Skip to main content

'அச்சில் ஏற்றமுடியா ஆபாசம்!' - பப்ளிக் ஒப்பீனியன், ப்ராங் யூ-ட்யூப் சேனல்களுக்கு வார்னிங்! 

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

 police warning to public opinion, prang you-tube channels

 

மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஆபாசத்தைத் திணித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைக்கும் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மூன்று பேரின் கைது.

 

யூட்யூப்  என்ற ஒன்று அதிகம் அறியப்படாத ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த மக்களின் விமர்சனங்களைப் பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்கும். வெளியான திரைப்படம் குறித்து ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். இப்படி இருந்தநிலையில் யூடியூப் சேனல்களின் கருத்துக் கேட்பு என்பது கொஞ்சம் சமூகம் நோக்கியும் பயணித்தது. நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களும் ஆரோக்கியமான முறையிலேயே இருந்துவந்தது.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களாகக் கருத்துக் கேட்பு என்பதே ஆபாசக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது சில யூட்யூப் சேனல்களால். கடற்கரை, சுற்றுலாத் தலம் என பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் விரசமான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே தற்பொழுது சில யூடியூப் சேனல்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் 'கண்டெண்ட்' எடுப்பது. உதாரணமாக உங்களுடைய காதலரோ அல்லது ஆண் நண்பரோ உங்கள் முன்பே வேறு ஒருவருடன் சென்றால் நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்பது போன்ற தேவையில்லாத கேள்விகள் இளைஞர்கள், பெண்கள், ஆண்களிடம் முன்வைக்கப்படுகிறது. இதைவிடவும் மோசமான ஆபாசமான கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது. இது எல்லாம் சமூக மாற்றத்திற்குத் தேவையான கேள்விகளா எனச் சிலர் ரவுத்திரம் கொண்டாலும் அல்லது முகம்சுளித்துச் சென்றாலும் ஒரு சிலர் இந்த ஆபாசக் கேள்விகளுக்குக்கூட நாகரீகமான முறையில் முடிந்த அளவு பதில் சொல்கின்றனர். இருப்பினும் அவர்களை விடாமல், ஆபாசமான பதில்களை, வார்த்தைகளை அவர்கள் வாயில் இருந்தே பெறுவதற்கு முயற்சிப்பது தான் இதில் உட்ச்சபட்ச வக்கிரமே.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

அதேபோலத்தான் யூட்யூப் ப்ராங்-ஷோக்களும். முன் பின் தெரியாதவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவிற்கு 'ப்ராங்க்' என்ற பெயரில் வீடியோ எடுத்து வெளியிடுவது, பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ப்ராங் ஷோக்கள் தொடர்பாக நீதிமன்றம் எவ்வளவு கண்டிப்புகளை, உத்தரவுகளைப் பிறப்பித்தும் எந்தப் பலனும் இல்லை என்றே சொல்லாம். இன்று சென்னையில் பப்ளிக் ஒப்பீனியன்  என்ற பெயரில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 'சென்னை டாக்ஸ்'  என்ற அந்த யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. காரணம் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலுக்கு வார்த்தைகளிலே சொல்லமுடியாத அளவிற்கு ஆபாசமான பதில்களை அளித்திருந்தார். அந்த வீடியோவை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி அப்படியே அந்த சேனலும் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசின் பாட்சா, கேமராமேன் அஜய் பாபு மற்றும் அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடியோக்களும் ஆபாசம் நிறைந்த கேள்விகளும் அதற்கான தலைப்புகளும் இடம்பெற்றிருக்கும். அதேபோல் இது போன்ற யூடியூப் சேனல்களில் வெளியாகும் சில வீடியோக்களில் தாங்களே ஏற்பாடு செய்த பெண்களை வரவழைத்து ஆபாசமான கருத்துகளைப் பேசவைத்து வீடியோ வெளியிட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது அந்த யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

இது ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமான கருத்துக் கேட்பு என்பது ஒருபுறம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு சிலர் செய்யும் இந்தச் சீரழிவுகளால் ஒட்டுமொத்த யூட்யூப் சேனல்களையும் குறைசொல்ல முடியாது. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்த, பப்ளிக் ஒப்பீனியன் என்ற பெயரிலும், ப்ராங் ஷோ என்ற பெயரிலும் இந்த ஆபாச கலாச்சாரம் அரங்கேறி வருகிறது.

 

ஆழமான சிந்தனை, தரமான முயற்சி, புதிய கற்பனை, களப்பணி... இப்படி எதுவுமே இல்லாமல் இளைஞர்களை வைத்துப் பணம் ஈட்ட நினைக்கும் சில யூடியூப் சேனல்களுக்கு இந்த மூவரின் கைது மூலம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது போலீஸ். 

 

 

 

 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.