Skip to main content

கரோனாவை வெல்லும் கவிதைகள்! உலக அளவில் மிளிர்ந்த தமிழர்கள்!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


கரோனா வைரஸின் அதிவேகப் பரவலைத் தடுக்க, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அல்லது அரசுகள் ஊரடங்கை அறிவித்து, மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்கின்றன. உலகம் முழுவதும் பல நாடுகளின் நிலை இதுதான். 

இதனால், வீடுகளில் இருந்தபடியே, பலர் தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை விடாமல் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலரோ தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அதில் கவிதை எழுதுகிறவர்களுக்காக ஒரு மிகப்பெரிய போட்டியை நடத்தி முடித்திருக்கிறது உலக மனிதாபிமான அமைப்பு.
 

 

 Poems to Win Corona! Global Tamilers


‘கோவிட் காலத்து கவிதைகள்’ ‘COVID TIMES POETRY’ என்ற தலைப்பிட்ட இந்தக் கவிதைப் போட்டியில், உலகின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆங்கிலம் மட்டுமின்றி, மக்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் கவிதை எழுதலாம் என்பதால், கவிதைகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள், உலக மனிதாபிமான அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்பட்டன.

உலகமே நடுக்கத்தில் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் குறித்து உலக மனிதாபிமான அமைப்பு சார்பில் கூறும்பொழுது, “பல கோடி மக்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சக்தியாக கவிதைகள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வார்த்தைகள் எந்தச் சூழலிலும் மிகச்சிறந்த ஆயுதங்களாக இருந்திருக்கின்றன. சிறந்த வார்த்தைகளை, சிறந்த முறையில் அடுக்கும்போது கவிதை பிறக்கிறது. அது இன்னும் இன்னும் மிகச்சிறந்த ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அது நல்வழிப் படுத்தும் ஆயுதம்.
 

http://onelink.to/nknapp

 

 Poems to Win Corona! Global Tamilers


கரோனா காலத்துக் கவிதைகள் போட்டியில் கலந்துகொண்டு, தங்களுக்குள் இருக்கும் கவித்துவத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் உலகின் பலதரப்பட்ட மக்கள். அந்தக் கவிதைகள் கோவிட்-19 வைரஸால் இறுகிக் கிடக்கும் சூழலில் இருந்து மக்களை விடுவிக்க உதவுமென்று உறுதியாக நம்புகிறோம். உலக மனிதாபிமான அமைப்பின் நிறுவனர் அப்துல் பசித் சையது, உலகம் ஊரடங்கில் இருக்கும் நிலையில், மக்களின் துயரத்தைக் கவிதைகள் வென்றெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்” என்று இந்தப் போட்டி குறித்து விளக்கமளித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, ட்ரினிடாட் டொபாகோ நாட்டின் ஐந்தாவது அதிபரான அந்தோனி கர்மோனா விருது வழங்கி கவுரவித்துள்ளார். உலக புவி தினமான ஏப்ரல் 22-ம் தேதி வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. 
 

 Poems to Win Corona! Global Tamilers


இந்த நிகழ்வின்போது, மக்களை உத்வேகப்படுத்திய தங்களது கவிதைகளை, கவிஞர்கள் வாசித்துக் காட்டினார்கள். பிரிக்ஸ் சர்வதேச மன்றத்தின் தலைவர் பூர்ணிமா ஆனந்த், மலேசியாவைச் சேர்ந்த பேராசியர் டத்தோ துரைசாமி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்தக் கவிதைப் போட்டியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாகச் சென்னை, ஓசூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்ட கவிஞர்கள் பலரும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்க இலக்கிய ஓவியப் போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு "சங்க இலக்கிய ஓவியப் போட்டியை" தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவுள்ளது.

 

இப்போட்டியில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் www.tamllvu.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். மாணவர்கள் பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து பத்து நாட்களுக்குள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். (ஒரு பாடலை 5 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்). இந்தப் போட்டிக்கான இணைப்பு 27-11-2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

 

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை (Original) அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு 09-12-2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்குத் தலா ரூ.2000  ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என மூன்று பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.9,000 வழங்கப்படும்.

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25, என்ற  முகவரியிலோ, 044-2220 9400, +91 86678 22210 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

கடலூரில் கலைத் திருவிழா; வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிய எம்.எல்.ஏ 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Art festival in Cuddalore; MLA felicitated the successful students

 

கடலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளஞ்செழியன், புவனேஸ்வரி, கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி வரவேற்றார்.

 

தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் என 3 பிரிவுகளாக கவின் கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 

இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஐயப்பன் எம்எல்ஏ சிறந்த முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் தலைமை ஆசிரியர் எல்லப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் மணி, மேற்பார்வையாளர் மோகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர் ) 21-ந் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 

மேலும் கலைத் திருவிழா தனி போட்டிகளில் கலந்து கொண்டு அதிகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும். இவ்விருதுகள் 3 பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன் ஊக்கப்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.