Skip to main content

எங்கள் ஊர் பொங்கல்!  பழைய நினைவுகளில் நீதியரசர் அக்பர் அலி 

 

தைப்பொங்கல். தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில் எனது  இளமைக்காலம். வல்லம் கிராமம் ஆற்றுப்பாசான நஞ்சை நிலப்பகுதி அல்ல. ஊரைச்சுற்றி வானம் பார்த்த புஞ்சை நிலங்கள். கோடை மழையை நம்பி , வேர்கடலை, துவரை, கம்பு, கேழ்வரகு போன்ற தான்யங்கள் பயிரிடுவோம். துவரை மிளார் கட்டுக்கட்டாகவாங்கி என் தாயார் நெல் வேகவைக்கும் அடுப்பெரிக்க பயன்படுத்துவார்கள். 

 

n

 

காய்ந்த துவரை குச்சியில் நடுப்பகுதி ஓட்டையாக இருக்கும். நுங்கு வாங்கிய பனைஓலையை காயவைத்து, காற்றாடி செய்து, நாணல் விளக்குமாற்று குச்சியில், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் லெவலில் அதை வடிவமைத்து, துவரைக்குச்சியில் செறுகி, ஆடிக் காற்றில் சுற்ற ஓடிவந்தக்காலம். 


வல்லத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு, எனக்கு அடுத்த தாய் வீடு. மாணிக்கம், சுந்தராம்பாள் வீடு. நான் 1952ல் பிறப்பதற்கு முன்பே பக்கத்து வீட்டு அப்பா காலமாகிவிட்டாராம். பக்கத்து வீட்டு அம்மாதான் எங்கள் எல்லோருக்கும் அம்மா. அவர்களின்  பிள்ளைகள், சுந்தர்ராஜன், நாராயணன், துரைராஜ்,பத்மநாபன், இளங்கோவன் எனக்கும், என் சகோதரிகள், அம்மாஜான், மும்தாஜ், நூரம்மாளுக்கு, அண்ணன்மார்கள். கமலமும், ராஜமும் அக்காமார்கள். நான் எல்லோருக்கும் தம்பி. அடுத்தவீட்டுஅம்மா என் தாயாரை “ ஜெயினுபீ ! தம்பி பயலை வரச்சொல்லு! “ என்று குரல் கொடுக்க, என் தாயார்” இதோ வரச்சொல்றேனக்கா” என்று என்னை அனுப்ப, நான் போய் அன்றைக்கு அம்மா செய்த பலகாரத்தை வாங்கிவந்து முதல் ஆளாக தின்றக்காலம். 

 

மார்கழி மாதங்கள். முன்பனிக்காலம். மார்கழி முழுக்க கமலத்தக்காவிற்கு எங்கிருந்துதான் அந்த மஞ்சள் நிற பரங்கிப்பூ கிடைக்குமோ? வாசலில் கோலமிட்டு, நடுவில் சிறிது பசுஞ்சாணம் வைத்து, அதில் பரங்கிப்பூ அழகாக அமர்ந்திருக்கும். 

 

தை மாதம் நெருங்க நெருங்க ஊரே பரப்பரப்பாய் இருக்கும். பொங்கலுக்கு வேட்டி, சட்டை, துண்டு. எங்களுக்கு நான்கு ஊர்களில், வடக்கஅவர்கள் இருவரும்தான் எங்கள் இரு வீட்டாருக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் பொங்கலுக்கு வேட்டி, துண்டு எடுப்பார்கள். கரும்பு கட்டுக்கட்டாய் வரும். 

 

கிராமத்திற்கு தெற்கே உள்ள ஊரணிக் குளக்கரை அருகே, கரும்பும், மஞ்சளும் வண்டி வண்டியாய் வந்திறங்கி, விழாக்காலமாக இருக்கும். நானும், நண்பர்களும், அங்குபோய் வேடிக்கை பார்த்து விட்டு, மஞ்சள் கொத்துலிருந்து உதிர்ந்து விட்ட மஞ்சளை பொறுக்கி வருவோம். விரலைப்போன்ற ஒரு தண்டை உடைத்து, தென்னை விளக்குமாறு குச்சியால் குடைந்து ஏற்பட்ட குழியில், சுண்ணாம்பை வைத்து கடைய, மஞ்சள், சிவப்பாக மாறும். உள்ளங்கைகளில், சுவற்றில், காகிதங்களில் அவை கோலங்களிடும்.

p

நெல் அறுத்து வந்துவிட்டதா? இன்னும் அறுப்பாகவில்லையா? எப்போது அறுப்பு ? என்ற கேள்விகள். அறுத்தாலும் அறுக்காவிட்டாலும், தைப்பிறப்பது நிற்காதே. பொங்கல் நாள். சுற்றிக் கூடமாக, நடுவில் திறந்ததாழ்வாரமாக உள்ள அம்மா வீட்டில், கிழக்கு பார்த்து வைக்கப்பட்ட புது அடுப்பு; சாமந்தி பூ, பீளைப்பூ சுற்றப்பட்ட புது மண்பானை. அதன் கழுத்தில் கிழங்குடன்கட்டப்பட்ட மஞ்சள் தாள். 

 

இருபுறமும் சாய்த்து வைக்கப்பட்ட கரும்பு கட்டுகள். எப்போ பொங்கும் என்ற எங்கள் நச்சரிப்புக்கு நடுவே, அரிசியுடன் கொதிக்கும் உலைநீரில், கமலத்தக்கா கையில் பசும்பாலைக் கொடுத்து அம்மா ஊற்றச் சொல்ல, உலை பொங்கும், நாங்கள் “ பொங்கலோ பொங்கல்“ என்று கூவி குதிப்போம். 

 

“கொஞ்சம் பொறுங்கடா” என்று சொல்லும் அம்மா, ராஜத்தக்காவிடம், சக்கரைப்பொங்கலை சரிப்பார்க்க சொல்வார்கள். எனக்கு பால் பொங்கலைவிட சக்கரைப் பொங்கல்தான் ரொம்ப பிடிக்கும். முதலில்சூரியனுக்கத்தான் படையல். அதற்கு பிறகுதான் எங்களுக்கு. திண்ணையில், மாமாவும், (கமலதக்கா கணவர்,) அவர் தந்தை (அக்கா மாமனார்) பட்டுக்கோட்டை தாத்தாவும் உட்கார்ந்திருப்பார்கள். பட்டுக்கோட்டை தாத்தா வாஞ்சையின் மொத்த உருவம். உருவமும் கொஞ்சம் தடிமன். கரும்பை சீவி, துண்டுகளாக்கி எங்களுக்கு தந்து மகிழ்பவர். என் தாயார், எங்கள் வீட்டிலும், சம்பிரதாயங்கள் 

 

இல்லாமல் சோறு பொங்குவார்கள். அனைத்து காய்கறிகளும்போட்டு ஒரு குழம்பு. சக்கரை வள்ளிக்கிழங்கும், அவரைக்காயும் அவசியம் இருக்கும். வாழை இலை சாப்பாடு. மாட்டுப்பொங்கல். எங்கள் ஊரில் எல்லோர் வீடுகளிலும் மாடுகள் இருக்கும். எங்களிடம் பசு மாடும், வண்டிமாடுகளும் இருந்தன. ஊரில் ஆயிரக்கணக்கான மாடுகள் இருந்தன. காளை மாடுகள் கொம்புகள்சீவப்பட்டு பளப் பளா என்று இருக்கும். சிலர் அழகிய வர்ணம் பூசுவார்கள். முதல் நாளே வண்டி வண்டியாய்மஞ்சள் சாமந்தி பூக்கள் வந்துவிடும். சிலர் மாலைகளாகவே விற்பார்கள். தஞ்சாவூரிலிருந்து, வர்ண காகிதமாலைகளும்,  தக்கை மாலைகளும் வந்துவிடும். மதியம் அலங்கரிக்கப்பட்ட மாடுகள் எங்கள் தெருவிற்கு எதிரில், பெரிய மைதானத்துடன் இருக்கும், மாரியம்மன் கோவிலுக்கு மாடுகள்  வரஆரம்பித்துவிடும்.

 

ஒவ்வொரு தெரு மாடுகளை அதன் உரிமையாளர் அல்லது பணியாள் ஒரு அணிவகுப்பில், மேளதாளத்துடனும், பறையோசையுடனும், பிரதான சாலையில் ஊர்வலம்அழைத்து வந்து , மாரியம்மன் கோவில் வந்து அணிவரிசையில் நிறுத்த, பூசாரி, தீபாராதனைக் காட்ட, பூசைமுடிந்து மாடுகள் வீடு திரும்பும். இப்படி ஒவ்வொரு தெரு மாடுகள், தனித்தனியாக அல்லது சேர்ந்து வரும். இறுதியாக முஸ்லிம் தெரு மாடுகள். பெரும்பாலும் பணியாட்கள் மாடுகளை ஓட்டிவருவார்கள்.


ஊரை விட்டு வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பக்கத்து வீட்டில், பத்மநாபன் அண்ணனைத் தவிர்த்து, அம்மாவும் மற்ற அண்ணன்மார்களும் படங்களாகி  விட்டார்கள். கமலத்தக்கா தஞ்சையில் தன்மகனுடன் இருக்கிறார்கள். ராஜத்தக்கா இல்லை. பெரியண்ணன் வீட்டில், அம்மாவின் அதே வாஞ்சையுடன், பெரிய அண்ணியும், பிள்ளைகள் ராஜா, புனிதா, சுகந்தி இருக்கிறார்கள். ராஜேந்திரனும்,சுமதியும் அவர்களுக்கும் மூத்தவர்கள். தனியாக குடும்பத்துடன் இருக்கிறார்கள். பத்தண்ணா என்கிற பத்மநாபன்அண்ணனும், வேம்பு அண்ணியும் அம்மா வீட்டின் ஒரு பகுதியில் இருக்கிறார்கள். மற்றொரு  பகுதியில், சாந்தாம்மா, தாய்மாமன் இளங்கோ 

அண்ணனுக்கு கட்டி வைக்கப்பட்ட, கமலத்தக்கா மகள் இருக்கிறார். ஊருக்கு போகும் போதெல்லாம் அம்மா வீட்டுக்கு போகாமல் வருவதில்லை. அம்மா வீட்டுக்கு போனாலே பொங்கலின் மணம் வீசும், பொங்கலோ பொங்கல் மனதில் ஒலிக்கும். தமிழர் தினத்தில் மங்களம் பொங்கட்டும்! வளமும் நலமும் பொங்கட்டும்!மகிழ்வு பொங்கட்டும்! என் சொந்தங்கள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும்.

பழைய நினைவுகளில்....

நீதியரசர் அக்பர் அலி,

மேநாள் நீதிபதி, சென்னை. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்