Advertisment

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா... வரம்பை மீறும் பிராங்க் நிகழ்ச்சிகள்!

Prank show make people irritate

Advertisment

ஊடகத் துறையில் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு வகை ஊடகங்களுக்கானதாக இருக்கின்றது. இந்தியாவில் ஜியோவினால் அதிகரித்த இணைய பயன்பாடு, தற்போது கரோனாவினால் நடந்த லாக்டவுன் என பல காரணங்களால் யூ-ட்யூப் சேனல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எத்தனை தடவைவேண்டுமானாலும், இணையவழியாக யூ-ட்யூப் சேனல்கள் திறக்கலாம் . இதனால் தங்களின் திறமைகள், தங்களின் தொழிலை விரிவாக்க, தங்களை இந்த சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள என தற்போது வீதிக்கு வீதி பல யூ-ட்யூப் சேனல்கள் உருவாகிக்கொண்டு வருகின்றன.

யூ-ட்யூப் சேனல்கள் ஆரம்பிப்பதற்கு பெரிய அளவில் நிதி தேவையில்லை. சுவாரசியமாக இருந்தால், அல்லது அதிர்ஷ்டம் அடித்தால் நாம் பதிவிடும் காணொளி அதிக அளவில் மக்களால் பார்க்கப்பட்டு அதன் மூலம் வருவாயும் பெறமுடியும். இந்த நம்பிக்கையில் யூ-ட்யூப் சேனலை நடத்துவதை முதன்மை தொழிலாளாகவே பலர் செய்து வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, குறும்படங்கள் எடுத்து அதன் மூலமாக சினிமா வாய்ப்பு பெற்று இன்று மிகப்பெரிய இயக்குனர்களாகவும் நடிகர்களாகவும் பலர் இருக்கின்றனர். அதுபோல, தற்போது யூ-ட்யூபில் தங்கள் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் நடிக்கும் இயக்கும் வாய்ப்புகளை பெறும் அளவுக்கு யூ-ட்யூப் ஒரு பலம் வாய்ந்த ஊடகமாக வளர்ந்துள்ளது.

அச்சு ஊடகத்திலும், தொலைக்காட்சிகளிலும் தெரியப்படுத்த முடியாத சில கருத்துகளை யூ-ட்யூப் மூலம் தைரியமாகத் தெரிவிக்க முடிகிறது. யூ-ட்யூப் சேனல்களில் நல்ல கருத்துகள், ஆளுமைகளின் நேர்காணல்கள், கள நிலவர செய்திகள் மற்றும் பல பயன்தரும் வகையிலான செய்திகளை பதிவிடும் படைப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள. இன்னொரு புறம் பொழுதுபோக்கை மட்டுமே அளிக்கும் நகைச்சுவை வீடியோக்கள், வெப் தொடர்கள், பிராங்க் ஷோக்கள் போன்றவையும் யூ-ட்யூபில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. முக்கியமாக பிராங்க் ஷோக்கள் எளிதில் வைரலாகின்றன, அதிகமாக ரசிக்கப்படுகின்றன, பெரிய செலவில்லாமல் அதிக வருவாயை ஈட்டித் தருகின்றன. சில பிராங்க் ஷோக்களில் பிராங்க் செய்யப்படுபவரே பின்னர் விஷயம் தெரிய வரும்போது அதை ரசித்து சிரிக்கின்றனர். ஆனால், சமீபமாக பிராங்க் ஷோ என்ற பெயரில் ஊருக்கு ஊர் பல யூ-ட்யூப் சேனல்கள், பொதுமக்களை தொந்தரவு செய்வது நடக்கிறது. இது ஒரு புறம் என்றால், திட்டமிட்டு தங்களுக்குள்ளேயே நடத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை பிராங்க் என்ற பெயரில் வெளியிடுவதும் உண்டு.

Advertisment

இதில் இரண்டாவது வகை பரவாயில்லை, பிறருக்குத் தொந்தரவு இல்லை. ஆனால், பிராங்க் ஷோ என்ற பெயரில் பொதுமக்களிடம் வரம்பு மீறிய செயல்களையும் சிலர் செய்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது, மக்களை துன்புறுத்துதல், விலங்குகளை துன்புறுத்துதல், என அராஜகத்தின் உச்சத்திற்கே சென்று செயல்படுகிறார்கள். சாலையில் செல்பவர்களை வழிமறித்து அவர்களை கோபம் மூட்டுவது, எரிச்சலடைய செய்வது. அவர்களின் பணியை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அவர்களின் பொருட்களை திருடிச் செல்வது போன்று நாடகம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாவட்டங்களின் பெயர்களில் நடத்தப்படும் யூ-ட்யூப் சேனல்கள் சில செய்யும் அடாவடியால் மக்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரம் கவலைகளோடு வேலைக்கு செல்லும் மக்களை வழிமறித்து செய்யப்படும் பிராங்க் ஷோக்களை பார்ப்பவர்கள் சிரிக்கலாம், அதை நடத்துபவர் ஆதாயம் தேடலாம். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மனஉளைச்சல் மட்டுமே வருகிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

சமீபத்தில் வடமாநில பிராங்க் ஷோ ஒன்றில் ஒரு இளைஞர் பூங்காவில் தனியாக அமர்ந்திருக்கும் பெண்ணிற்கு தான் மசாஜ் செய்துவிடுவதாக கூறி தவறாக நடந்து கொள்கிறார். பின்பு கேமரா வைத்துள்ளோம் இது நிகழ்ச்சி என்று கூறி அந்த பெண்ணை சமாதானப்படுத்துகிறார். அந்தப் பெண்ணிற்கு பெருத்த அவமான உணர்வும், கோபமும் ஏற்படுகிறது. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. நாகை மாவட்டத்தில் செயல்படும் ஒரு யூ-ட்யூப் சேனல் ஒன்று தனியாக இருசக்கரம் ஓட்டி வரும் பெண்ணை நிறுத்தி தன் உறவினருக்கு உடல் நலம் சரி இல்லை என்றும் மேலும் சில காரணங்களையும் கூறி இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது போல அந்த யூ-ட்யூப் சேனல்காரர்கள் செய்கிறார்கள். வாகனத்தை பறிகொடுத்த அந்தப் பெண் சாலையில் மயங்கி விழுகிறார். அப்போதும் அவர்கள் தங்களின் சேட்டைகளை நிறுத்தாமல் அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது என்று கூட கேட்காமல் ஈவு இரக்கமின்றி தங்களின் நாடகத்தை தொடர்ந்து கொண்டே இருகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல்தான் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பெண் பொதுமக்களில் ஒருவராக இருந்தால் இது பெரிய குற்றம். இல்லை, அவர்களில் ஒருவராக இருந்தாலும் இது ஏமாற்று வேலை.

யூ-ட்யூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு அது பிரச்சனையானால் அரசாங்கம் விரைந்து 'அந்த சேனல் நடத்துபவர் யார், எங்கு இருந்து நடத்துகிறார்' என்று ஒட்டுமொத்த தகவலையும் பெற்று அந்த சேனலை தடை செய்கிறது. ஆனால் இந்த பிராங்க் ஷோக்கள் இன்னும் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்கின்றன. உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கடந்த ஆண்டு பிராங்க் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பை நடத்தவும் ஒளிபரப்பவும் தொலைக்காட்சிகளுக்குத் தடை விதித்தது. இந்தத் தடையை தொடர்ந்து சில காலம் அமைதி காத்த யூ-ட்யூப் சேனல்கள் மீண்டும் சில மாதங்களிலேயே தொடங்கிவிட்டன. ஒரு எல்லைக்குள் நடக்கும், பிறரை தொந்தரவு செய்யாத, பாதிக்காத பிராங்க் ஷோக்கள் ரசிக்கத்தக்கவைதான். ஆனால், எல்லை மீறும் பலரால், மக்கள் பாதிக்கப்படுவதோடு, யூ-ட்யூப் எனும் கருத்து சுதந்திரம் மிக்க ஊடகம், கட்டுப்பாடுகளுக்கு ஆளாகும் ஆபத்தும் இருக்கிறது.

- சேகுவேரா

prank show
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe