Skip to main content

பணப்பட்டுவாடாவுக்கு போலீஸ் உதவி: தேர்தலை ரத்து செய்யக்கூடாது: முத்தரசன்

Published on 17/12/2017 | Edited on 17/12/2017
பணப்பட்டுவாடாவுக்கு போலீஸ் உதவி: தேர்தலை ரத்து செய்யக்கூடாது: முத்தரசன்

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத் தேர்தல், பணப்பட்டு வாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு வருகிற 21-ந்தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. வீடு வீடாக வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டு பண வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் கொடுத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:-

ஆர்.கே.நகரில் ஏற்கனவே ஒருமுறை இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தற்போது நடைபெறுகிறது. ஏற்கனவே ரத்து செய்ததற்கான காணரத்தை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்ற காரணத்தை சொல்லி, தோல்வியை ஒப்புக்கொண்டு தேர்தலை ரத்து செய்து, மீண்டும் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. 

சென்ற தேர்தலில் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும். ஆவணங்கள் வருமான வரித்துறையால் எடுக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி ஒரு நடவடிக்கையை உறுதியாக எடுத்திருந்தால் இன்றைக்கு இந்த பிரச்சனை வராது. 



இந்த தேர்தலில் மக்களுடைய மனநிலை மத்திய ஆட்சியின் மீதும், மாநில ஆட்சியின் மீதும் கடுமையான கோபத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இத்தகைய சூழலில் நடைபெறக்கூடிய இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிப்பெறக் கூடிய அனைத்து சாதகமான சூழல் அங்கு நிலவுகிறது. 

இந்த நிலையில் ஆளும் அதிமுக அரசு, இரட்டை இலை சின்னத்தை பெற்ற பின்னரும் தோற்றுவிட்டால், இரண்டாவது இடத்திற்கோ, மூன்றாவது இடத்திற்கோ சென்றுவிட்டால் அவமானம் என கவுரவ பிரச்சனையாக கருதுகிறார்கள். ஆகவே வெற்றிப்பெற வேண்டும் என்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியை நான் தவறு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் தவறான முறையில் அதாவது பணப்பட்டுவாடாவால் வெற்றிப்பெறக் கூடாது. 

நான் நேற்று (சனிக்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தங்களுடைய மாவட்டச் செயலாளர் அனுப்பிய மூன்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதாக கூறி அதிமுகவினர் பண விநியோகம் செய்துவிட்டு சென்றதாக ஒரு வாக்காளர் சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்தப் பணத்தை காட்டுகிறார். இதனை நேரில் பார்த்தேன்.

ஆகவே ஒரு வாக்காளருக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது நேற்று காலையில் தொடங்கி நேற்று மாலைக்குள் பெருமளவுக்கு முடிந்துவிட்டது. இந்தப் பணத்தை கொடுத்தது அதிமுக என்பது காவல்துறைக்கு தெரியும். காவல்துறையின், உதவியோடு, ஒத்துழைப்போடு, ஆசியோடுதான் இந்த பணிகள் நடைபெறுகிறதே தவிர, ஏதோ அவர்கள் திருட்டுத்தனமாக கொடுப்பதாக கருத இயலவில்லை. 

பல இடங்களில் திமுகவினரும், தோழமைக் கட்சிகளும் இணைந்து பணப்பட்டுவாடா செய்ப்பட்டதற்கான ஆதாரங்களுடன் காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். அதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நேரத்தில் தேர்தல் உயர் அதிகாரி வந்திருக்கிறார். அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்களையெல்லாம் அவர் கேட்டிருக்கிறார். அவர்களிடம் புகார் மனுக்களை பெற்றிருக்கிறார். 

இந்த சூழலில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இப்போது அல்ல தொடர்ந்து பலமுறை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறார். இந்த தேர்தலில் பாஜக பெருமளவுக்கு வாக்குகளை பெறாது என்பது அனைவருக்கும் தெரியும். இது அவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் அந்த அளவுக்கு அவர்கள் பலமாக இல்லை. ஆகையால் பெருமளவு வாக்குகளை பெற முடியாது. 

திமுக வெற்றி பெற்றுவிட்டால், தங்களுக்கு அரசியல் ரீதியாக பெரிய பின்னடைவு ஏற்படும் என்ற நோக்கோடு, ஒரு பக்கம் பணம் கொடுப்பதற்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டு, மறுபுறம் தேர்தல் முறையாக நடைபெறாது ரத்து செய்ய வேண்டும் என்ற குரலை பாஜக மூலமாக முன்வைக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் என ஒன்று தனியாக இருந்தாலும் கூட, அதில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்களை வைத்துத்தான் தேர்தலை நடத்த முடியும். இதற்காக தனியாக தேர்தல் பணியாளர்களை கொண்டுவர முடியாது. தேர்தல் ஆணையத்திற்கென தனியாக போலீசும் கிடையாது. 

முதல் அமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறது. அங்கிருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே காவல்துறையை குறை சொல்லி என்ன ஆகப்போகுகிறது. நடுநிலையாக செயல்படும் அதிகாரிகள் இன்று நாம் பார்க்க முடியாத சூழலில் தேர்தலை ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை சீர்குலைக்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து.

தேர்தல் ஆணையத்தில் இருந்து உயர் அதிகாரி வந்திருக்கிறார், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்பட்ட புகார்களில் சிவற்றியில் உண்மை இருக்கிறது என்று அவரே சொல்லுகிறார். அப்படியானால் பணம் கொடுத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை எடுக்காமல், இதனை காரணம் காண்பித்து தேர்தலை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையை சீர்குலைக்கும். எக்காரணத்தை கொண்டும் தேர்தலை ரத்து செய்யக்கூடாது. ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். 

-வே.ராஜவேல்



சார்ந்த செய்திகள்