Skip to main content

தேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

“டி.என். சேஷனை சிறந்த தேர்தல் கமிஷனராகப்  பார்த்திருப்போம்.  அக்னியாகப்  பார்த்ததுண்டா?” என்று நம்மிடம் கேள்வி எழுப்பிய அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அமரராகிவிட்ட டி.என்.சேஷன் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
 

ponraj about TN Seshan


“முதல் அக்னி ஏவுகணையை ஏவ இரவு பகல் பாராமல்  டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் தலைமையில் DRDO விஞ்ஞானிகள் உழைத்துக்கொண்டிருந்தார்கள்.  இன்னோரு பக்கம் அக்னி ஏவுகணை ஏவக்கூடாது என்று அமெரிக்காவும், நாட்டோ நாடுகளின் கூட்டமைப்பும் அன்றைய பிரதமர் திரு ராஜிவ் காந்திக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. அமெரிக்க மற்றும் நாட்டோ நாடுகள் இந்தியாவின் அக்னி ஏவுகணை திட்டத்தை வெற்றி பெற விடக்கூடாது என்று  ஒரு பக்கம் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மறுப்பு, வெளிநாட்டில் அக்னி கூட்டு தொழில்நுட்ப திட்டத்தில் பணியாற்றிய இந்திய விஞ்ஞானிகள் தொழில்நுட்பம் கொடுக்க மறுக்கப்பட்டு வெளியேற்றம், குறைந்த பட்ஜெட், தேவையான கருவிகள் கிடைக்காமல் நிறுத்தப்பட்ட அக்னி ஆராய்ச்சி திட்டங்கள், இவற்றிற்கு நடுவே டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் விஞ்ஞானிகள் குழு தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தது.

மே 22, 1989.  விடிந்தால் போதும்.  காலையிலேயே  அக்னி ஏவுகணையை ஏவ தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார் அப்துல் கலாம்.  அன்று அதிகாலை 3 மணிக்கு அப்துல் கலாமிற்கு போன் கால், மறுமுனையில் பிரதமர் ராஜீவ் காந்தியின் கேபினட் செயலாளர்  டி. என். சேஷன்.   “கலாம்.. அக்னி ஏவுகணை ஏவுதலை தள்ளி வைக்க வேண்டும், அமெரிக்கா மற்றும் நாட்டோ நாடுகள் ஏவக்கூடாது,  ஏவினால் பொருளாதார தடை, தொழில்நுட்ப தடை விதிப்போம் என்கிறார்கள். பிரதமர் ராஜிவ் காந்தி தள்ளி வைக்க விரும்புகிறார், தள்ளி வைக்க முடியுமா?” என்று கேட்டார்.

சற்று திகைத்த டாக்டர் அப்துல் கலாம், அனைத்து ஏற்பாடுகளும் தயார்.  பட்டன் அழுத்தினால் ஏவுகணை பறக்கும் நிலையில் உள்ளது.  இனி இதை தள்ளி வைக்க முடியாது.”  என்று கூறினார். அதற்கு டி.என்.சேஷன்   “சரி நான் பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.”  என்றார். ஒரு வேளை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பயந்து தள்ளி வைக்க சொல்லிவிடுவாரோ என்று அப்துல் கலாமிற்கு மனக்குழப்பம். அனைத்து முயற்சிகளும் வீணாகப் போய்விடுமே என்ற பயம்.  வழக்கமாக நமது அதிகாரிகள் அமெரிக்கா என்றால் அதற்கு அடிபணிந்து  நடந்து கொள்வது தான் வழக்கம். எனவே கண்டிப்பாக நம்மை அக்னி ஏவுகணையை ஏவ விடமாட்டார்கள் என்று நினைத்தார். பல நாட்கள் உறங்காமல் இருந்தால் கூட சோர்வில்லாமல் உழைக்கக்கூடிய கலாம், முதல் முறையாக சோர்வடைந்து அடுத்த உத்தரவிற்கு காத்திருந்தார்.
 

ponraj about TN Seshan


அதிகாலை 4 மணிக்கு மறுபடியும் தொலைபேசி அழைப்பு. கலாம் எடுத்தார். எதிர்முனையில் சேஷன். "OK............ GO AHEAD..   பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்காவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நீங்கள் அக்னி ஏவுகணையை ஏவலாம்.” என்றார்.   மே 22, 1989 காலையில் இந்தியாவின் முதலாவது அக்னி ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டு இலக்கை 800 கி.மீ. தொலைவில் சென்று தாக்கியது.  மறுநாள் புயல் அடித்து அந்த அக்னி ஏவுகணை தளம் மிகவும் சேதமாகிவிட்டது.

இன்றைக்கு இந்தியா 5000 கி.மீ தாண்டி எதிரி நாட்டு இலக்குகளை துல்லியமாக தாக்ககூடிய வல்லமைக்கு விதை விதைத்ததில் திரு டி.என். சேஷன் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. டாக்டர் கலாம் என்னை அவருடன் பணியாற்ற அழைத்த போது என்னை ஊக்கப்படுத்தி அவருடன் பணியாற்ற அனுமதி அளித்தவர் AERONAUTICAL DEVELOPMENT AGENGY, MIN. OF DEFENCE -ல் இருந்த எனது துறைத்தலைவர் டாக்டர் R.K. ராமநாதன் அவர்கள்.  இவரது அக்கா தான் டி.என். சேஷன் அவர்களின் துணைவியார்.

டி.என்.சேஷன், தேர்தலுக்கு இலக்கணம் வகுத்தவர். அவரது மறைவு தேசத்திற்கே பெரும் இழப்பு.” என்றார் உடைந்த குரலில். டி.என்.சேஷனும் ஒருவிதத்தில் அக்னியே!


 
 

Next Story

விமான கட்டணக் கொள்ளை; கண்டுகொள்ளாத பிரதமர் மோடி - விளாசும் பொன்ராஜ்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Ponraj Interview

 

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பந்தமாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.

 

முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கூறுகையில் மத்திய அரசினுடைய அலட்சியத்தாலும் ரயிலில் பாதுகாப்புக் கருவி பொருத்தப்படாமல் இருப்பதன் காரணமாகவும் தான் மிகப் பெரிய இரயில் விபத்து நடந்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகிறார்களே?

ரயில்வேயின் முதன்மை அதிகாரி இதைப் பற்றி ஏற்கனவே அறிக்கை கொடுத்த போதும் அதற்குண்டான  நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் தான் இப்படி ஒரு விபத்து நடந்துள்ளது. மேலும் மத்திய அரசு ரயில்வேயின் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் பட்ஜெட் மிக மிகக் குறைவு. 2018ல் ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு 82% தான் பட்ஜெட் ஒதுக்கியது. பின்பு ஒவ்வொரு வருடமும் இந்த சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே துறையை அதிகப்படுத்துவதற்கு 2,40,000  கோடியை ஒதுக்கிய மத்திய அரசு. ஆனால் ரயில்வே பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை பார்க்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியத்தை கணிசமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு. இப்படி ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியத்தைக் குறைத்தால் அவர்கள் எப்படி வேலை பார்ப்பார்கள்? மேலும், ரயில்வேயில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த பணியில் இன்னும் அமர்த்தப்படாமல் இருக்கின்றார்கள். ஆகவே இந்த 300 பேர் குடும்பத்தின் பரிதவிப்புக்கு மத்திய அரசின் அலட்சியப்போக்கு தான் காரணம்.

 

சிக்னல் தொடர்பாகத் தான் விபத்து நடந்துள்ளது. இது பற்றி சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதற்குள் ஏன் பதவி விலக வேண்டும் என்று கூறி அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மத்திய அரசு கூறுகிறதே?

இந்த விபத்து நடந்ததுக்கு முக்கிய காரணம் இன்டர்லாக்கிங் சிஸ்டம் தோல்வி அடைந்தது தான். மத்திய அரசு கூறியபோதும் இந்த வழக்கை ஏன் சிபிசிஐடிக்கு கொடுக்க வேண்டும். இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றைக்கும் மாறாமல் நிலையாக இருக்கக் கூடிய ஒரு கருவி ஆகும். இந்த இரண்டு இரயில் தண்டவாளத்தில் வரும்போது அதற்கு கொடுக்கக் கூடிய தகவல் சரியாக இருக்கும் பட்சத்தில் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் கோளாறு நடந்துள்ளது. அதற்கு ரயில்வே துறை அமைச்சர் தான் காரணம். ஒரு ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே பாதுகாப்புக்கு ஏன் பட்ஜெட் சதவீதத்தை குறைத்துள்ளீர்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தவே இல்லையே. மேலும், இந்த விபத்து நடந்ததுக்கு ரயில்வே துறை ஊழியர்கள் தான் காரணம் என்று பழியை அவர்கள் மீது திருப்புவதற்குத் தான் சிபிசிஐடிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது மத்திய அரசு.

 

மேலும் 66,000 கிலோ மீட்டர் உள்ள ரயில்வே துறைக்கு வெறும் 1600 கிலோமீட்டர் உள்ள ரயிலில் தான் பாதுகாப்பு கருவியான கவாச் கருவியை பொருத்தியுள்ளனர். ஒரு விபத்து நடைபெறுவதற்கு முன்னாள் 400 மீட்டருக்கு முன்னரே தகவல் தரக்கூடிய கருவியை பொருத்தப்படாமல் மேம்போக்காக இந்த விஷயத்தைக் கையாளுகிறது மத்திய அரசு. ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் பேர் பயணிக்கும் ரயில்வேயில் கழிப்பறை சுத்தமாக இல்லை. அதில் பயணிக்கும் ஒவ்வொரு பெட்டி பயணிகளுக்கு அவசர மருத்துவக் குழு இல்லை. அல்லது முதலுதவி கருவி கூட இல்லாத ரயில்வேக்கு அமைச்சராக இருந்து என்ன பயன்? தேசத்திற்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன்? இதற்கு மத்திய அமைச்சர் பதவி விலகுவதே மேல்.

 

விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து இருக்கிறதே அதைப் பற்றி ?

வருடத்திற்கு ஒரு கோடி மக்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது இந்திய அரசிடம் பன்னிரண்டு விமானம் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் 12 கோடி மக்கள் பயணிக்கும் இந்த விமானங்களில் இந்திய அரசிடம் வெறும் ஒரே ஒரு விமானம் மட்டுமே உள்ளது. அனைத்து துறைகளையும் இப்படி தனியார்மயமாக்கியதன் காரணமாகத்தான் இன்று ரயில்வே சேவை பற்றாக்குறை ஏற்பட்டபோது விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஏன் அமைச்சரவை? அனைத்து துறைகளையும் கலைத்து தனியார் துறைகளிடம் கொடுக்க வேண்டியதுதானே? தற்போது கட்டி இருக்கும் நாடாளுமன்றம் பாஜக அலுவலகமா அல்லது ஆர்எஸ்எஸ் மன்றமா? என்று தெரியவில்லை. ஆக மொத்தம் இதனால் பாதிக்கப்படுவது விபத்தில் இறந்து போன 300 பேரும்... அப்பாவி பொது மக்களும் தான்.

 

 

Next Story

"ராகுலின் ஒற்றுமைப் பயணம் வெற்றி பெறும்"  - பொன்ராஜ் 

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

ponraj talks about rahul gandhi bharat jado yatra 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி அசைத்து இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது தற்போது 117வது நாளை எட்டியுள்ளது.

 

இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் ஆலோசகருமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி  நேற்று முன்தினம்  ஹரியானா - பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள உள்ள கர்நோல் என்ற இடத்தில் ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 115வது நாளில் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், "சுதந்திர தினத்திற்கு முந்தைய நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு உரையாற்றிய இலட்சியத்தை நோக்கிய முயற்சி என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெற்றி பெற்றதைப் போன்று, தற்போது ராகுல் மேற்கொண்டு வரும் இந்த நடைப்பயணம், மக்களை ஒன்றிணைத்து பாசிச சக்திகளைத் தோற்கடித்து இந்த ஒற்றுமைப் பயணம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.