ADVERTISEMENT

பிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் !

01:20 PM Apr 03, 2020 | Anonymous (not verified)


ரடங்கு உத்தரவின் நான்காவது நாளிலேயே இந்தியாவின் இன்னொரு முகம் வெளிப்பட்டுவிட்டது. அது பரிதாபகரமான முகம். ஊர்விட்டு உறவு பிரிந்து வெளிமாநிலங்களில் வேலை பார்த்தவர்களுக்கு 21 நாட்கள் ஊரடங்குக்கு முன்பாகக் கிடைத்தது வெறும் 4 மணிநேர அவகாசம் மட்டுமே.அன்றாட வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தும் அவர்களால், நினைத்த மாத்திரத்தில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே பொதுப்போக்குவரத்து கணிசமாக முடங்கிப் போயிருந்தது. 28-ந்தேதி குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப் பட்டாலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து டெல்லியில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் குடும்பம் குடும்பமாகக் குவியத் தொடங்கினர்.தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமாவது இருக்கும் இடத்திலேயே தங்கியிருங்கள் என்று அறிவுறுத்தியது.ஆனால், கொரோனா வைரஸ் பரவி செத்துவிடக்கூடாது என்பதற்காக அரசு எங்களைச் சுயமாகத் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.அடுத்த வேலை சோறுக்கு வழியில்லாமல் தனிமைப்படுத்திக் கொண்டால்,கரோனாவிலிருந்து தப்பித்தாலும் பட்டினியாகக் கிடந்தே செத்துவிடுவோம் என்பது அரசுக்குத் தெரியாமல் போய்விட்டதே ’என்று கைக்குழந்தையோடு கதறிய தாயின் குரல்,அத்தனைக் கூட்டக் கூச்சலும் கோபமாக அலறியது.



பலர் பேருந்துகளுக்குள் முண்டியடித்துக் கொண்டு ஏறிவிட,பேருந்துகளின் கூரைகளும் கூட்டத்தால் நிரம்பியது.எனினும், எஞ்சியிருந்த கணிசமான மக்கள் கூட்டம் நடந்தே செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. பலர் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், குழந்தைகள் பெட்டிகளைத் தலையில் சுமந்தும் பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்தே பயணமாகினர்.



டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில், ஓட்டலில் டெலிவரி பாயாக இருந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ரன்வீர்சிங், தன் மனைவி, மூன்று குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஆக்ரா வரை சுமார் 200 கிலோமீட்டர் தூரம் நடந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுருண்டுவிழுந்தார். மருத்துவமனையில் சேர்த்தபோது, ரன்வீர்சிங் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.அவரது உடற் கூராய்வில், நீண்டதூரம் நடந்ததால் ஏற்பட்ட மாரடைப்பில் உயிர் பிரிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதேபோல், ஹரியானாவின் பிலாஸ்பூர் பகுதிக்குக் கூட்டமாக நடந்து சென்றவர்களின் மீது, அந்தவழியே அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்சென்ற லாரி மோதியதில், நிகழ்விடத்திலேயே மூன்று பெண்களும், இரண்டு குழந்தைகளும் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர்.அவர்களிடம் எந்த அடையாள அட்டையும் இல்லாததால், அவர்களைப் பற்றிய விவரம் கிடைக்கவே இல்லை.



இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிழைக்க வந்த ஊரிலிருந்து, பிறந்த ஊருக்குச் சென்றபோது இறந்தவர்களின் எண்ணிக்கை 22. அதில் ஏதுமறியா குழந்தைகள் ஐந்து பேர். நீண்டதூர நடைப்பயணத்தால் ஏற்பட்ட உடற்சோர்வு, மூன்று நாட்களுக்கும் மேலாகப் பட்டினி கிடந்தது,சாலைவிபத்து போன்ற காரணங்களால் மட்டுமே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் தப்பிப் பிழைத்து, உயிரை வெறுத்து நடந்தே உத்தரப்பிரதேச எல்லைக்கு வந்த சிலரை அங்கேயே மடக்கிய பரேலி மாவட்ட அதிகாரிகள், ஒரு இடத்தில் கூட்டமாக உட்கார வைத்து, அவர்களின் மீது சோடியம் ஹைபோகுளோரைட் கிருமிநாசினி (ப்ளீச்சீங் பவுடர்) மருந்தினைப் பீய்ச்சி அடிக்கும் காட்சி வெளியாகி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகு உடல் மற்றும் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதாக அப்பாவி மக்கள் தெரிவித்த போது, “ஒண்ணுமில்ல, பொதுப் போக்குவரத்து வாகனங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ப்ளீச்சிங் பவுடர் தான்.கவலைப்படாம முகாம்ல தங்கிக்கோங்க என அசட்டையாக ஆறுதல்சொல்லி வழியனுப்பி வைத்தார் காவல்துறை அதிகாரி ஒருவர்.



இப்படி, இடம்பெயர்ந்து பணிபுரிந்தவர்கள் லட்சக்கணக்கில் சொந்த ஊருக்கே திரும்பிவரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு,கொரோனா சமூகப் பரவலைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியது.அதில், ஊர்திரும்பும் மக்களை அப்படியே அனுமதிக்காமல் தற்காலிக முகாம்களை அமைத்து தங்கவைத்து, அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறும், அதற்கான செலவை மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.பேரிடர் நேரத்தில், மோடி அரசும் அமித்ஷா அமைச்சகமும் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து,ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களின் தலையில் சுமை ஏற்றுவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து மீரட் வழியாக, உத்திரப்பிரதேசத்தின் காஜியாபாத்திற்குள் நுழைய முற்பட்ட பலரையும் லத்தியால் தாக்கிய போலீசார், எல்லைக்குள் நுழையக்கூடாது என்றும், வந்த இடத்திற்கே திரும்பச் செல்லுங்கள் என்றும் விரட்டியடித்துள்ளனர்.இது விமர்சனத்துக்குள்ளான நிலையில்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம் அரசுகள் மாநில எல்லைகளில் தற்காலிக தங்கும் முகாம்களை அவசர அவசரமாக அமைத்துள்ளன.இந்த முகாம்களில் தங்க மறுப்பவர்களை பேருந்தில் ஏற்றி, கிளம்பிய இடத்திலேயே விட்டுவிடுமாறு ஹரியானா டி.ஜி.பி. மாநிலத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.மேலும், ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை அடைத்து வைப்பதற்காக, மாநிலத்தின் மிகப்பெரிய உள்விளையாட்டு மைதானத்தை ஹரியானா அரசு தற்காலிக சிறையாக மாற்றி இருக்கிறது.


பீகார் மாநிலம் சிவான் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களில், வெளிமாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்திருந்தனர்.அங்கு எடுக்கப் பட்ட வீடியோவில், “சீக்கிரமே விட்டுவிடுகிறோம். எங்களைக் கூட்டிச்செல்ல பேருந்து வருகிறது என்று சொல்லித்தானே அடைத்தீர்கள்.ஆனால், எங்களை ஏமாற்றி, ஏன் இப்படி கைதிகளைப் போல அடைத்து வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் வேறெதும் கேட்க வில்லை.எங்களை விட்டால் போதும்’’ என்று ஒருவர் கதறியழுகிறார்.இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து பல்வேறு சிரமங்களைக் கடந்து இங்கே வந்த மக்களை இப்படியா நடத்துவது’என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரைக் கடுமையாக விமர்சித்திருந்தார். பெங்களூரு,ஹைதராபாத் போன்ற நகரங்களில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை காய்கறி-மளிகை கடைகளுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் காட்சிகளைக் கொண்ட வேதனை வீடியோக்களும் பரவலாயின.

கொரோனா தடுப்பு விஷயத்தில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் கோட்டை விட்ட அரசு, முழு ஊரடங்கில் செய்த மிகப் பெரிய தவறுதான், வெறும் நான்கைந்து நாட்களில் கொரோனா இறப்புக்கு நிகராக, இடம்பெயர் தொழிலாளர்களின் இறப்புக்குக் காரணம். டெல்லியில் இருந்து பீகாருக்குப் பசித்த வயிறோடு நடந்த இளைஞர்,வழியில் கிடைத்த உணவைப் பார்த்து கதறியழுத காட்சிதான்,அரசு இவர்களின் மீது கொண்டிருக்கும் அலட்சிய முகத்திரையைக் கிழிக்கும் சாட்சி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது மதரீதியாக எப்படி மக்கள் பரிதவித்தாரகளோ,சாதி-மதம்-வர்க்கம் பார்க்காமல் தாக்கும் கரோனா காலத்தில் பாகிஸ்தான் பிரிவினை போன்ற பதற்றத்தை எதிர்கொண்டது இந்தியா. 30 கோடிக்கும் அதிகமான அன்றாட உடலுழைப்புத் தொழிலாளர்களை தேசம் கைவிட்டுவிட்டதோ என்ற அச்சம் பரவியது.

கரோனா தாக்குதல், இன்னொரு உலக யுத்தத்தைப் போன்றது என்றார் பிரதமர் மோடி.உண்மையில், இந்தியா மட்டுமின்றி,உலகம் முழுவதும் பிழைப்பிற்காக இடம்பெயர்ந்த வாழ்வு அனுதினமும் உலக யுத்தம்தான்.

-சு.ப.மதிவாணன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT