லீக்கான பிரதமரின் ஆடியோ; போருக்கு தயாராகும் தாய்லாந்து - கம்போடியா? என்ன நடக்கிறது?

1A

உலகம் போருக்கு புதிதல்ல, நாம் தொடர்ந்து பல போர் முறைகளை பார்த்து வருகிறோம்.  மொழிப்போரில் ஆரம்பித்து, மதப்போர், ஆயுதப் போர், பொருளாதாரப் போர் என நம்மைச் சுற்றி ஏதோ ஒரு வகையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அத்தனை போர் முறைகளை காட்டிலும், மிகவும் முக்கியமானது மற்றும் சிக்கலானது 'எல்லைப் போர்'. 

எல்லைகளே எதிரிகளை உருவாக்குகின்றன என சந்தேகமின்றிக் கூறலாம். அந்த அளவிற்கு இந்த எல்லை போர் முறை சட்டென்று பற்றிக்கொள்ளும் ஒரு நெருப்பாகவே இருக்கிறது. ஒரு சிறு தீப்பொறி எப்படி ஒரு காட்டை அழிக்குமோ, அப்படி ஒரு சிறு சச்சரவு, இரு நாடுகளின் எல்லைகளை அழித்துவிடும்.  ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர், ஏன் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் என தற்போது உலகில் நடந்து வரும் பல போர்களுக்கு எல்லைச் சண்டை தான் பின்னணி. பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக உள்ள எல்லை சண்டை, போராக மாறினால் எப்படி மக்களை பாதிக்கும் என்பதற்கு இந்த போர்களை உதாரணமாக சொல்லலாம்.

தற்போது நடக்கும் இந்த போர்களுக்கு எப்போது முடிவு என தெரியாமல் தத்தளிக்கும் உலக மக்களுக்கு, இதோ நாங்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளோம் என ஆயுதங்களை ஏந்தி அறிவித்துள்ளன தாய்லாந்தும், கம்போடியாவும். இந்த இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் இந்த எதிர்பாராத மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே வடக்கில் நிகழும் ரஷ்யா-உக்ரைன் போர், மேற்கில் நிலவும் இஸ்ரேல்-காசா போருடன் சேர்ந்து, தற்போது கிழக்கில் ஒரு போரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோதலும், போருக்கான ஆரம்பமும்:

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே போரா? இவர்கள் ஏன் இப்போது மோதிக்கொள்ளவேண்டும் என பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது அங்கு நிலவும் எல்லைப் பிரச்சனை. உலக மக்களின் பார்வையில் தாய்லாந்தும், கம்போடியாவும் அமைதியான நாடுகள், அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாடுகள் என தெரிந்தாலும், இந்த இரண்டு நாடுகளுக்கிடையே முழு அமைதி இல்லை என்றும், எதோ ஒரு வகையில் எல்லைச் சண்டை இருந்துகொண்டேதான் இருக்கிறது என்றும், அது பெரிய அளவில் வெடிக்காததால் உலக மக்களுக்கு இதுபற்றி தெரியவில்லை என்றும் இந்த இரண்டு நாட்டை சேர்ந்த மக்கள் ஒப்புக்கொள்வார்கள்.

எல்லையில் ஏற்பட்ட சிறு, சிறு சண்டைகள் தற்போது மோதலாக மாறி, பல நாடுகள், இந்தியா உட்பட, தங்கள் நாட்டு மக்களிடம் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சனை, இன்று நேற்றல்ல, ஒரு நூற்றாண்டாகவே நிலவிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. 1907ஆம் ஆண்டு, கம்போடியாவை ஆண்ட பிரெஞ்சுக்குக்காரர்கள் முதல்முறையாக தாய்லாந்து - கம்போடியா எல்லைக் கோட்டை தீர்மானித்தனர். அப்போது தீர்மானிக்கப்பட்ட இந்த எல்லைக் கொடு தான் தற்போது ஏற்பட்டிருக்கும் போர் சூழலுக்கு ஆணிவேர். இதுவரை, இந்த எல்லைக்கோட்டை தாய்லாந்து முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. கம்போடியாவும் விட்டுக்கொடுக்கவில்லை.

நூறு ஆண்டுகளாக தொடரும் இந்த முட்டுக்கட்டையின் விளைவே தற்போது இருநாடுகளும், 'மோதிப்பார்கலாம் வா' என மோதலில் இறங்கியுள்ளன. தாய்லாந்தும் கம்போடியாவும் சுமார் 815 கிலோமீட்டர் எல்லைக்கோட்டை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த எல்லைப் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம்  இந்த எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பழமையான வழிபாட்டுத்தலங்கள் தான். தேசிய ஒருமைப்பாட்டை இரு நாட்டுத்தலைவர்களும் முன்னிலைப்படுத்துவதால் இருநாட்டுமக்களும் இந்த வழிபாட்டுத்தலங்கள் தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என பரஸ்பர வார்த்தைப்போரில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக நீடித்த இந்த மோதல்போக்கு, தற்போது தாக்குதல்களுக்கு வித்திட்டுள்ளது. கடந்த மே மாதம், எல்லையில் தாய்லாந்து ராணுவப்படைகளுக்கும், கம்போடிய ராணுவப்படைகளுக்கும் ஏற்பட்ட ஒரு கைகலப்பில் ஒரு கம்போடிய ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதன் நீட்சியாக, தற்போது இரு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களின் உயிர்களை பணயம்வைத்து ஏவுகணைகளையும், தோட்டாக்களையும் பரிமாறிக்கொள்கின்றன.

போரின் முதல் வெற்றியே உயிர்பலி தான் என்னும் பார்வையில், பல மக்கள் தற்போது உயிரிழந்திருக்க, தாய்லாந்தும், கம்போடியாவும் போரை நோக்கி செல்கின்றதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஜூலை 23 அன்று, இந்த மோதல் தீவிரமடைய தொடங்கியது. ஜூலை 23 அன்று, தாய்லாந்தை சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்கள் கண்ணிவெடித் தாக்குதலில் காயமடைந்தனர். இந்த கண்ணிவெடிகளை, கம்போடியாதான் தங்கள் நாட்டில் புதைத்து என தாய்லாந்து குற்றம்சாட்டுகிறது. இந்த ஒரு சிறு தீப்பொறி போருக்கான ஆரம்பம் என்பதுபோல இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

 பிரச்னைக்குரிய வழிபாட்டுத்தலங்களும் துண்டிக்கப்பட்ட உறவுகளும்:

தாய்லாந்தும், கம்போடியாவும் அருகருகே இருந்தாலும் எப்போதும் நட்புடன் இருந்ததில்லை. 1950ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவு மலர்ந்தது. ஆனால், எல்லைச்சண்டை, தேசியவாத மனநிலை, மற்றும் வழிபாட்டுத்தலம் போன்ற விவகாரங்களால் இந்த உறவு பதற்றமாகவே இருந்தது. முக்கியமான வழிபாட்டுத்தலங்களை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடியதால் தூதரக உறவு பல முறை துண்டிக்கப்பட்டுள்ளன. அது தற்போதும் தொடர்ந்துள்ளது.

 

3a
பிரசாத் தா முயென் தோம் கோயில்

 

தற்போது நடக்கும் மோதலுக்கு மத்தியில், இருநாடுகளும் தத்தமது தூதர்களை திரும்பப்பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கிடையே இருக்கும் சாதகமான பொருளாதார உறவுகளுக்கு காரணமாக இருந்த தூதரக உறவுகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இதை சீனா தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிகளை எடுக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சீனாவின் மத்தியஸ்த முயற்சி.

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் உள்ள இரு முக்கியமான ஹிந்து வழிபாட்டுத்தலங்கள் இந்த எல்லைப்பிரச்சனைக்கு ஒரு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஒன்று, பிரீ விஹார் கோயில். மற்றொன்று, பிரசாத் தா முயென் தோம் கோயில். எல்லை அருகே இந்த தலங்கள் அமைந்துள்ளதால் இரு நாடுகளும் இந்த தளங்களை சொந்தம் கொண்டாடுகின்றன. இந்த தளங்கள் கம்போடிய எல்லைக்குள், தாய்லாந்து எல்லை அருகே அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. பிரசாத் தா முயென் தோம் கோயிலுக்கு அருகேதான் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் 16 மக்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அநேகமானோர் தாய்லாந்தை சேர்ந்தவர்கள்.

அதுமட்டுமின்றி, தற்போது தீவிரமடையும் இந்த தாக்குதலால் 1,40,000 தாய்லாந்து மக்களும், 20,000 கம்போடிய மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளனர். 1907ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லை தெளிவாக இல்லாததால், இந்த இரண்டு கோயில்களையும் இருநாடுகளும்  சொந்தம் கொண்டாடுகின்றன. கம்போடியா இந்த கோயில்களை தனது கலாச்சாரச் சின்னமாக பார்க்கிறது...ஆனால், இந்த கோயில்களுக்கு அருகில் பல தாய்லாந்து கிராமங்கள் இருப்பதால் இந்த கோயில்களை தனதாக்கிக்கொள்ள முயற்சிக்கிறது தாய்லாந்து. இருநாடுகளும் இந்த கோயில்களை சுற்றி ராணுவ படைகளை குவித்துள்ளன.

1907ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லையை கம்போடியா ஏற்றுக்கொண்டது. தற்போது, கம்போடிய அரசு பிரசாத் தா முயென் தோம் கோயிலில் மேற்கொள்ளும் கட்டுமான வேலைகள் தாய்லாந்தை கோபப்படுத்தியதாகவும், கம்போடியாவின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் தாய்லாந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த இரு கோயில்களை சுற்றியுள்ள எல்லைப் பிரச்சனை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஆனால், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது மோதல் தொடர்வதால், இதில் முழுமையான தீர்வை எட்டமுடியுமா என கேள்வி எழுகிறது.

 லீக்கான பிரதமரின் ஆடியோ...காலியான பதவி:

கடந்த மே மாதம் எல்லையில் மோதல் ஆரம்பித்தபோது, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னிடம் நடத்திய தொலைபேசி உரையாடல் லீக்கானதை தொடர்ந்து அவரின் பதவியை பறித்துள்ளது. லீக்கான அந்த ஆடியோவில், ஷினவத்ரா ஹுன் சென்னை 'Uncle' என அழைப்பதும், தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிப்பதும் பதிவாகியிருந்தது. இந்த ஆடியோ வெளியானதும், ஷினவத்ராவிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. விளைவு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

 

4a
paetongtarn shinawatra - பதவியிழந்த தாய்லாந்து பிரதமர்

 

பேடோங்டர்ன் ஷினவத்ராவின் தந்தையும், முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவும் ஹுன் சென்னும் நண்பர்கள் என தெரிகிறது. அந்த நட்பின் காரணமாகத்தான் பேடோங்டர்ன் ஷினவத்ரா, ஹுன் சென்னை 'uncle' என அழைத்தார் என்றும், அவர், நாட்டை விட தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்றும், நாட்டிற்கு எதிராக செயல்பட்டார் என்றும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. தற்போது இந்த மோதல், பல பொருளாதார தடைகளை கொண்டுவந்துள்ளது. தாய்லாந்து, கம்போடியா மீது எல்லைத் தடை விதித்துள்ளது. பதிலுக்கு, கம்போடியா, தாய்லாந்தின் பழங்களுக்கும், காய்கறிகளுக்கும், படங்களுக்கும் தடை விதித்துள்ளது.

 அமைதிக்கு தடையாக நிற்கும் சர்வாதிகார ஆட்சி?

 கம்போடியாவில் நடப்பது சர்வாதிகார ஆட்சி. கம்போடியாவை ஹுன் சென் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சிசெய்தார். 2023ஆம் ஆண்டு, அவர் அதிகாரத்தை தனது மகன் ஹுன் மனேட்டிடம் ஒப்படைத்தார். ஒற்றை குடும்ப ஆட்சி என்றே குறிப்பிடலாம். அதிகாரத்தை தன் மகனிடம் அளித்த பிறகு, ஹுன் சென் கம்போடிய பாராளுமன்றத்தில் உள்ள செனட் சபைக்கு தன்னை தலைவராகிக்கொண்டார். அங்கு நடப்பது ஹுன் சென்னின் நிழல் ஆட்சி எனவும், அவர்தான் நாட்டின் சக்திவாய்ந்த நபர் எனவும் கூறப்படுகிறது.

 

 

2A
Hun Sen (Left) Hun Manet (Right)

 

கம்போடியாவில் தேசிய ஒருமைப்பாடும், தேசியவாத மனநிலையும் அதிகமாக உள்ளதால், தனது மகனின் ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்த ஹுன் சென் தாய்லாந்துடனான மோதலை அதிகப்படுத்துவார் என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். தாய்லாந்தில் தற்போது ராணுவத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அவர்களும் 'ஒரு கை பார்த்துவிட' தயாராகிக்கொண்டிருப்பதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், சீனாவால் மட்டுமே இந்த மோதலை தடுக்கமுடியும் என்ற எண்ணமும் இருக்கிறது. காரணம், சீனா இருவரிடமும் நெருக்கமான பொருளாதார உறவை கொண்டிருக்கிறது. இந்தியர்கள் யாரும் தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த கட்டுரை வெளிவரும் நேரத்தில், இந்த மோதல் மூன்றாம் நாளை எட்டியுள்ளது.

இந்தியாவிற்கு, தென்கிழக்கு ஆசியாவில், தாய்லாந்தும், கம்போடியாவும் முக்கியமான பொருளாதார பங்காளிகள். சுற்றுலாத்துறையில் தொடங்கி, கட்டுமானத்துறை மற்றும் பல முதலீடுகள், ஏற்றுமதி, இறக்குமதிகள் என இந்த பொருளாதார உறவு குறிப்பிடத்தக்க அளவை எட்டியுள்ளது. உடனடி பாதிப்பிற்கு வாய்ப்பு குறைவுதான் என்றாலும் இந்த மோதல் போக்கு தொடர்ந்தால், நிச்சயமாக அது இந்தியாவிற்கு ஒரு பின்னடைவை தரும் என்பதில் சந்தேகமில்லை. சீனாவை முந்திக்கொண்டு இந்தியாவால் இந்த விவகாரத்தில் சமாதானத்தை ஏற்படுத்தமுடியுமா என்றால், சந்தேகமே.

ஆனால், ஒன்றை மட்டும் சந்தேகமில்லாமல் சொல்லமுடியும் - மீண்டும் ஒரு போரை மக்கள் விரும்பவில்லை. ஏனென்றால், தற்போது மக்களின் விருப்பமில்லாமல் நடைபெற்றுகொண்டிருக்கிற போர்களில் அதிகமாக பாதிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அப்பாவி மக்களே.

-அழகு முத்து ஈஸ்வரன்

combodia thailand war
இதையும் படியுங்கள்
Subscribe