Skip to main content

தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரின் பிளான் இதுதானா?

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

mamata

 

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக தொடங்கிவிட்டன. இந்நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக வல்லுநராக செயல்படும் பிரசாந்த் கிஷோர், நேற்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டு பரபரப்பைக் கிளப்பினார். 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றிவிட்டால் தனது தொழிலை விட்டுவிடுவதாகத் தெரிவித்திருந்தார். இதன்பின் பாஜக தரப்பில் மூத்த தலைவர்களும் பிரசாந்த் கிஷோரின் இப்பேச்சுக்கு எதிர்க்கருத்து தெரிவித்தனர். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி இது பெரும் விவாதத்தையும், திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் பெரியளவில் வெற்றிபெறுமா என்கிற கேள்விக்கான பதிலையும் தேடவைத்துள்ளது. 

 

இந்தமுறை மேற்குவங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்கிற அளவிற்கு யோசிக்கவைக்க முதல் காரணமாக இருப்பது, கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக பிடித்த இரண்டாம் இடம்தான். அதுவரை மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் என்றாலே திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இக்கட்சிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகப் பார்க்கப்பட்ட வேளையில் திடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் எண்ட்ரீ கொடுத்தது பாஜக. இதற்கு முந்தைய 2014 தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பிடித்திருந்த பாஜக அடுத்த தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி. ஆமாம், 2014ஆம் ஆண்டு தேர்தலில் 17 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த ஒரு கட்சி, அடுத்த ஐந்து வருடங்களில் 40 சதவீத வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வென்று, ஏற்கனவே அங்கு கோலோட்சிகொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வளர்ந்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாக்குகளைப் பிரித்தது போன்ற பல காரணிகள் அக்கட்சிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தன. 

 

இவைதான் தற்போதைய மேற்கு வங்க ரேஸில் பாஜகவுக்கு பெரும் ஊக்கத்தைக்கொடுத்து ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு நீண்ட கால கதை அடங்கியிருக்கிறது. அதில் ஆர்.எஸ்.எஸ் பெரும் பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் ஆர்.எஸ்.எஸ். பள்ளிக்கூடங்கள் மேற்கு வங்கத்தில் பல திறக்கப்பட்டு, அவர்களுடைய கொள்கைகளை மாணவர்களுக்குள்ளும் அவர்களுடைய குடும்பத்திற்குள்ளும் சைலண்டாக விதைத்து வந்தது. அந்த மாநில கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளின் புழக்கம், மக்களுடன் மக்களாக கலந்து அவர்கள் மேற்கொண்ட கட்சி வளர்ப்பு என அனைத்தும் இன்றைய பாஜக வளர்ச்சியின் அடித்தளம். இதுபோன்ற மைக்ரோ மேனேஜிங் யுக்தியைக் கையாண்டுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியா முழுவதும் வளர்கிறது. அதே டெக்னிக்கைதான் மேற்கு வங்கத்திலும் கையாண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மேற்குவங்கத்தில் 27 சதவீத இசுலாமியர்களின் வாக்கு என்பது திரிணாமூல் காங்கிரஸுக்கானது என்பதைத் தெரிந்துகொண்ட பாஜக, இந்து வாக்குகளை நாம் கைப்பற்றிடவேண்டும் என்ற நோக்கத்தோடு பிரச்சாரத்தைத் தீவிரமாக்கியது. அரசியல் கட்சிகள் என்றாலே உள்கட்சி பூசல் நிச்சயம், அப்படி பூசலில் சிக்கி புகைச்சலில் இருந்த பல திரிணாமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு ஓட்டம் எடுத்தனர். சிலர் திரிணாமூல் கட்சிக்குள் இருந்துகொண்டே பாஜகவுக்கு விசுவாசத்தைக் காட்டினர். இதுபோன்ற சின்னப்பிள்ளைத்தனமான காரணமெல்லாம் தேர்தல் முடிவுகளின் போது சொல்லப்பட்டது. இதுபோன்ற பல அரசியல் காரணங்களும், பத்து வருட பாஜகவின் உழைப்பும், காங்-கம்யூ மீதான மக்களுக்கிருந்த கோபமும்தான் பாஜக இரண்டாம் இடத்தை பிடிக்கக் காரணமாக இருந்தது. 

 

ஆனால், இன்னும் ஒருசில மாதங்களில் பலரும் எதிர்பார்க்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற இவைபோதுமா? ஒரு பக்கம் சிறுகசிறுக பாஜக வளர்ந்துகொண்டிருக்கிறது என்றாலும், 2019 மக்களவை தேர்தலுக்குப் பின் பாஜகவின் வாக்கு வங்கி சதவீதம் பல இடங்களில் சரிந்தும் வருகிறது. 2019-பின் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றிருக்கலாம் ஆனால், முன்பைவிட வாக்கு சதவீதங்கள் குறைந்துகொண்டுதான் செல்கிறது. 2018 ஆம் ஆண்டு நடந்த பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள், 2019 மக்களவை தேர்தல் ஆகியவற்றிற்கு இடையே பாஜகவின் பொது வாக்கு வங்கி வளர்ச்சி 17 சதவீதமாக இருந்தது. ஆனால், மக்களவை தேர்தல் முடிந்த அடுத்த ஒரு வருடத்தில் பாஜகவுக்குக் கிடைத்த பொது வாக்கு வங்கி 13 சதவீதமாகக் குறைந்தது. மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெற வேண்டுமானால் மக்களவை தேர்தலைவிட அதிகம் உழைக்க வேண்டும்.

 

அதாவது அந்த தேர்தலில் பெற்ற வாக்கு வங்கி சதவீதத்துடன் 2 சதவீத பொது வாக்குகளைத் தன்வசப்படுத்தினால்தான் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பாஜகவின் பொது வாக்கு வங்கி கடந்த ஒரு வருடத்தில் கனிசமாக குறைந்து வருவதைப் பார்க்கும்போது பொது வாக்குகளைத் தன்வசப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது திரிணாமூல் காங்கிரஸுக்கு மற்றுமொரு இமாலய வெற்றியைத் தரும். ஏனென்றால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கி 27 சதவீதமும் பாஜகவுக்குத்தான் சென்றது. ஆனால், மம்தாவுக்கான 44 சதவீத வாக்குகள் அப்படியேதான் இருக்கிறது. ஏற்கனவே வைத்திருக்கும் வாக்கு வங்கியுடன் பொது வாக்குகளும் அதிகம் கிடைக்கப்பெற்றால் மேற்கு வங்கம் மீண்டும் மம்தாவின் கட்டுப்பாட்டில்தான். 

 

இது நடந்துவிடக் கூடாது என்றுதான் பாஜகவின் மூத்த தலைவர்களான ஜே.பி. நட்டா, அமித்ஷா உள்ளிட்டவர்கள் மேற்கு வங்கத்தில் அடிக்கடி கூட்டம் நடத்துகின்றனர். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க பெங்காலியில் பேசிக்கொண்டே பிரதமரும் பிரச்சாரத்தில் இறங்கிவிடுவார். பொதுவாக பெங்காலிகள் தங்களின் மொழி, கலாச்சாரம் போன்றவற்றை மத அரசியலுக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல, அவர்களின் தனிச்சிறப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மாநில சுயாட்சி குறித்த புரிதல் இருப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர் வங்கத்து மக்கள். இதைதான் தனது பிரச்சார யுக்தியாகவும் மம்தா கையாள்கிறார். மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலை என்னவென்று பார்த்தால் இரண்டு கட்சி தொண்டர்களும் போரில் ஈடுபடுவதுபோல அடிதடி கைகலப்பில் நித்தம் ஈடுபடுகிறார்கள். இரண்டு வருடங்களில் இந்த இரண்டு கட்சிகளிலுமிருந்து 40க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் கொலைகளும் செய்யப்பட்டுள்ளனர். இந்தமாதிரி சென்றுகொண்டிருக்கும் தேர்தல் போக்கில் கடைசி நேரத்தில்கூட கணிப்புகள் மாறலாம், ஆனாலும், தனது தொழிலையே பந்தயம் கட்டுமளவுக்கு பிரசாந்த் கிஷோர், மம்தாவின் வெற்றியில் உறுதியாக இருக்கிறாரென்றால், அதற்கு, சரியும் பாஜகவின் பொது வாக்குவங்கி சதவீதமும்,மம்தாவின் ஆளுமையுமே பின்னணியாக இருக்கிறது. இவை இரண்டையும் மனதில்வைத்தே தேர்தலுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார் பிரசாந்த் கிஷோர்.