prashant kishor;s own strategy that has failed him Photograph: (politics)
எஸ்.ஐ.ஆர் எனும் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்கு திருட்டு என ராகுலின் பல்வேறு கட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் பீகாரில் பரபரவென வென்று தீர்த்துள்ளது என்டிஏ கூட்டணி. இந்த தேர்தலே இனி வரும் தேர்தல்களும் எடுத்துக்காட்டு என மேடைக்கு மேடை ஆருடம் கூறி வருகின்றனர் பாஜக நிர்வாகிகள். அதேநேரம் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கைப்பாவையாக செயல்பட்டே இந்த வெற்றியை பாஜகவிற்கு உரித்தாக்கி உள்ளது என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த அதிரி புதிரிகளுக்கு மத்தியில் 'கூட்டத்துல பச்சை சட்டக்காரன் எஸ்கேப் ஆகுறான்' என்பதை போல சைலன்ட் பல்டி அடித்திருக்கிறார் சான் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களையும், 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியூ 85 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அதே கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சி 19 இடங்களிலும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளை மட்டுமே கைபற்றியுள்ளது. அக்கூட்டணியில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சியை தர, பிகேவிற்கு எக்ஸ்ரா அதிர்ச்சியை கொடுத்துள்ளது பீகார் தேர்தல் முடிவு. அவருடைய ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது.
பாஜக முதல் நேற்று முளைத்த தவெக வரை முகம் காட்டியவர் பிரசாந்த் கிஷோர். 2012 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வர் ஆவதற்கு வியூகம் வகுத்து கொடுத்தற்காக பரவலாக பேசப்பட்டவர். பாஜகவிற்கு மட்டுமல்ல 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் வியூக வகுப்பாளராக பணியாற்றிவர். இப்படி காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு கோடிகளில் வியூகங்கள் வகுத்ததோடு வெற்றிக்கோட்டை தொட வைத்தவர் என புகழாராத்தில் மிதந்தவர் இப்படி சொந்த மண்ணிலேயே டெபாசிட் இன்றி மண்ணைக் கவ்வியது தான் இந்த எக்ஸ்ட்ரா அதிர்ச்சிக்கு காரணம்.
இனி தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்ற மாட்டேன் என முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர், கடந்த 2022 ஆம் ஆண்டு 'ஜன் சுராஜ்' என்ற தன்னுடைய தொண்டு அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றினார். தொடர்ந்து பீகாரில் உள்ள 38 மாவட்டங்களுக்கு பாதயாத்திரை சென்றார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு உற்சாகத்தை கொடுக்க, பீகார் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தார் பிரசாந்த் கிஷோர். அதன்படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அவரது கட்சி 'பேக்' சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்த பிரசாந்த் கிஷோர், பாஜக கூட்டணி 25 இடங்களுக்கு மேல் பெறாது. அப்படி கூடுதலாக பெற்றுவிட்டால் அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுங்கி விடுவேன் என சூளுரைத்திருந்தார். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் அதிகபட்சமாக ஜன் சுராஜ் கட்சிக்கு 2 முதல் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என வெளியாகி இருந்தன. ஆனால் அந்த கணிப்புகளும் தோல்வியடையும் படி தேர்தல் முடிவில் சுழியம் பெற்றது ஜன் சுராஜ்.
இந்நிலையில் தோல்விக்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரஷாந்த் கிஷோர் “நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து மிகவும் நேர்மறையாக முயற்சித்தோம்.தோல்விக்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது. நாங்கள் எங்களை சுயபரிசோதனை செய்வோம். தோல்விக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த தோல்விக்காக நவம்பர் 20 ஆம் தேதி காந்தி ஆசிரமத்தில் நான் ஒருநாள் மௌன விரதம் இருப்பேன்.
நாங்கள் மீண்டும் அதே பலத்துடன் நிற்போம். நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என்று நினைப்பவர்களே, அது தவறு. நிதிஷ் குமார் 1.5 கோடி பெண்களுக்கு ரூ.2 லட்சத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி, தான் வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்தால், நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். பீகார் மக்களுக்காக பேசுவதை நிறுத்த மாட்டேன். நான் இப்போது என்ன பொறுப்பில் உள்ளேன் விலகுவதற்கு'' எனக் கூறி, சிறிய பல்டி அடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
Follow Us