பணப்பட்டுவாடா செய்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் சிறப்பு பேட்டி
ஆர்.கே.நகரில் பட்டப் பகலில் பணப்பட்டுவாடா செய்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நக்கீரன் இணையதளத்திடம் கூறும்போது, பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது நியாயமா என்ற கேள்வியை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். தமிழக விவசாயிகளுக்கு எதிரான செயல்கள் தொடர்ந்தால், விவசாயிகளை ஒன்றுபடுத்தி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிறங்குவோம் என்றார்.
மேலும் ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்து பேசிய அவர்,
கட்டுப்பாடு இல்லாத தேர்தலாக உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் அரசு கஜானாவை காலி செய்துவிட்டு, அந்தப் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்துவிட்டு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டியதில்லை, எந்த திட்டத்தையும் நிறைவேற்றவேண்டியதில்லை என்று ஊழல் செய்கின்றனர்.
பணப்பட்டுவாடா செய்பவர்களே தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துள்ள பாஜகவும் புகார் அளித்துள்ளது. போலீஸ் வாகனத்தில் பணம் போகிறது. அதிகாரிகள் வாகனத்தில் பணம் போகிறது. அப்படி இருக்கும்போது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும்.
ஒரே நாளில் 120 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளதே?
இந்தப் பணம் தமிழக காவல்துறைக்கு, உளவுப்பிரிவுக்கு, தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமலா வழங்கினார்கள். தெரிந்துதான் வழங்கியிருக்கிறார்கள். பணப்பட்டுவாடா நடந்தது என்று மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார் வாங்கிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரடியாக தெரிகிறது. வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. எங்கெங்கு காற்று புகுகின்றதோ, அங்கெல்லாம் பணம் போகிறது. காவல்துறை வாகனத்தில் பணம் போவதாக சொல்கிறார்கள். உயர் அதிகாரிகள் வாகனத்தில் பணம் போனதாக சொல்கிறார்கள்.
பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சொல்கிறார்களே?
பணப்பட்டுவாடா செய்கிறார்கள் என வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது ஜனநாயக ரீதியில் சரியில்லை. வேட்பாளரை அந்த கட்சிதான் நிறுத்துகிறது. வேட்பாளர் சென்று நேரடியாக பணம் கொடுப்பது இல்லை. அது வேட்பாளரின் பணமும் இல்லை. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்த முறை அதே கட்சி வேறு வேட்பாளரை நிறுத்தி மீண்டும் ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று செலவழிக்கும். தேர்தலில் பணத்தை கொடுத்து ஓட்டு பெறலாம் என்ற அரசியல் கட்சியின் நிலைபாடுதான் தவறானது. அந்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும். இதேபோல் தேர்தலை ஒத்திவைப்பதாலோ, ரத்து செய்வதாலோ எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை. மக்களின் வரிப்பணம்தான் வீணாகும். இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்