Skip to main content

பொருநை இலக்கியத் திருவிழா; ஆதித்தமிழர்களின் அற்புதங்கள்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Borunai Literary Festival

 

நவ. 26, 27 ஆம் தேதிகளில் நெல்லையில் பொருநை இலக்கியத் திருவிழா. அப்படிச் சொல்லிவிட்டு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட அத்தனை கண்காட்சிப் பொருட்களும் ஆதித்தமிழர்களின் கல்லறை முதல் கருவறை செல்கிற வரையிலான நிகழ்வுகளை அட்சரம் பிசகாமல் வெளிப்படுத்தியுள்ளது. அவைகளை நுணுக்கமாகப் பார்க்கிற பார்வையாளர்கள் மிரண்டு போய் நிற்கிறார்கள். அதிசயங்கள் அப்படி ஒரு நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறது.

 

துவக்கவிழாவின் போது பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் போன்றோர் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துவிட்டு, நதி நாகரிகம் தோன்றிய பொருநை நதியான தாமிரபரணித்தாயின் மடியிலிருந்து இலக்கியத் திருவிழாவை தொடங்குவது உண்மையிலேயெ மட்டற்ற மகிழ்ச்சி. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்று இலக்கியத் திருவிழா நடந்ததில்லை என்றனர், வியப்பு மேலிட. விழாத் தொடக்கத்தின் போது காணொலி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை நாம் பொருநை நதியிலிருந்து தொடங்குவோம் என்றார்.

 

இலக்கியத் திருவிழாவின் இரண்டு நாட்களின் போது, பாளையின் நூற்றாண்டு மண்டபம், மேடை போலீஸ் ஸ்டேஷன், நேருஜி கலையரங்கம் உள்ளிட்ட 5 அரங்குகளிலும் மண்வாசனை, சங்கமம் மாணவ மாணவிகளின் போட்டிகள், எழுத்தாளர்களின் உரைகள். ஓலைச்சுவடிகள் மற்றும் வட்டெழுத்துக்காட்சி, ஓவியக் கண்காட்சி, ஆதிகாலத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பழங்காலப் பாத்திரங்கள், கைவினைப் பொருட்கள், நெற்குதிர்கள், புகைப்படக் கண்காட்சி, தமிழர்கள் பயிரிட்ட விதவிதமான நெல்மணிகளின் காட்சி என்று வந்தவர்களை வியக்க வைத்தன. இவ்வாறு பல அரிய தகவல்கள் 20ம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு கடத்தப்பட்டன.

 

Borunai Literary Festival

 

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பண்டைக்காலத் தமிழர்களின் சரித்திரச்சுவடுகளான ஓலைச்சுவடிகள் மலைக்க வைத்தன. தங்களது காலப் பண்பாடுகள், கலை இலக்கியம், மருத்துவம் போன்ற பிறவகைகளை ஓலைச்சுவடிகள் மூலம் வம்சாவழியினருக்கு அரியவகை சொத்துக்களாய் கொண்டு வந்து சேர்த்தது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 

இலக்கியம் பற்றிய ஓலைச்சுவடிகள், சித்த மருத்துவச் சுவடிகள், அபிஷேகப்பட்டியின் ஜாதகம் பற்றிய சுவடிகள், வெள்ளோலைச் சுவடிகளாலான எழுதுவதற்காக தயார் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள். இலக்கணக் கொத்து, வெண்சுவடி ஓலைச்சுவடியின் எழுத்துக்களை தற்போதைய காலத்திற்கேற்ப பேப்பரில் எழுதப்பட்ட எழுத்துச்சுவடிகள், கட்டபொம்மனின் வாழ்க்கை, கும்மிப்பாட்டுச் சுவடிகள், ஜோதிடச்சுவடிகள், திருப்புகழ் தொகுப்பு சுவடிகள், சித்திரபுத்திரன் கதைச்சுவடி, ஆதிவாசிகளின் புராணச்சுவடி. திருக்குறளின் அத்தனைக் குறள்களையும் முழுமையாகக் கொண்ட சுவடிகள், காவடிச்சிந்துகளைக் கொண்ட அண்ணாமலை கவிராயர் சுவடிகள், 1964ன் போது தனுஷ்கோடி அழிந்தது பற்றிய தொகுப்புகளைக் கொண்ட காலச்சுவடிகள், மாந்த்ரீகம் பற்றிய சுவடிகள், கழுகுமலை கொங்கராயக்குறிச்சியின் வட்டெழுத்துக்கள் என 200 வகையான ஓலைச்சுவடிககள் வகைப்படுத்தி காட்சியாக வைக்கப்பட்டிருந்ததை ஆர்வமுடன் பார்வையாளர்கள் பார்த்துப் படித்தனர்.

 

குறிப்பாக 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆவலாகச் சுவடிகளைப் படித்தனர் என்று நம்மிடம் தெரிவித்த இதன் அமைப்பாளரும் ஓலைச்சுவடிகளை அரும்பாடுபட்டு சேகரித்தவருமான சங்கரநாராயணன், அடிப்படையில் பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளரும் கூட.

 

Borunai Literary Festival

 

“மொத்த ஓலைச்சுவடிகளையும் மூன்று நான்கு மாவட்டங்களில் 20 வருடங்களாக அலைந்து திரிந்து சேகரித்தேன். அற்புதமான தகவல்களையும் தமிழர்களின் வாழ்வியலும் சுவடிகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஜோதிடம், ஜாதகம், இலக்கியம் போன்ற தமிழர்களின் இந்தச் சுவடிகள் தான் இன்றைய எதிர்காலக் கணிப்பாளர்களின் ஆதிமூலம். இதிலிருந்துதான் அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர். கட்டபொம்மனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலானவைகளை கும்மிப்பாட்டு மூலம் வெளிப்படுத்தும் சுவடிகள். அந்தக் கால மன்னர்கள் மக்களை ஆட்சி செய்ய கொண்டுவரப்பட்ட வெண்கலச்சட்டம் போட்ட சுவடி. எமதர்மனின் கணக்காளரான சித்திரபுத்திரன் கதைபற்றிய சுவடிகள், மனிதர்களின் ஒவ்வொரு பாவச்செயல்களுக்கும் நரகத்தில் என்னென்ன தண்டனைகள் தரப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிற சுவடி. அந்தக் காலங்களிலேயே மாந்த்ரீகங்களால் மக்கள் மிரட்டப்பட்டதையும் குறிப்பிடுகிற சுவடி, 1964ன் போது நடிகர் ஜெமினி கணேசனும், நடிகை சாவித்திரியும் ராமேஸ்வரம் வந்தவர்கள், அன்றைய இரவு அருகிலுள்ள தனுஷ்கோடியைப் பார்க்கச் செல்கிற நோக்கத்திலிருந்தனர். அப்போது அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அங்கு செல்லாமல் ராமேஸ்வரத்திலேயே தங்கிவிட்டனர். அன்றைய இரவு தான் தனுஷ்கோடி புயலால் கடல்கொண்டு அழிந்தது கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் தப்பியது தனுஷ்கோடி அழிந்தது பற்றிய அத்தனையும் ஆவணமாக்கப்பட்ட சுவடி என்று பல்வேறு வகைச் சுவடிகளிருக்கின்றன” என்றார் விளக்கமாக. ஆதித்தமிழர்களின் பொக்கிஷமான ஓலைச்சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்த ராஜா என்ற வாலிபரோ, “அதிசயம், மிராக்கிள்” என்கிறார்.

 

Borunai Literary Festival

 

இது ஒரு பக்கமெனில், காட்சிப்படுத்தப்பட்ட ஓவியக் காட்சியோ பார்வையாளர்களின் புருவங்களை உயரவைத்தது. ஓவியத்தில் தூரிகையின் விரல்கள் அப்படி நடனமாடியிருந்தன. வ.உ.சி., பாரதியார் உள்ளிட்டோர் தேசியக்கொடியை ஏந்தி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீதியில் போராடுவது. பாடகி லதா மங்கேஷ்கர், எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி (1931), ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், பண்டையக்கால கரகாட்டம், ஆதித்தமிழ் குடும்பங்கள் பொங்கலிடும் காட்சி என்று வரையப்பட்டு இடம்பெற்ற அத்தனை உயர்தரமான ஓவியங்களும் பேசின. குறிப்பாக 90 வயது கடந்த மூதாட்டியின் முகபாவங்கள், நாடி, நரம்புகள், தோல் சுருக்கங்கள், காதில் அணிந்திருந்த தங்க பாம்படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது பார்வையாளர்களை அசத்தியது. தொடர்ந்து மற்றொரு அரங்கில் புகைப்படக் கண்காட்சி. தமிழர்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், தெம்மாங்கு பாடிக் கொண்டே வயலில் நாற்று நடுவது, கூண்டுவண்டி கட்டிக் கொண்டு ஊர் வழியே செல்வது போன்ற அனைத்து செயல்பாடுகளையும் பிசிறின்றி புகைப்படமாக்கப்பட்டவைகள். இவைகளுக்கு மத்தியில் கந்தலாடைகளுடன் கழனிமேட்டில் மனைவி ஒருத்தி பரட்டைத் தலையுடனிருக்கும் தன் கணவனுக்குப் பேன் எடுத்துக்கொண்டிருக்கிற இயல்பான சூழலைப் புகைப்படமாக்கியது விழிகளை விரிய வைத்தன. இது அரிதிலும் அரிதான பகைப்படம். ‘இந்தப் புகைப்படம் ஒருவேளை அவார்டு கூட வாங்கியிருக்கலாம்’ என வியப்பாகச் சொன்னார் பார்வையாளர் ஒருவர்.

 

அடுத்த அரங்கில் இலக்கண இலக்கியங்கள் எழுத்துக்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற 21 தென்மாவட்ட எழுத்தாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதில் எழுத்தாளர் சோ.தர்மன், சாய்வு நாற்காலி நூலுக்கான விருது பெற்ற தோப்பில் முகம்மது மீரான், 1991ல் கோபல்லபுரத்து மக்கள் நூலுக்கான விருதுபெற்ற கி.ராஜநாராயணன், 1990ல் வேரில் பழுத்த பலா நூலிற்கான விருதுபெற்ற சமுத்திரம், 1987ல் முதலில் இரவு வரும் என்ற நூலுக்கான விருது பெற்ற ஆதவன், 1994ல் புதிய தரிசனங்கள் நூலுக்கான விருது பெற்ற பொன்னீலன் உள்ளிட்டோரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பொருநை இலக்கியத் திருவிழாவின் சிகரம்.

 

தங்கச் சம்பா, கருடன் சம்பா, குழியடிச்சான், நவுரா, குள்ளக்கார், கொட்டாரம் சம்பா என்று தமிழர்கள் 28 வகையான பாரம்பரியமிக்க நெல்வகைகள் பயிரிடப்பட்டதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது விழாவின் சிறப்பு அம்சம். இலக்கியத் திருவிழாவின் இரண்டாவது தினமான நிறைவு நாளின் மாலையில் தமிழர்களின் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள், நாட்டியங்கள், பழங்காலங்களின் மிரட்டுகிற வகையில் நடத்தப்பட்ட தண்டயச்சூரனின் தாண்டவமும் கலைஞர்களால் நடத்தப்பட்டன.

 

Borunai Literary Festival

 

பொருநை இலக்கியத் திருவிழாவை நிறைவு செய்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “குறிஞ்சி முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று நிலங்களைப் பிரிப்பார்கள். இத்தனையும் ஒருங்கிணைந்து இருப்பது ஒன்றுபட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் என்பது நமக்குப் பெருமை. இந்தியாவின் வரலாறு தொடங்கப்பட வேண்டியது சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து அல்ல. இந்திய வரலாறு எழுதப்பட வேண்டியது பொருநை ஆற்றங்கரையிலிருந்து ஆதிச்சநல்லூரிலிருந்து கொற்கையிலிருந்து. இவைகள் நிதர்சனமான உண்மைகள்” என்றார் அழுத்தமான தொனியில்.

 

ஆய்வுகளின் அடிப்படையில் 3155 ஆண்டுகள் பழமையான மிகவும் தொன்மையான நாகரிகம் பொருநை நாகரிகம். கடல் கடந்தும் பேசப்படுகிற தமிழர் நாகரிகம்.

 

 

Next Story

பொன்முடி அமைச்சராவது குறித்து சபாநாயகர் அப்பாவு புதிய தகவல்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Speaker Appavu new information about Ponmudi minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (இன்றைக்குள்) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Speaker Appavu new information about Ponmudi minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அமைச்சராக பொன்முடி இன்று பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்முடி பதவியேற்பது குறித்து பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருவரை அமைச்சராக நியமிக்க பதவி பிரமாணம் எடுப்பது குறித்து ஆளுநரிடம் தெரிவிப்பார். அதன் பிறகு முறைப்படி பதவி பிரமாணம் எடுக்கப்படும்” எனத் தெரித்தார். 

Next Story

'பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி சாத்தியமா?' - அப்பாவு விளக்கம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'MLA post for Ponmudi'-Speaker Appa's explanation

சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார்.

நெல்லையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்தார். நேற்று உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை காலத்தை பொறுத்து அவர்கள் வைக்கிற பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவருடைய பதவியைத் தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நாங்கள்தான் போட்டோம். இப்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். எவ்வாறு வழங்குவோம் என்றால் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரி இவர்களுக்கு எல்லாம் என்னென்ன நடைமுறை சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் பொன்முடிக்கும் பதவியை வாங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.