Skip to main content

தப்பிக்கும் குற்றவாளிகள்... ஜெயிலில் விஐபி சலுகை... மேலிட உத்தரவு நாங்க என்ன பண்ணுறது? 

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மறுபடியும் ஆவேசமாக வீதிக்கு வந்து கோபநெருப்பை கக்கியிருக்கிறார்கள். பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் குற்றவாளிகள் என சிறையில் இருக்கும் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து விடுவித்தது பொள்ளாச்சி நகர மக்கள் மத்தியில் கோபாவேச உணர்வை உருவாக்கியிருக்கிறது. அவர்களை சமாதானப்படுத்த போலீசார் கடுமையாக பாடுபட்டிருக்கிறார்கள்.
 

pollachi issues



போலீசார், ""நாங்கள் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து விடுவிக்கவில்லை. அவர்களை குண்டர் சட்டத்தில் போட நாங்கள் தான் உத்தரவிட்டோம். உயர்நீதிமன்றம்தான் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து விடுவித்தது. நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்ததோடு அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் முறைப்படி கொடுத்தோம். அவர்களது உறவினர்கள் நாங்கள் முறைப்படி ஆவணங்களை அவர்களுக்கு தரவில்லை என பொய் சொல்லி குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து தப்பித்திருக்கிறார்கள்'' என பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து காமக்கொடூர குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு. போலீசின் அலட்சியம்தான் இதற்கு காரணம் என சி.பி.எம்.மின் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
 

protest



போலீசார் அதற்கு அனுமதி மறுத்தார்கள். போலீஸ் அனுமதி வேண்டி மாதர் சங்க தோழர்கள் மாவட்ட எஸ்.பி.யான சஞ்சய்யிடம் பேசினார்கள். அவர், "அனுமதி கிடையாது. இது மேலிடத்து உத்தரவு'' என்று சொல்லிவிட்டு "போலீசாரை இந்த விவகாரத்தில் ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்?'' என கேட்டுள்ளார். "உங்களுக்கு தொடர்பு இல்லையென்றால் நீங்கள் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு நடவடிக்கையிலிருந்து விடுவித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல் ஏன் இருக்கிறீர்கள்? என மாதர் சங்க தோழர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை'' என்கிறார் ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட தலைவர் ராதிகா.
 

pollachi incident



குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது, சிறையில் இருக்கும் காமக்கொடூர குற்றவாளிகளான திருநாவுக்கரசையும் சபரிராஜனையும் உற்சாகப்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் நால்வரும் இதை சிறையில் சக கைதிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். சிறையில் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் ட்ரீட்மெண்ட்டை பெற்று வரும் பொள்ளாச்சி காமக்கொடூர குற்றவாளிகளுக்கு மேலும் அதிக சலுகைகளை குண்டர் தடுப்புச் சட்ட விலக்கு கொடுத்துள்ளது என்கிறார்கள் கோவை சிறைவாசிகள். அதேபோல் அந்த குற்றவாளிகளுடன் சேர்ந்து காமக்கொடூர செயல்களில் ஈடுபட்ட மற்றவர்களும் உற்சாக மடைந்துள்ளார்கள்.


"இந்த குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்' என மாதர் சங்க தோழர்கள் ஒட்டிய போஸ்டர்களை பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர்கள் கிழித்துள்ளனர். அதை கேள்விப்பட்டு மறுபடியும் போஸ்டர்கள் ஒட்டிய தோழர்களை போலீஸார் "பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள்' என கைது செய்து வழக்குப் போட்டார்கள்.

உடனே அந்த பகுதி சி.பி.எம். தோழர்கள் தி.மு.க.வினரை சந்தித்து போலீஸ் அராஜகத்தை கண்டித்து ஒரு நள்ளிரவு போராட்டம் நடத்த அழைத்தார்கள். அதற்கு பதிலளித்த தி.மு.க. நிர்வாகி தென்றல் செல்வராஜ் "நாங்கள் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கிறோம். இந்த விவகாரத்துக்கெல்லாம் வரமுடியாது என்று பதில் சொன்னார்கள்'' என வருத்தப்படுகிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்.

அதற்கு மறுநாள் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பெயரளவில்தான் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அதற்கு நேர்மாறாக வி.சி.க. அதிக ஆட்களை திரட்டியது. மற்ற தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் பெயரளவில் கலந்துகொண்டன. மாதர்சங்க தலைவர் உ.வாசுகி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தை பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர்.


பொதுமக்களும் ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கோஷத்திற்கு ஆதரவாக கோஷமிட... வெறும் 100 பேரோடு தொடங்கிய ஆர்ப்பாட்டம் பெரும் திரள் ஆர்ப்பாட்டமாக மாறியது. கடைசியில், பொதுமக்களை விலக்கிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய உ.வாசுகி உட்பட்ட தலைவர்களை மட்டும் கைதுசெய்து, அதன்பிறகு விடுவித்தது காவல்துறை.

சி.பி.ஐ. விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக திரண்ட பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில். பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடி மற்றும் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த நியாயமும் கிடைக்காது. மத்திய-மாநில அரசுகள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றன என்கிற முழக்கம் உயர்ந்திருக்கிறது'' என்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள்.

 

 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.