/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/450_28.jpg)
தமிழகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததுள்ளதாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உண்மையான விவசாயி பலன் அடையவில்லை என்கிறபோது, உண்மையான விவசாயி பலன் அடைய என்ன செய்திருக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடு நடக்க யார் காரணம்? இதுபோல மற்ற திட்டங்களிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனவும் பொதுமக்கள் கூறுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் கேட்டோம்.
நம்மிடம் பேசிய அவர், "மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. அதனை மூன்று தவணையாக ஒரு தவணைக்கு ரூபாய் 2 ஆயிரம் தருவதாக அறிவித்தது. இது மத்திய அரசின் அறிவிப்பு, பணமும் மத்திய அரசுதான் தருகிறது. இது மாநில அரசு பணம் கிடையாது.
விவசாயிகளுடைய பட்டியல் எல்லா கிராம அடங்களிலும்உள்ளது. ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரியிடமும் நிலம் யாரிடத்தில் இருக்கிறது? எவ்வளவு நிலம் இருக்கிறது? சர்வே நம்பர் என்ன? என்ன சாகுபடி செய்கிறார்கள்? என்ற விவரம் முழுவதும் இருக்கிறது. உண்மையான பட்டியல் மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசிடம் தான் இருக்கிறது. பட்டியல் தயார் செய்து, உரிய பணத்தை உரிய விவசாயிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது.
இந்த கடமையை சரியாக செய்யாத காரணத்தினால், அந்த கடமையில் உரிய கவனத்தை செலுத்தாத காரணத்தினால் அந்தப் பணம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தியபோது, அதிகாரிகள் தவறாக பயன்படுத்திவிட்டார்கள் என்பதும், 70 அதிகாரிகள், 80 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுவதும்ஏற்புடையது அல்ல.
அதிகாரிகள் அம்புகளாக பயன்பட்டிருக்கிறார்கள். அம்பை எய்தவர்கள் யார்? என்பது கண்டறியப்பட வேண்டும். அம்பை எய்தவர்கள் அதிகாரம் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள்தான். அதிகாரம் செலுத்தக்கூடியவர்களின் உதவியில்லாமல் இதனை செய்ய முடியாது. வாய்ப்பே கிடையாது.
பட்டியலை தயார் செய்தது அதிகாரிகள். பணம் வெளியே போய்விட்டது. இந்த பணத்தை இந்த அதிகாரிகளிடத்திலேயும், அதிகாரிகளை இயக்கியவர்களிடம் இருந்தும் வசூல் செய்ய வேண்டும். பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் ரூபாய் 110 கோடி வரை மோசடி செய்துள்ளதாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகிறார். இந்த முறைகேட்டில் யாரேனும் தற்காத்துக்கொள்ள முயற்சித்தால் அதற்கு அனுமதிக்கக்கூடாது. ஒரு முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அம்பை எய்தவர்கள், துணைபோனவர்கள் யார்? என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.
கிராம அடங்கல் அடிப்படையில் உண்மையான பட்டியலை தயார் செய்து உரிய விவசாயிகளுக்கு நிதிகளை பெற்றுத்தர மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும். இந்த திட்டம் மட்டுமல்ல, இதுபோன்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதிகளை ஒதுக்கும். முறைகேடு நடக்காமல் உரியவர்களுக்கு சென்றடைய மாநில அரசுதான் பொறுப்போடு இருக்க வேண்டும்.விழிப்போடு இருக்க வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)