“டி.என். சேஷனை சிறந்த தேர்தல் கமிஷனராகப் பார்த்திருப்போம். அக்னியாகப் பார்த்ததுண்டா?” என்று நம்மிடம் கேள்வி எழுப்பிய அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அமரராகிவிட்ட டி.என்.சேஷன் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

Advertisment

ponraj about TN Seshan

“முதல் அக்னி ஏவுகணையை ஏவ இரவு பகல் பாராமல் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் தலைமையில் DRDO விஞ்ஞானிகள் உழைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னோரு பக்கம் அக்னி ஏவுகணை ஏவக்கூடாது என்று அமெரிக்காவும், நாட்டோ நாடுகளின் கூட்டமைப்பும் அன்றைய பிரதமர் திரு ராஜிவ் காந்திக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. அமெரிக்க மற்றும் நாட்டோ நாடுகள் இந்தியாவின் அக்னி ஏவுகணை திட்டத்தை வெற்றி பெற விடக்கூடாது என்று ஒரு பக்கம் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மறுப்பு, வெளிநாட்டில் அக்னி கூட்டு தொழில்நுட்ப திட்டத்தில் பணியாற்றிய இந்திய விஞ்ஞானிகள் தொழில்நுட்பம் கொடுக்க மறுக்கப்பட்டு வெளியேற்றம், குறைந்த பட்ஜெட், தேவையான கருவிகள் கிடைக்காமல் நிறுத்தப்பட்ட அக்னி ஆராய்ச்சி திட்டங்கள், இவற்றிற்கு நடுவே டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் விஞ்ஞானிகள் குழு தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தது.

மே 22, 1989. விடிந்தால் போதும். காலையிலேயே அக்னி ஏவுகணையை ஏவ தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார் அப்துல் கலாம். அன்று அதிகாலை 3 மணிக்கு அப்துல் கலாமிற்கு போன் கால், மறுமுனையில் பிரதமர் ராஜீவ் காந்தியின் கேபினட் செயலாளர் டி. என். சேஷன். “கலாம்.. அக்னி ஏவுகணை ஏவுதலை தள்ளி வைக்க வேண்டும், அமெரிக்கா மற்றும் நாட்டோ நாடுகள் ஏவக்கூடாது, ஏவினால் பொருளாதார தடை, தொழில்நுட்ப தடை விதிப்போம் என்கிறார்கள். பிரதமர் ராஜிவ் காந்தி தள்ளி வைக்க விரும்புகிறார், தள்ளி வைக்க முடியுமா?” என்று கேட்டார்.

Advertisment

சற்று திகைத்த டாக்டர் அப்துல் கலாம், அனைத்து ஏற்பாடுகளும் தயார். பட்டன் அழுத்தினால் ஏவுகணை பறக்கும் நிலையில் உள்ளது. இனி இதை தள்ளி வைக்க முடியாது.” என்று கூறினார். அதற்கு டி.என்.சேஷன் “சரி நான் பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.” என்றார். ஒரு வேளை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பயந்து தள்ளி வைக்க சொல்லிவிடுவாரோ என்று அப்துல் கலாமிற்கு மனக்குழப்பம். அனைத்து முயற்சிகளும் வீணாகப் போய்விடுமே என்ற பயம். வழக்கமாக நமது அதிகாரிகள் அமெரிக்கா என்றால் அதற்கு அடிபணிந்து நடந்து கொள்வது தான் வழக்கம். எனவே கண்டிப்பாக நம்மை அக்னி ஏவுகணையை ஏவ விடமாட்டார்கள் என்று நினைத்தார். பல நாட்கள் உறங்காமல் இருந்தால் கூட சோர்வில்லாமல் உழைக்கக்கூடிய கலாம், முதல் முறையாக சோர்வடைந்து அடுத்த உத்தரவிற்கு காத்திருந்தார்.

ponraj about TN Seshan

அதிகாலை 4 மணிக்கு மறுபடியும் தொலைபேசி அழைப்பு. கலாம் எடுத்தார். எதிர்முனையில் சேஷன். "OK............ GO AHEAD.. பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்காவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நீங்கள் அக்னி ஏவுகணையை ஏவலாம்.” என்றார். மே 22, 1989 காலையில் இந்தியாவின் முதலாவது அக்னி ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டு இலக்கை 800 கி.மீ. தொலைவில் சென்று தாக்கியது. மறுநாள் புயல் அடித்து அந்த அக்னி ஏவுகணை தளம் மிகவும் சேதமாகிவிட்டது.

Advertisment

இன்றைக்கு இந்தியா 5000 கி.மீ தாண்டி எதிரி நாட்டு இலக்குகளை துல்லியமாக தாக்ககூடிய வல்லமைக்கு விதை விதைத்ததில் திரு டி.என். சேஷன் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. டாக்டர் கலாம் என்னை அவருடன் பணியாற்ற அழைத்த போது என்னை ஊக்கப்படுத்தி அவருடன் பணியாற்ற அனுமதி அளித்தவர் AERONAUTICAL DEVELOPMENT AGENGY, MIN. OF DEFENCE -ல் இருந்த எனது துறைத்தலைவர் டாக்டர் R.K. ராமநாதன் அவர்கள். இவரது அக்கா தான் டி.என். சேஷன் அவர்களின் துணைவியார்.

டி.என்.சேஷன், தேர்தலுக்கு இலக்கணம் வகுத்தவர். அவரது மறைவு தேசத்திற்கே பெரும் இழப்பு.” என்றார் உடைந்த குரலில்.டி.என்.சேஷனும் ஒருவிதத்தில் அக்னியே!