Skip to main content

''எங்களை எங்களது போக்கில் விட்டால்...'' - பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்! 

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

dddd

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இப்பொழுது கைது செய்யப்பட்ட அருளானந்தம், ஹெரான்பால், பாபு ஆகியோரை கைது செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. முடிவெடுத்துவிட்டது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து கைதானதும் கட்டம் கட்டப்பட்டிருப்பவர்.

 
மூவருக்கும் எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ பல மாதங்களுக்கு முன்பே திரட்டிய நிலையில், "அ.தி.மு.க. நிர்வாகி மீது இப்பொழுது கை வைக்க வேண்டாம், தேர்தல் நேரத்தில் அதற்கான உத்தரவு வரும் என மத்திய உள்துறை தெரிவித்துவிட்டதால், இத்தனை மாதங்கள் காத்திருந்து ஜனவரி முதல் வாரத்தில் இந்தக் கைது நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது'' என்கிறார்கள் இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

"இந்த விவரம் முதல்வர் எடப்பாடிக்கும் தெரியும். இது தொடர்பாக பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யைக் கூப்பிட்டு, எடப்பாடி விசாரித்துள்ளார். அப்பொழுது, "நான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வேன்'' என எடப்பாடியிடம், அவர் மிரட்டியிருக்கிறார். அதனால் "அந்த பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யை பொள்ளாச்சி கட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்க வைக்கக்கூடாது என அவரை திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளராக இடம் மாற்றினார் எடப்பாடி" என்கிறார்கள் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க.வினர்.

 

dddd

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரிகள், சில அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறினார்கள். "கைது செய்யப்பட்ட அருளானந்தம், பொள்ளாச்சி நகரில் உள்ள மூன்று மதுக்கடைகளில் பார் நடத்தி வருகிறார். பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மனைவியின் மகன், மற்றும் ஏற்கனவே பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸாரால் விடுவிக்கப்பட்ட பார் நாகராஜ் மற்றும் பாபு, ஹெரான்பால் ஆகியோர் ஒரு டீமாகவே கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சுற்றித் திரிந்து பெண்களை வேட்டையாடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

 

இந்த அணியின் மொத்த எண்ணிக்கை 20. இதுவரை இவர்களோடு சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பார் நாகராஜ்தான் முக்கியமானவன். இந்த பார் நாகராஜும் பார் அருளானந்தமும் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். வேலுமணி, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. இருவரும் கேட்டுக்கொண்டதால்தான் பார் நாகராஜின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி வருகைதந்தார்.

 

பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு மிக நெருக்கமான முன்னாள் பொள்ளாச்சி நகராட்சித் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க. நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரான ஜேம்ஸ்ராஜா, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் உதவியாளரும் அவரது இரண்டாவது மனைவிக்கு நெருக்கமானவருமான வீராசாமி ஆகியோருடன் இணைந்து இந்த வேட்டையை பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் மகன் நடத்தியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஓடும் காரில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்தப் பெண் காரிலிருந்து தலைகீழாகக் குதித்து விபத்துக்குள்ளானார். அதில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி., தனது இரண்டாவது மகனை காப்பாற்றினார்.
 

dddd


அதேபோல் வீராசாமி மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழவே… அவரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு ஓ.பி.எஸ். ஆதரவுடன் ஜெயலலிதாவை ஏமாற்றி கும்பலோடு கும்பலாக அ.தி.மு.க.வில் இணையவைத்தார் அந்த பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. இந்த வீராசாமி, கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா ஆகியோர் சி.பி.ஐ. யின் விசாரணைப் பட்டியலில் இருக்கிறார்கள்.

 

பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. மீது பல பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்தது. அதையெல்லாம் சமாளிக்க உறுதுணையாக இருந்தவர் இந்த வீராசாமி. இவரை சி.பி.ஐ. கைதுசெய்து கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தயாராகி வருகிறது'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

‘இந்த வழக்கில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு நெருக்கமானவர்களும் அவரது இரண்டாவது மகன் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யும் முதல் குற்றவாளியாக சிக்குகிறார்’ என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

cnc

 

ஆக… சி.பி.ஐ. இப்பொழுதுதான் பாயத் தொடங்கியிருக்கிறது. "எங்களை எங்களது போக்கில் விட்டால் உண்மையில் பொள்ளாச்சி காமக்கொடூர விவகாரத்தில் என்ன நடந்தது என நாங்கள் வெளியே கொண்டுவருவோம்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.


 
இதற்கிடையே அருளானந்தம் கைது, அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. போன்றவர்களை கைது செய்தால் அது பெரும் பின்னடைவாக அமையும்" என அ.தி.மு.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சி.பி.ஐ. தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவதாக இல்லை.

 

இதுநாள் வரை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பயந்திருந்த பல இளம் பெண்கள் இப்பொழுது சி.பி.ஐ. வசம் சாட்சியங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். "இந்த வழக்கு நேர்மையாக நடந்தால் பலர் சிக்குவார்கள். பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மகன் தலைமையில் இயங்கிய இந்த காமக்கொடூரக் கும்பலில் இன்னும் 12 பேர் கைதாகவிருக்கிறார்கள். இதுதவிர கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா, வீராசாமி, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி., பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மகன் மற்றும் அமைச்சர் வேலுமணி என நடவடிக்கை பாயும்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

 


 

 

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார். 

Next Story

சிக்கிய கூடுதல் வீடியோக்கள்; 2 வருடம் கழித்து தலை காட்டிய பொள்ளாச்சி கொடூரர்கள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
More videos stuck; Pollachi case

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்கிறவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களின் விளைவாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு 9 பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் வீடியோ ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக இன்றைய தினம் 30 வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.