Advertisment

வறுமை ஒழிப்பு... காலத்தின் கட்டாயம்...

மில்லியன் கணக்கான நம் சகோதர சகோதரிகள் வறுமையின் பிடியில் இருக்கும்போது ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியாது. 2019-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச அடிப்படை வருமான உறுதி திட்டம் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது சாத்தியமே என்று ஒரு சாரரும், வெற்று வாக்குறுதி என மற்றொரு சாரரும் சொல்ல, இது பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

poverty

கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்துவரும் சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பை அச்சுறுத்தும் ஆட்டோமேசன் என இரண்டு பெரிய சவால்களை உலகம் சந்தித்து வருகிறது. இதனால் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டத்தில் பல நாடுகள் உள்ளன. அதற்கான விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.

Advertisment

இந்தியாவில் 1 சதவிகிதத்தனரிடம் பெரும்பாலான செல்வம் குவிந்து கிடக்கிறது. இந்த அசாதாரண சமத்துவமின்மை தொடர்ந்தால், அது இந்திய நாட்டின் சமூக மற்றும் ஜனநாயக கட்டமைப்பை பாதிக்கும் என சமீபத்திய ஆக்ஸ்பாம் சர்வதேச அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி பொய்த்துப்போனது. 20 லட்சம் வேலைவாய்ப்புகளைகூட உருவாக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும், உருவான வேலைவாய்ப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக கருதப்படுகிறது.

அதிகரித்துவரும் வருமான சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை இன்றைய இந்தியாவின் பெரும் அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ளன. இந்தநிலையில் காங்கிரஸ் மட்டுமல்ல, யார் ஆட்சிக்கு வந்தாலும் குறைந்தபட்ச அடிப்படை வருமானம் போன்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

bad debt

பெருநிறுவனங்களின் வராக் கடன்களுக்கான விதிவிலக்குகளை அகற்றுதல், தற்போதுள்ள சில அத்தியாவசியமற்ற மானியங்களை நீக்குதல், செல்வந்தர்களுக்கு 1-2% வரியை அமல்படுத்துதல், ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மூலம் குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஏழைகளின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும். அதேசமயம் 1.37 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால்.

“திட்டத்திற்கு நாட்டிலுள்ள 5 கோடி குடும்பங்களை அடையாளம்காண போதுமான தரவுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் நிபுணர்களை நாங்கள் ஆலோசித்திருக்கிறோம். இந்த வகையான திட்டத்தை பல கட்டங்களாக இந்தியா செயல்படுத்த முடியும்” என்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சமீபத்தில் தெரிவித்தார்.

திட்டமானது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதத்தை செலவழிக்கும் என்றும், சூப்பர் பணக்காரர்களுக்கு கூடுதல் செல்வு வரியை அமலாக்குவதன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் பாரிஸின் உலக சமத்துவமின்மை ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது முன்மொழியப்பட்ட திட்டத்தின் பெயர் 'Nyuntam Aay Yojana(NYAY). இந்த வார்த்தை ஹிந்தி மொழியில் நீதி என்பதை குறிக்கிறது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரேசிலில் “போல்சோ பேமிலியா” என்ற பெயரில் இதே போன்றதொரு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் பல லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து வெளிக்கொண்டுவந்து, வரலாற்றில் இடம்பிடித்தது.

பிரேசிலில் அமல்படுத்தப்பட்டதை போல இந்தியாவில் நடைமுறை படுத்துவது எளிதல்ல. வருமானத்தை கணக்கிட துல்லியமான அளவீடுகள் இந்தியாவில் இல்லை. பல பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் உருவாக வாய்ப்புண்டு. இது போன்று பல காரணிகள் இந்த திட்டத்திற்கு பெரிய சவாலாக இருக்கும்.

mahatma Gandhi

உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கும் பணம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி அப்போதும் எழுந்தது. ஆனால் அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 14 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டனர்.

RBI அறிக்கையின்படி 2016-17 களில் 108,500 கோடியும், 2017-18 ஆம் ஆண்டுகளில் 162,700 கோடி ரூபாயும் பெருநிறுவனங்களின் வராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு வருடம் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி தேவைப்படும். பெருநிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடி தவிர்க்கப்பட்டால் பெரும்பாலான நிதியை அதிலிருந்து இந்த திட்டத்திற்கு திரட்ட முடியும்.

மத்திய பிரதேசத்தில் இந்த மாதிரியான திட்டம் சோதனை முறையில் 8 கிராமங்களில் அமல்படுத்தப்பட்டது. இது ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது காங்கிரசால் அறிவிக்கப்பட்ட NYAY திட்டம் அடிமட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்திய பொருளாதாரம் அத்தகைய திட்டத்தைத் தக்கவைக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் உள்ளது. ஆனால் நிபந்தனைகளின் அடிப்படையில் திட்டத்தை அமல்படுத்த முடியும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

திட்டம் அமலுக்கு வந்தால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரும். இந்த திட்டம் பல சோதனைகளை சந்திக்கும். இது சாத்தியமா அல்லது வெறும் இனிக்கும் வாக்குறுதியா என்பதை காலம் தான் பதில் சொல்லும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வறுமையை ஒழிக்க இது போன்றதொரு திட்டத்தை அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

poverty list
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe