ADVERTISEMENT

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு...  மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்! 

05:31 PM Jan 08, 2024 | tarivazhagan

தெற்கு ஆசிய கடலில் பல தீவுகளைக் கொண்ட நாடு மாலத்தீவு. கடலும், இயற்கையும் சூழ்ந்த மாலத்தீவு இளைஞர்களுக்கும், தேசாந்திரிகளுக்கும் ஒரு கனவு இடம். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ள குடியரசான மாலத்தீவின் முக்கிய வருமானம், சுற்றுலாத்துறையைச் சார்ந்தே இருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நாடுகளின் ஆட்சியில் இருந்த மாலத்தீவு, சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்து, பிறகு சிங்களவர்களின் ஆட்சிக்கு மாறியது. சிங்களர்களின் ஆட்சியின்போது அங்கு பௌத்த மார்க்கம் பரவியது. பிறகு 1153ல் சுல்தான் ஆட்சியின் கீழ் வர இஸ்லாம் மார்க்கம் பரவியது. 1558ல் போர்ச்சுகல், 1654ல் நெதர்லாந்து, 1887ல் பிரிட்டன் என தொடர்ந்து பல்வேறு நாடுகளின் கீழ் இருந்த மாலத்தீவு, கடந்த 1965ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்று, 1968ம் ஆண்டில் குடியரசு நாடாக மாறியது. குடியரசான மாலத்தீவில் அதிபர் ஆட்சி முறை இருந்துவருகிறது.

ADVERTISEMENT

பிரிட்டனிடம் இருந்து விடுதலையடைந்து குடியரசான பிறகும், சிறிய நாடான மாலத்தீவு பெரும் அளவில் இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளை தன் பொருளாதாரத்திற்கு நம்பியுள்ளது. இந்தியா பல்வேறு கால கட்டங்களில் மாலத்தீவுக்கு தனது உதவி கரங்களையும் நீட்டியுள்ளது. குறிப்பாக 1988ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையில் இருந்து ஒரு போராளிக்குழு மாலத்தீவில் ஊடுருவி அன்றைய மாலத்தீவு அதிபர் மௌமூன் அப்துல் கையுமைக் கைது செய்ய திட்டமிட்டது. ஆனால், அப்போது இந்தியாவில் தஞ்சமடைந்தார் மௌமூன் அப்துல். பிறகு அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் மௌமூன் அப்துல் வைத்த கோரிக்கையை ஏற்று, ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி மாலத்தீவை காப்பாற்றினார். 2018ல் மாலத்தீவு மக்கள் கடுமையான குடிநீர் பிரச்சனையைச் சந்தித்தபோது, பிரதமர் மோடி கப்பல்கள் மூலம் தண்ணீர் அனுப்பினார். மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், 2 ஹெலிகாப்டர்கள் ஒரு விமானம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பல சமயங்களில் இந்தியா மாலத்தீவுக்கு கடன் உதவிகளையும் வழங்கியுள்ளது. இந்தியா மற்றும் மாலத்தீவுகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜதந்திர, ராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. இப்படியான உறவு கொண்ட மாலத்தீவை தற்போது இந்தியர்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியர்கள் மாலத்தீவை புறக்கணிக்க கோரிக்கை வைப்பதற்கு பின்னால் இரு முக்கிய நிகழ்வுகள் கடந்த சில தினங்களில் நடந்துள்ளன. ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாலத்தீவு தேர்தலில், அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு, இன்று (ஜனவரி 8) தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா செல்லவிருக்கிறார். மற்றொன்று, இந்திய பிரதர் நரேந்திர மோடி கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் அரசு முறை பயணமாக லட்சத் தீவுக்கு சென்றுவந்தார். அது குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள். இவ்விரு நிகழ்வுகளே மாலத்தீவு புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

மாலத்தீவு போலவே லட்சத்தீவும் ரம்மியமான கடலும், இயற்கையும் சூழ்ந்த பகுதி. இப்படியான லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், லட்சத்தீவு குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி, “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த பதிவுக்கு மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார். மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது" என்று தெரிவித்தார். மாலத்தீவின் தகவல், கலைத் துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பதிவிட்டு, இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல், மற்றொரு அமைச்சரான மால்ஷா ஷெரீப், மோடி முர்தாபாத் என்று மோசமாக விமர்சித்தார்.

மாலத்தீவின் ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ், “சுற்றுலா துறையில் எங்களுடன் இந்தியா போட்டி போடுவது ஒரு மாயை. நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா? இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா? இந்திய சுற்றுலா நகர அறைகளின் துர்நாற்றம் ஒன்றே, சுற்றுலா துறையை படுபாதாளத்திற்கு தள்ளிவிடும்" என்று விமர்சித்தார். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி மாலத்தீவை புறக்கணிப்போம் எனும் பிரச்சாரத்திற்கு எடுத்து சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாலத்தீவு அரசு சார்பில், நேற்று விரிவான விளக்கம் வெளியிடப்பட்டது. அதில், "அமைச்சர்களின் கருத்துகளுக்கும் மாலத்தீவு அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து. வெளிநாட்டு தலைவர்களை அவதூறாக விமர்சிப்பதை மாலத்தீவு அரசு ஏற்காது. சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்போர் மீது அரசு தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், எக்ஸ் பக்கத்தில் Boycott Maldives எனும் ஹாஷ் டேக்குகள் டிரெண்டாகிவருகிறது.

இந்தியாவின் கவனிக்கக்கூடிய திரைப்பிரபலங்களும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் மாலத்தீவு சுற்றுலா செல்வதற்கு எதிராக தங்கள் கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் அக்‌ஷய் குமார், "மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துக்களைக் கூறினர். மாலத்தீவுக்கு அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிற்கு அவர்கள் இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அண்டை நாடுகளுக்கு நாங்கள் நல்லவர்களாகவே இருப்போம். ஆனால், தேவையில்லாமல் இப்படிப் பேசும் போது ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் மாலத்தீவுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன், எப்போதும் அதைப் பாராட்டினேன், ஆனால் கண்ணியம்தான் முதலில். முதலில் நாம் இந்தியத் தீவுகளைச் சுற்றிப் பார்ப்போம். நமது சொந்த நாட்டின் சுற்றுலாவை ஆதரிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், “எனது 50-வது பிறந்தநாளை மகாராஷ்டிராவின் சிந்து துர்க் கடற்கரையில் கொண்டாடினேன். அந்த தீவு கடற்கரை மிகவும் அழகானது. இந்திய தீவுகளுக்கு சுற்றுலா செல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதேசமயத்தில் பலரும் தங்களது மாலத்தீவு டிக்கெட்களை கேன்சல் செய்து அதனை Boycott Maldives எனும் ஹாஷ் டேக்குடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக மாலத்தீவில் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்ட 7,500 ஓட்டல் அறைகளும், 2,300 விமான டிக்கெட்களும் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT