Skip to main content

உங்க பசங்க இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் அமைதிகாக்கப்படுகிறதா?

indiraprojects-large indiraprojects-mobile

275 பெண்கள் 1100 வீடியோ துணை சபா ஆட்களைக் காப்பாற்றும் மந்திரி!
நக்கீரன் அம்பலப்படுத்திய பாலியல் கொடூரம்!

"இளம்பெண்கள் 275 பேரை சமூக வலைத்தளம் மற்றும் நேரடித் தொடர்புகளால் மயக்கி ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்' என்ற பேரதிர்ச்சியை நக்கீரன் இதழில் கட்டுரையாகவும், வீடியோவாகவும் வெளியிட்ட நிலையில்... அந்த வீடியோவில், ""உன்னை நம்பித்தானே வந்தேன்...'' என்று கதறியபடியும், ""பெல்ட்டால் அடிக்காதீங்கண்ணா... வலிக்குது... நானே கழட்டிடுறேன்...'' என்று அலறியபடியும் மாணவிகள் துடிப்பதைப் பார்த்து பதறிய தமிழகத்தின் பல தரப்பினரும் ""அந்தக் கொடூரக் குற்றவாளிகளை உடனே தண்டியுங்கள்'' எனக் குமுறினர். கடும் நடவடிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரும் அறிக்கை விட்டுள்ளனர். கைதானவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்காக ஆஜராவதில்லை எனத் தீர்மானித்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.


""ஆனா அரசும் போலீசும், இந்த திருநாவுக்கரசு விஷயத்தில் அம்பராம் பாளையத்து ஆத்து தண்ணியில போட்ட கல்லு போல மௌனமாய்த்தான் இருக்காங்க அண்ணா'' என நமது நண்பர்களின் உதவியோடு பேசினார் அந்த ஆபாச வீடியோ கும்பலில் சிக்கிய ஓர் இளம் பெண்ணின் சகோதரி.

அவர் நம்மிடம், ""அண்ணா இவனுக படுமோசமானவனுக. கைது செய்யப் பட்டிருக்கிற சதீஷ், பொள்ளாச்சி கடை வீதில "ஜோக்கர் ரெடிமேடு கடை'ன்னு ஒண்ணு வச்சிருக்கான். அங்க நெறைய பொண்ணுக வேலை செய்யுறாங்க. அங்கதான் என் தங்கச்சி ப்ரீதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வேலைக்குப் போனா. அவள் கிட்ட இந்த சதீஷ் காதல் வசனம் பேசி மயக்கி சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்கிறான். இவளும் அவனை நம்பிட்டா. ஆனா, அவனோடு சேர்ந்து பத்து பேர் உள்ள வந்துருக்கானுக. அதுல முக்கியமா கெரோன், பொள்ளாச்சி -பல்லடம் ரோட்டுல டூவீலர் கடை வச்சிருக்கற பைக் டீலிங் பாபு, "பார்' நாகராஜ் இவனுக பெல்ட்டை கழட்டி அடிச்சு என் தங்கச்சிய மயக்கமாக்கிய பின்னாலதான் அவளை சைக்கோத் தனமா ஒடம்பெல்லாம் கடிச்சு வச்சு நாய்போல குதறி எடுத்திருக்கானுக. "இங்க நடந்ததை வெளிய சொன்னா... இந்த ரூமுக்குள்ள எடுத்த உன் வீடியோ எல்லார் வீட்டுக்குள்ளேயும் இருக்கும்'னு சொல்லி அவளை கந்தல்துணியா பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டிருக்கானுக.
pollachi-incident
அவ வீட்டுக்கு வந்ததும் எங்ககிட்ட சொல்லி அழுதா. எதுவும் நாங்க வெளிய சொல்ல முடியாது. பண்ணை வீட்டுக்கு வந்த பசங்க, "நாங்க யார் தெரியுமா? பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் அக்னீஸ் முகுந்தன், பிரவீனோட பிரண்டுக, எவனும் எங்களை ஒண்ணும் புடுங்க முடியாது'ன்னு சொல்லியே அனுப்பியிருக்கானுக. பெரிய இடத்தை பகைச்சுக் கிட்டு எங்க மாதிரி அப்பாவிங்க என்ன பண்ணமுடியும்? நியாயமே கெடைக்காதுங்களா அண்ணா?'' என கண்ணீர் வழிகிற அந்த சகோதரியிடம் நாம் என்ன சொல்ல?

பொள்ளாச்சி நகர போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் நமது போலீஸ் நண்பரிடம் பேசியபோது... ""நாங்க கைதுபண்ணுன நாய்க, இனி கைது செய்யாமலே இருக்கப்போற நாய்க எல்லாருமே, துணை சபாநாயகரோட ரெண்டு பசங்களுக்கும் பிரண்டு. இந்த பொண்ணுக மேட்டரு விஷயம் பொள்ளாச்சிக்கே தெரியும். சிக்குன திருநாவுக்கரசு டீம்ல இருக்கற பசங்க போன்லயிருந்து மட்டும் 1100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கெடச்சிருக்கு. அவனுக வச்சிருந்த ஒவ்வொரு போனும் லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும். போலீஸ் விசாரணையில சிக்குன வீடியோ வெளியே போகாம இருந்தாலே பெரும்பாடு.

வீடியோக்களில் இருக்கிற பல ஆட்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க. அதனால போலீஸ் அதிகாரிகளே... பல கோடிகளை லஞ்சமா ஆளுங்கட்சி ஆட்களிடமே கேக்குறாங்க. அவுங்களும் தரத் தயாராத் தான் இருக்காங்க. இப்ப உங்க நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மூலம் விவ காரம் வெளிவந்ததால சிக்குனவங்க மேல ஸ்ட்ராங்கா கேஸ் போட வேண்டியதாயிடிச்சி. ஆனா, விசாரணை விரிவா நடந்தாதான் இதில் சம்பந்தப்பட்ட ஆளுந்தரப்பு புள்ளிகள் மாட்டுவாங்க'' என்றார்.

பொள்ளாச்சி டி.எஸ்.பி. ஜெயராமன், ""திருநாவுக்கரசு கைது ஆவதற்கு முன்னர் அவனே வெளியிட்ட வீடியோவில்... நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதா சொன்னது போலியானது. எங்க கைக்கு வந்திருக்கிற வீடியோக்கள் உண்மையா? இல்லையா?னு பரிசோதனை நடந்துக்கிட்டிருக்கு. அதுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்'' என மீடியாக்களிடம் சொல்லியுள்ளார். (இவரின் பழைய நடவடிக்கைகள் குறித்து பெட்டிச் செய்தியில் காண்க)
pollachi-incident
இந்நிலையில் இந்த இளம் பெண்கள் பிரச்சினையில் தீவிரமாகப் போராடிவரும் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நவநீத கிருஷ்ணன், "இந்த வழக்குல சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உட்பட நான்குபேரையும் குண்டர் சட்டத்துல அடைச்சிட்டாங்க. உண்மைகளை எங்கே அடைக்கப் போறாங்களோ? தேர்தல் நேரத்துல இப்படி ஒரு செய்தி வந்தது து.சபாநாயகருக்கு பெரும் தலைவலியா இருக்கு. அந்த வலிக்கு பொள்ளாச்சி போலீஸார் தைலம் தடவுறாங்க'' என கொதிக்கிறார்.

அ.தி.மு.க. மீது பழி போடுவதற்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என்றும் இதுபற்றி டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்போவதாகவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்தார். ஆனால், இந்தக் கொடூரத்தில் சம்பந்தப்பட்ட "பார்' நாகராஜனை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ். மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் இதில் அ.தி.மு.க.வுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. துணை சபா தரப்பு ஆட்களைக் காப் பாற்றும் வேலையில் மாவட்ட மந்திரி தீவிரமாக செயல்படுகிறாராம்.

pollachi-incident


திங்கள் மாலை பேட்டி அளித்த கோவை எஸ்.பி. பாண்டியராஜன் (திருப்பூரில் டாஸ் மாக்குக்கு எதிராகப் போராடிய பெண்களைத் தாக்கிப் பெயர் பெற்றவர்) "4 வீடியோக்கள்தான் இருந்தது. இதில் அரசியல் தொடர்பு ஏதும் இல்லை'' எனத் "தீர்ப்பு' போலக் கூறியவரின் வார்த்தைகளில் ஊடகங்களையும் வலைத்தள செயல்பாட்டாளர்களையும் மிரட்டும் தொனி வெளிப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் முழுப் பின்னணி வெளிவராதபடி .திருநாவுக்கரசு டீம் முடக்கப்படும்' என்பதுதான் பொள்ளாச்சி போலீசின் நிலைமையாய் இருக்கிறது. வெறிபிடித்த காம வேட்டை நாய்கள் கடுமையாகத் தண் டிக்கப்பட வேண்டிய வகையில் விசாரணை தீவிரமாக வேண்டும். அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்கள் தொடர்பான வீடியோக்களும் விவரங்களும் எதிர்கால நலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். நேர்மையான அதிகாரி விசாரித்தால் மட்டுமே இது சாத்தியம்.

குடும்பத்தைப் பாதிக்கும்! -துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

"உங்க பசங்க இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் இந்த வழக்கு அமைதிகாக்கப்படுகிறது என சொல்லப்படுகிறதே?' எனக் கேட்டோம் .

அவரோ, "அப்படியா..? துப்பு துலக்கி நல்லபடியா பண்ணுங்க. என்கிட்டே யாருமே இப்படிக் கேட்கமாட்டாங்க. நீங்கதான் இப்படி கேட்கறீங்க.? ஒரு பையனுக்கு இப்பதான் 20 வயசு ஆகுது. ஒரு குடும்பத்தை பாதிக்கிற விஷயமல்லவா இது. இப்படிக் கேட்கலாமா நீ?'' என போனை கட் செய்துவிட்டார். அவரது மகன் 2016-ல் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில், உடன் பயணித்த தோழி பலியானதில் உள்ள மர்மத்தை இப்போதும் பரிதாபத்துடன் குறிப்பிடுகின்றனர் சொந்தக் கட்சிக்காரர்களே.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் அக்னீஸ் முகுந்தன், பிரவீன் இருவரும் தங்கள் முகங்கள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதால், தங்கள் பேஸ்புக் கணக்கை மூடி விட்டார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...