Skip to main content

ஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் திடீர் திருப்பமாக பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன என்கிறது ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரம். பொள்ளாச்சி வழக்கில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் பாலியல் துன்புறுத்தல் தாக்குதல், தனிமனித உரிமை மீறல் ஆகிய பிரிவுகளில் குற்றவாளிகளை சேர்த்திருக்கிறார்கள். வழக்கில் தொடர்புடைய பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி அதற்குப் பின் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களை கற்பழித்து அதை வீடியோ படமாக்கி பாதிக்கப்பட்ட பெண்களை பிளாக்மெயில் செய்தார்கள் என சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சொல்கிறது.

 

pollachi issuesஅடுத்த வழக்கு, ஒரு பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்ததாக சி.பி.ஐ. சொல்லியிருக்கிறது. முதல் வழக்கில் சபரிராஜன் (எ) ரிஷ்வந்த், திருநாவுக்கரசு, சத்தீஷ், திருநாவுக்கரசுவின் உதவியாளரான வசந்தகுமார் மற்றும் மணி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என்கிறது சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகை.

முதல் வழக்கை ஒரு பெண் அதிகாரியும் இரண்டாவது வழக்கை ஒரு ஆண் அதிகாரியும் விசாரிக்கிறார்கள். இதில்தான் ஒரு புதிய ட்விஸ்ட் வந்திருக்கிறது. குற்றவாளிகள் அனைவர் மீதும் போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இப்பொழுது சாதாரண பாலியல் வழக்கு குற்றவாளிகளாகத்தான் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் சிறையில் இருக்கிறார்கள். குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும் இந்தக் குற்றவாளிகள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யவில்லை.

 

admkஅவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் பெரிய பிரச்சினை வரும். அவர்களை மீடியாக்கள் பின்தொடரும் என்பதால் அவர்கள் சிறைக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறையில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரியின் அறையிலேயே வெளியில் இருக்கும் நண்பர்களை சந்திக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கும்மாளம் என மதுவகைகளோடு சந்தோஷமாகவே சிறைத்துறை வைத்திருக்கிறது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட முடியும். ஆனால் இவர்கள் சிறைக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு குடும்பத்தினர் மத்தியில் ஒரு செய்தி ரகசியமாக பகிரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ்காரரான திருநாவுக்கரசின் அப்பா இந்த வழக்கிற்குப் பிறகு, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமான காங்கிரஸ் வி.ஐ.பி.யான மயூரமானவரிடமும் நெருங்கிப் பழகி வருகிறார். இவர்களிடம் ஒரு புதிய விஷயத்தை சொல்கிறாராம்.


"எனது மகன் திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டான். "என்னிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதை நான் வெளியிட்டால் இன்றைய ஆளும்கட்சி தாங்காது' என பேசியிருந்தான். அந்த வீடியோ பேச்சைத் தொடர்ந்து அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவனை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவனிடமிருந்த வீடியோ பதிவுகளை பெறுவதில் போலீசார் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டனர். அவனிடமிருந்த எல்லா வீடியோ பதிவுகளையும் வாங்கி விட்டதாக போலீசார் நினைத்தனர். ஆனால் அவன் தலைமறைவாக இருந்த நேரத்தில் அந்த வீடியோக்களை ரகசியமாக பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தான்.

எங்களுடைய வீட்டை போலீசாரும் பொதுமக்களும் அடித்து உடைத்தனர். நாங்கள் அவமானப்பட்டோம். நஷ்டப்பட்டோம். நாங்கள் நடத்தி வந்த ஃபைனான்ஸ் வியாபாரம் படுத்துக் கொண்டது.


சிறையிலிருக்கும் என் மகன் சில வீடியோக்கள் இருக்கும் இடத்தை சொன்னான். நான் அதை எடுத்துக் கொண்டு போய் அதில் தொடர்புடைய வி.ஐ.பி.க்களிடம் சில காட்சிகள் மட்டும் போட்டுக் காட்டினேன். பயந்து போன அவர்கள் லட்சக்கணக்கில் பணம் தந்தார்கள். சோர்ந்து போன என் குடும்பம் நிமிர்ந்தது. அந்த வீடியோக்களில், டெல்லியில் மத்திய மந்திரிகளிடமும் சி.பி.ஐ.யை கையாளும் அமித்ஷாவிடமும் பேசும் அளவிற்கு ஒரு வி.ஐ.பி.யின் மகன் சிக்கியிருக்கிறான். அந்த வீடியோவை பற்றி நான் பேச ஆரம்பித்ததும் பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, சென்னை தலைமைச் செயலகம் வரை அதிர்ந்தது.

அவர்களிடம் நான் ஒரேயொரு கோரிக்கை தான் வைத்தேன். எனது மகன் திருநாவுக்கரசு குற்றமற்றவன். சபரிராஜன்தான் முக்கிய குற்றவாளி. அவனை தண்டியுங்கள். எனது மகனை சாட்சியாக மாற்றுங்கள் என கோரிக்கை வைத்தேன். அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்' என திருநாவுக்கரசின் அப்பா சொல்கிறார்'' என்கிறது பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. வட்டாரம்.

இதுபற்றி சி.பி.ஐ. வட்டாரத்தை கேட்டபோது, "இந்த வழக்கில் ஒரு பெண் மட்டும் புகார் கொடுத்ததாக நினைக்கிறார்கள். நக்கீரன் கண்டுபிடித்து பேட்டியெடுத்த மற்றொரு பெண் ணும் இருக்கிறார். "அண்ணா அடிக்காதீங்கண்ணா' என கதறி அழும் அந்தப் பெண்ணும் அவரது அம்மாவும் தெளிவாக திருநாவுக்கரசுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்'' என்கிறார்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க. மகளிர் அணியை வைத்து பொள்ளாச்சி சம்பவம் பொய் என பிரச்சாரம் செய்யச் சொல்லி பொள்ளாச்சி ஜெயராமன் சொல்ல, அவரை அடிக்காத குறையாக நிராகரித்து விட்டார்கள் மகளிரணியினர்.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...