Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கரால் திருப்தியடையாத மோடி...  எச்சரிக்கை செய்த பிரதமர்... அலெர்ட்டான எடப்பாடி! 

மார்ச் 22-ந்தேதி ஒருநாள் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த 19 ந்தேதி மக்களை கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. இந்த நிலையில் மறுநாள் 20-ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கரோனா வைரஸின் தாக்குதல் குறித்தும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

 

admkஇந்த ஆலோசனை குறித்து டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "கரோனா வைரஸின் தாக்குதல் குறித்து மாநில முதல்வர்களிடம் விவாதித்த பிரதமர் மோடி "கரோனாவின் தாக்குதலை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசர அவசியம். இதில் பல மாநிலங்கள் பின்தங்கியிருப்பது கவலை தருகிறது. சமூக தொற்றினை கண்டறிவதில் அலட்சியமாக இருந்ததால்தான் சீனா, இத்தாலி, ஈரான் நாடுகளில் நோயின் தாக்குதல் கொடூரமாக இருந்தது.

வெளிநாடுகளிலிருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளை முழுமையாக சோதித்து அனுப்புங்கள். இதுவரை 6,700 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். சமூக தொற்றாக இது மாறாமலிருக்க முழுமையாக கவனம் செலுத்துங்கள். மக்களை வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்துவது ஒன்றுதான் வழி'' என்று விவரித்தார்.

 

admkபல முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார்கள். குறிப்பாக, கேரள முதல்வர் பினராய் விஜயன், "மத்திய அரசு அறிவுறுத்துவதற்கு முன்பாகவே பல நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு சார்ந்த விசயங்களையும் கையிலெடுத்துள்ளோம். முதல்கட்டமாக, கேரளாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகளை நகரத்துக்குள் நுழையாமல் தடுத்துள்ளோம். மளிகைக்கடைகள் முதல் மதுக்கடைகள் வரை மக்களுக்கான இடைவெளியை 1 மீட்டர் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவாமல் தடுக்கவும் மக்களுக்கான அத்தியாவசிய திட்டங்களுக்காகவும் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கரோனா வைரஸை பேரிடராக கருதி 2000 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு எங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "மத்திய அரசின் அறிவுறுத்தலால் தனி வார்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறோம்' என்பதில் ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விவரித்திருக்கிறார். மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரேயின் நடவடிக்கைகளை பாராட்டினாலும், கூடுதல் கவனம் தேவை என்பதை வலியுறுத்தினார். அதே போல, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டினார் மோடி. தமிழக முதல்வர் எடப்பாடியிடம் பேசும்போது, "அரசின் நடவடிக்கையை விட உங்களின் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு திருப்தியை தருகிறது. ஆனால், இண்டர்நேசனல், டொமஸ்டிக் ஏர்போர்ட்டுகளில் தெர்மல் டெஸ்டிங்கில் கவனம் செலுத்தவில்லை.

 

admkஇது சமூக தொற்று. எங்களுக்கு கிடைத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் நீங்கள் கொடுத்த பட்டியலுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. அதிகம் பரவியதற்கு பிறகு நடவடிக்கை எடுப்பதில் பலன் கிடையாது' என்றிருக்கிறார் மோடி. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தலைமைச்செயலாளர் சண்முகமும் விளக்கமளித்தனர். ஆனால், அதில் திருப்தியடையவில்லை பிரதமர்'' என்று சுட்டிக்காட்டினார்கள் டெல்லி அதிகாரிகள்.

இதனையடுத்து தேசம் முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் சுய ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடித்தனர். சில மாநிலங்களில் பிரச்சனைகள் இருப்பதையறிந்து அந்த மாநிலங்களை மீண்டும் எச்சரிக்கை செய்திருக்கிறார் பிரதமர். சமூக இடைவெளியை மக்களுக்கு புரிய வைப்பதிலும் அதனை ஏற்படுத்துவதிலும் சில மாநிலங்கள் தோற்றுக்கொண்டிருக்கின்றன என மோடிக்கு மத்திய சுகாதாரத்துறையினர் சொல்லி வருகின்றனர்.

 

pmkபா.ம.க. எம்.பி. டாக்டர் அன்புமணி, "தமிழகத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருவது ஒரு டாக்டர் என்கிற முறையில் என்னை கவலையடைய செய்கிறது. உலக சுகாதார நிறுவன மருத்துவ ஆராய்ச்சியாளரும், அமெரிக்காவிலுள்ள நோய்த்தன்மைகள் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான ரமணன் லஷ்மி நாராயணன், இந்தியாவில் கரோனா வைரஸ் மூன்றாவது நிலையான சமூக பரவலை எட்டிவிட்டதாகவும், நோயில் பாதிக்கப்பட்ட சுமார் 1500 நபர்களை கண்டுபிடிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியா முழுவதும் 78 கோடி பேர் இந்த வைரஸால் தாக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கிறார். இதனால்தான் 3 வாரங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழக அரசு சொல்லும் புள்ளிவிபரங்களை விட அதிக பாதிப்பு இருப்பதாகவே தெரிகிறது. கரோனா தடுப்பில் இன்னும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை. அண்டை மாநில அரசுகள் தங்கள் மக்கள் மீது வைத்துள்ள அக்கறை போல தமிழக அரசிடம் இல்லை. அதனால் கரோனாவை தடுக்க, மக்களை தனிமைப்படுத்துவதுதான் ஒரே வழி'' என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

 

admkஇந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்கி வைக்குமாறு ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி அரசுக்கு பரிந்துரைத்தது மத்திய சுகாதார துறை. இந்த செய்தியறிந்து மக்களிடம் இனம்புரியாத ஒரு பயம் அதிகரிக்கத் துவங்கியது. இது குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, மார்ச் 31-ந்தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படவும், தமிழக முழுவதும் 144 தடையை அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.


இந்த ஆலோசனை குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "மூன்று மாவட்டங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்திய போதும், அது குறித்து சீரியஸ் காட்டவில்லை முதல்வர் எடப்பாடி. திங்கள் கிழமை இது குறித்து பிரதமர் அலுவலகம் கோபம் காட்டிய நிலையில்தான் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்த ஆலோசனையில், மூன்று மாவட்டங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட அனைத்து மாவட்டங்கள் மீதும் ஒரே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், சம்பந்தப்பட்ட 3 மாவட்டங்களில்தான் பிரச்சனை என நினைத்து மற்ற மாவட்ட மக்கள் அலட்சியமாக இருப்பார்கள். அனைத்து மாவட்டங்களிலுமே கண்காணிக்கப்படுபவர்கள் இருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அதனால், முடக்கம் என்பதை அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்படி நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.


"வெறும் முடக்கம் எனில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்லவும் வரவும்தான் தடை போடுவதாக அமையும். மீறினால், மக்களை வெளியே வராதீர்கள் என சொல்லலாம். ஆனால், மக்கள் கேட்பார்களா என தெரியாது. மக்கள் ஒன்று கூடுதலில்தான் சமூக தொற்று பரவுகிறது. அதனை தடுக்க 144 தடை உத்தரவுதான் சரியாக இருக்கும். ஒரு நபருக்கு மேலே கூட்டமாக யார் இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடலாம். அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மாநிலத்தில் இருக்கக் கூடாது. வாகனங்கள் இயக்கவும், அரசின் குறிப்பிட்ட துறைகள் தவிர்த்த மற்ற அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் முழுமையாக தடை விதிக்க வேண்டும். எல்லோரும் வலியுறுத்துவது போல இம்மாதம் 31-ந்தேதி வரை இதனை நடைமுறைப்படுத்தலாம்' என சொல்லியிருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

இதனை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள, முடக்கம் என்பதை தாண்டி 144 தடை உத்தரவு என்பதாக மாற்றப்பட்டது. இதனை எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்துவது என விவாதமும் எழுந்த நிலையில், மாவட்ட எல்லைகளை முடக்குவதால் ஒவ்வொரு ஊரிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அவகாசம் தரும் வகையிலும், சட்டமன்றத்தை 24-ந்தேதியுடன் ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாலும் 24-ந்தேதி மாலை 6 மணிக்கு மேலே அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.! இதன் படியே முடிவுகள் எடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தெரிவித்தார் எடப்பாடி'' என்கிறார்கள் சுகா தாரத்துறை அதிகாரிகள். சமூக இடைவெளியை மக்கள் உறுதி செய்வதிலும், நோயின் தீவிரத்தையும் அதன் பரவுதலையும் கண்டறிந்து அதனை தடுப்பதிலும்தான் எடப்பாடி அரசுக்கு சவால் காத்திருக்கிறது!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்