக்கான திறன். அந்தக் குழந்தைக்கு வேலைக்கான திறன் கொடுப்பதற்கான தேவை எங்கிருந்து வருகிறது. இதெயெல்லாம் தாண்டி அந்த மாணவன் பன்னிரண்டாம் வகுப்புவரை முடித்துவிட்டால் அதுவும் கல்லூரிக்குச் செல்வதற்கான தகுதி இல்லை என்கிறார்கள். எந்தப் பட்டப்படிப்பாக இருந்தாலும் அகில இந்திய அளவில் திறனறி தேர்வு நடத்தப்படும் என்கிறார்கள். அதில் எடுக்கப்படும் மதிப்பெண்ணை வைத்தே கல்லூரி சேர்க்கை நடைபெறுமாம். இது பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கும் செயல்".

Prince Gajendra Babu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe