Skip to main content

காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல்... நாராயணசாமி ஆட்சிக்கு ஆபத்தா? பாஜக போட்ட அதிரடி திட்டம்!

கவர்னர் கிரண்பேடியை சமாளித்து நான்காண்டுகள் ஆட்சியை நகர்த்துவதே பெரும்பாடு புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு. இதில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே ஊழல் குற்றச்சாட்டுகளை கிளப்பி கலகத்தை ஏற்படுத்தியுள்ளார். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். கட்சி எம்.எல்.ஏ.வின் கலகம் நாராயணசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான நிதிப்பற்றாக்குறையால், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள்கூட இருப்பு இல்லை.

 

congressஇந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் எதுவும் இல்லை, அவசர உதவிக்கு ஆம்புலன்சை இயக்க டீசல் கூட போட இயலாத நிலை'' என்று காங்கிரஸ் அரசை கண்டித்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பொது மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தனவேலு,…"புதுச்சேரியில் அரசு நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சீர்குலைந்துவிட்டது. முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமைத்திறன் கிடையாது. கொல்லைப்புறமாக முதலமைச்சர் பதவிக்கு வந்த நாராயணசாமி தானாக முன் வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார்.
 

bjpசெய்தியாளர்களை சந்தித்த தனவேலு, கிரண்பேடியை சந்தித்து புகார் மனுவையும் அளித்தார். அதைத்தொடர்ந்து டெல்லி சென்ற நாராயணசாமியும், நமச்சிவாயமும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்தித்து முறையிட்டனர். பின்னர் புதுச்சேரி வந்த அவர்கள், கட்சி விரோத நட வடிக்கையில் ஈடுபட்ட பாகூர் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக நமச்சிவாயம் அறிவித்தார்.

இதுதொடர்பாக அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ.விடம் பேசினோம், "தனவேலு எம்.எல்.ஏ. கடந்த 2 ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் செயல்பாடு இல்லாமல் உள்ளார். எனவே புதுவை அரசையோ, முதலமைச்சரையோ விமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு ரங்கசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டுவர செயல்பட்டார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுடன் மாஹே சென்று அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனிடம் பேசி ஆதரவு கேட்டுள்ளனர். அது எடுபடாத நிலையில் தனவேலு கட்சியின் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. 4 வருடங்கள் பதவிகளில் இருந்து விட்டு இப்போது குற்றச்சாட்டு சொல்வது நாகரிகமற்றது.

 

congressஇவர் பாப்ஸ்கோ சேர்மனாக இருக்கிறார். ஆட்சி நிர்வாகத்தில் இவரும் ஒரு அங்கம். பாப்ஸ்கோவில் நடைபெறும் முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு? பாப்ஸ்கோ மீது சி.பி.ஐ. விசாரணை வைக்கலாம். பாகூர் தொகுதியிலுள்ள மதுக்கடைகளில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அரசுக்கு எதிராக பேசியதும் இவரை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. சந்திக்கிறார். ஆட்சிமாற்றம்தான் அவர்களது விருப்பம். தனவேலு பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக, என்.ஆர். காங்கிரஸின் கைக்கூலியாக செயல்படுகிறார்'' என்றார்.

இதுகுறித்து தனவேலுவிடம் கேட்டதற்கு, முதல்வரும் அமைச்சர்களும் சேர்ந்து என்னை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். என்னை நீக்க மாநில காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. முதல்வர், அமைச்சர்களின் ஊழலை தட்டிக் கேட்டது தவறா? என்மீது அகில இந்திய தலைமைதான் நடவடிக்கை எடுக்க முடியும். விளக்கம் கேட்டால் பதில் தர தயாராக உள்ளேன். சோனியா, ராகுலை சந்தித்து முதல்வர், அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் முறையிடுவேன். அதேபோல் காங்கிரஸ் ஆட்சியை மாற்ற முயற்சித்ததாக என்மீது புகார் கூறுவது ஆதாரமற்றது. கட்சித் தலைமை தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிப்பேன்'' என்றார்.


இதனிடையே அ.தி.மு.க. சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும் போது, “காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் நடக்கிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வே அடுக்கடுக்காக புகார்களை கூறுகிறார். அது உட்கட்சி விவகாரமாக இருப்பினும் சட்டமன்ற உறுப்பினரான அவர், அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்'' என வலியுறுத்தினார்.


"தனவேலுவின் இந்த தடாலடி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரித்ததில், “கிரண்பேடியின் முட்டுக்கட்டைகளால் எதையும் செய்ய முடியவில்லை என கட்சிக்காரர்களிடம் கையை விரிப்பதைப் போல எம்.எல்.ஏ.க்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா…? முதலமைச்சர், அமைச்சர்கள் மட்டுமே சம்பாதித்தால் எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்வார்கள்? சிலரால் சொல்ல முடியவில்லை. தனவேலு வேறு வடிவில் சொல்கிறார்'' என்கின்றனர். 

வெறும் வாயை மெல்லும் கிரண்பேடிக்கு அவல்’ கிடைத்தால் சும்மா விடுவாரா…? தனவேலுவின் ஊழல் புகார்களை ஊதிப் பெரிதாக்குகிறார். ஒவ்வொரு முறை ஒவ்வொரு பிரச்சினை நாராயணசாமிக்கு. இம்முறை சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.வாலேயே பிரச்சினை. எப்படி சமாளிக்கப் போகிறார், பார்ப்போம்.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்