Skip to main content

அந்த கேவலமான பசங்களை எப்படியாவது புடிக்க வையுங்க  சார்... பொள்ளாச்சி சம்பவம்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஏப். 28-ஆம் தேதியிலிருந்து மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்ததும் விலகிக்கொண்டனர். ஆனாலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன் வீட்டிற்குள் சி.பி.ஐ. திடீரென நுழைந்து ஏகப்பட்ட ஆதாரங்களை அள்ளிச் சென்றதாகவும் அதற்கடுத்ததாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிலரிடம் விசாரித்ததாகவும் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. 
 

pollachi



இதை உறுதிப்படுத்துவதற்காக பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரில் இருக்கும் சபரிராஜன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம். காலிங்பெல்லை அழுத்தியதும் பெண்களும் சிறுவர்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தனர். "சபரிராஜன் வீடு இதானே' என நாம் கேட்டதும்... "ஆமா நீங்க யாரு?' என்றார் சபரிராஜன் அம்மா. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுதான் தாமதம், "இங்கிருந்து உடனே கிளம்புங்க, உங்ககிட்டயெல்லாம் பேச முடியாது' என பட்டாசாக வெடித்தார். நாம் அவரை போட்டோ எடுப்பதைப் பார்த்ததும் முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி, இரும்புக் கேட்டை படாரென சாத்திவிட்டு, வீட்டுக்குள் போய்விட்டார். அந்த சிறுவர்களும் நம்மை வெறித்துப் பார்த்தபடி உள்ளே போய்விட்டனர். 
 

pollachi issues



அங்கிருந்து நாம் கிளம்பி, அந்த ஏரியாவில் வசிக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரைச் சந்தித்து சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. வந்தது குறித்து விசாரித்தோம். ""இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகாம சபரிராஜன் வீட்டுக்குப் போனதுக்கு காரணம் இருக்கு. பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருந்த நடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் டீம் முதலில் தூக்கியது சபரிராஜனைத்தான். அவன் மூலமா திருநாவுக்கரசு வீட்டுக்குப் போகும்போது, அவன் அம்மாதான் அவனை தப்பிக்கவிடுகிறார்.
 

pollachi issues



அதுக்கப்புறம் சதீஷ்குமார், வசந்தகுமார்னு வரிசையா பலரை கைது செய்து, அவர்களிடமிருந்து சி.டி.க்கள், போட்டோக்களையெல்லாம் கைப்பற்றிவிட்டது  நடேசன் டீம். இப்ப எதுவுமே இல்லாத சபரிராஜன் வீட்டில் என்ன கிடைத்துவிடப்போகிறது?. பெரிய பில்டிங் காண்ட்ராக்டரான சபரிராஜனின் அப்பா அசோகனிடம், "உங்க பையன் எங்க வேலை பார்த்தான், எவ்வளவு சம்பளம் வாங்கினான், உங்க குடும்பத்துல எத்தனை பேரு'ன்னு கணக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. இந்த சி.பி.ஐ. முதல்ல விசாரிக்க வேண்டியது, இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ.க்கள் ராஜேந்திர பிரசாத், பாஸ்கர், எஸ்.எஸ். எஸ்.ஐ.ரகு ஆகிய இவர்களைத்தான்''’ என்றவர் மேலும் சில தகவல்களை சொல்லத் தொடங்கினார். 

 

pollachi issues



சபரிராஜனும் திருநாவுக்கரசும்தான் பொம்பளப் புள்ளைங்களைத் தூக்குறதுல கில்லாடிகள். மொதல்லயெல்லாம் சபரிராஜன் தாடி வச்சிருக்கமாட்டான். ஒரு ஆக்சிடெண்ட்ல தாடை கிழிஞ்சு போய், தையல் போட்டிருந்தாங்க. அந்த தழும்பு தெரிஞ்சா பொண்ணுங்க அசிங்கமா நினைக்கும்னுதான் தாடி வளத்துக்கிட்டுத் திரியுறான்''’என்றார். அங்கிருந்து கிளம்பி நேராக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று, நமக்கு பழக்கமான டாக்டர்கள் சிலரிடம் பேசிய போது, ""ஆமா சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தார்கள். கடந்த அஞ்சு வருஷத்துல எத்தனை இளம்  பொண்ணுங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, இல்ல வேற காரணங்களுக்காக அட்மிட் ஆனாங்களா, அவுங்களோட வீட்டு அட்ரஸ் ஆகிய விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிட்டுப் போயிருக்காங்க''’என்றனர். 

பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ. சேகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்... பொள்ளாச்சி பாலியல் வில்லன்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணையில் உண்மை அம்பலத்திற்கு வரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.இந்நிலையில் நமக்கு 2 போன்கால்கள் வந்தன. "நான் மேற்கு மண்டலத்துல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல இருந்து பேசறேன். நான் பொள்ளாச்சியில ஏழு வருசத்துக்கு முன்னால கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐயா இருக்கும் போது நடந்த சம்பவம் ஒண்ணு உங்ககிட்ட சொல்றேன்.

மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில முபாரக்குன்னு ஒருத்தரு இருக்காரு, இப்ப அவரு அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர். அவரு அப்ப ஒரு சி.டி. கடை வச்சிருந்தாரு. அவரு ஆபாச படங்கள் விக்கிறதா வந்த புகாரின் பேர்ல நைட்டோட நைட்டா கடைக்குள்ள ரெயிடு போகணும்னு அப்ப டி.எஸ்.பி.யா இருந்த பாலாஜி சார், மகாலிங்கபுரம் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டாரு.

5,000 சி.டி.க்களை புடிச்சோம். அந்த சி.டி.க்கள்ல சிலதை பிளேபண்ணி பார்த்தோம். அதுல பல பொண்ணுகளை பலவிதமா மெரட்டி பசங்க எடுத்த பல வீடியோக்கள் இருந்துச்சு. "இவனுங்க யாருன்னு கண்டுபிடிக்கோணும்'னு உயர் அதிகாரிகள்கிட்ட உணர்ச்சியா சொன்னேன். ஆனா அவங்க என்னைய அதற்கடுத்த நாளே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அப்ப  தவறவிட்ட அந்த  கேவலமான பசங்களை எப்படியாவது -இப்பவாவது புடிக்க வையுங்க  சார்'' என உணர்ச்சியாய் சொன்னார் அந்த போலீஸ் அதிகாரி.

இரண்டாவது போன்கால். "தவறாக எப்படி சொல்லலாம் பாஸ்ட்ஃபுட்  கடையை பற்றி? நீங்கள் எப்படி பொள்ளாச்சி கோட்டூர்புரம்  ரோட்டில் ஓம்பிரகாஷ் பெட்ரோல் பங்க்குக்கு எதிரில் உள்ள அடித்து உடைக்கப்பட்ட பாஸ்ட்ஃபுட் கடையை திரும்பவும்... அது பார் என்று சொல்லலாம்?' எனக் கேட்டது அந்தக் குரல். நாம், கடந்த 12-ந் தேதி காலை 11:20 மணிக்கு பெட்ரோல் பங்க்குக்கு முன்னால இருக்கற டாஸ்மாக் கடை (கடை எண்:1862)யை ஒட்டியுள்ள பாஸ்ட்ஃபுட் கடைக்குள் சென்று பார்த்தோம். அமோகமாக பிராந்தி, விஸ்கி, பீர் என டாஸ்மாக் கடை திறக்கும் 12 மணிக்கு முன்னதாகவே பாஸ்ட்ஃபுட்  கடையில் விற்கப்படுவதை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்து வந்தோம். அமோகமாய் செயல்படுகிறது பாஸ்ட்புட் கடை. இவற்றையும் சி.பி.ஐ. கவனிக்கும் என்கிறார்கள். 
 

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.