ADVERTISEMENT

'அச்சில் ஏற்றமுடியா ஆபாசம்!' - பப்ளிக் ஒப்பீனியன், ப்ராங் யூ-ட்யூப் சேனல்களுக்கு வார்னிங்! 

10:00 PM Jan 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஆபாசத்தைத் திணித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைக்கும் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மூன்று பேரின் கைது.

யூட்யூப் என்ற ஒன்று அதிகம் அறியப்படாத ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த மக்களின் விமர்சனங்களைப் பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்கும். வெளியான திரைப்படம் குறித்து ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். இப்படி இருந்தநிலையில் யூடியூப் சேனல்களின் கருத்துக் கேட்பு என்பது கொஞ்சம் சமூகம் நோக்கியும் பயணித்தது. நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களும் ஆரோக்கியமான முறையிலேயே இருந்துவந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களாகக் கருத்துக் கேட்பு என்பதே ஆபாசக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது சில யூட்யூப் சேனல்களால். கடற்கரை, சுற்றுலாத் தலம் என பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் விரசமான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே தற்பொழுது சில யூடியூப் சேனல்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் 'கண்டெண்ட்' எடுப்பது. உதாரணமாக உங்களுடைய காதலரோ அல்லது ஆண் நண்பரோ உங்கள் முன்பே வேறு ஒருவருடன் சென்றால் நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்பது போன்ற தேவையில்லாத கேள்விகள் இளைஞர்கள், பெண்கள், ஆண்களிடம் முன்வைக்கப்படுகிறது. இதைவிடவும் மோசமான ஆபாசமான கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது. இது எல்லாம் சமூக மாற்றத்திற்குத் தேவையான கேள்விகளா எனச் சிலர் ரவுத்திரம் கொண்டாலும் அல்லது முகம்சுளித்துச் சென்றாலும் ஒரு சிலர் இந்த ஆபாசக் கேள்விகளுக்குக்கூட நாகரீகமான முறையில் முடிந்த அளவு பதில் சொல்கின்றனர். இருப்பினும் அவர்களை விடாமல், ஆபாசமான பதில்களை, வார்த்தைகளை அவர்கள் வாயில் இருந்தே பெறுவதற்கு முயற்சிப்பது தான் இதில் உட்ச்சபட்ச வக்கிரமே.

அதேபோலத்தான் யூட்யூப் ப்ராங்-ஷோக்களும். முன் பின் தெரியாதவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவிற்கு 'ப்ராங்க்' என்ற பெயரில் வீடியோ எடுத்து வெளியிடுவது, பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ப்ராங் ஷோக்கள் தொடர்பாக நீதிமன்றம் எவ்வளவு கண்டிப்புகளை, உத்தரவுகளைப் பிறப்பித்தும் எந்தப் பலனும் இல்லை என்றே சொல்லாம். இன்று சென்னையில் பப்ளிக் ஒப்பீனியன் என்ற பெயரில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 'சென்னை டாக்ஸ்' என்ற அந்த யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. காரணம் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலுக்கு வார்த்தைகளிலே சொல்லமுடியாத அளவிற்கு ஆபாசமான பதில்களை அளித்திருந்தார். அந்த வீடியோவை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி அப்படியே அந்த சேனலும் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசின் பாட்சா, கேமராமேன் அஜய் பாபு மற்றும் அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடியோக்களும் ஆபாசம் நிறைந்த கேள்விகளும் அதற்கான தலைப்புகளும் இடம்பெற்றிருக்கும். அதேபோல் இது போன்ற யூடியூப் சேனல்களில் வெளியாகும் சில வீடியோக்களில் தாங்களே ஏற்பாடு செய்த பெண்களை வரவழைத்து ஆபாசமான கருத்துகளைப் பேசவைத்து வீடியோ வெளியிட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது அந்த யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமான கருத்துக் கேட்பு என்பது ஒருபுறம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு சிலர் செய்யும் இந்தச் சீரழிவுகளால் ஒட்டுமொத்த யூட்யூப் சேனல்களையும் குறைசொல்ல முடியாது. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்த, பப்ளிக் ஒப்பீனியன் என்ற பெயரிலும், ப்ராங் ஷோ என்ற பெயரிலும் இந்த ஆபாச கலாச்சாரம் அரங்கேறி வருகிறது.

ஆழமான சிந்தனை, தரமான முயற்சி, புதிய கற்பனை, களப்பணி... இப்படி எதுவுமே இல்லாமல் இளைஞர்களை வைத்துப் பணம் ஈட்ட நினைக்கும் சில யூடியூப் சேனல்களுக்கு இந்த மூவரின் கைது மூலம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது போலீஸ்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT