poda - sahul - hameed - naam tamilar party - incident

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 'பொடா' சாகுல்அமீது இன்று 19-ஆம்தேதி மாலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணமடைந்தார்.அவரைப் பற்றி நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வெளியிட்ட வாழ்க்கைக் குறிப்பை இங்கே தருகிறோம்.

'தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது (வயது 59). இவர் பிறந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூராகும். 1974 – 1982 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர் என்பதால் இவருக்கு, திருவாரூர் நன்கு அறிமுகம். தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்‘ இதழைப் பல ஆண்டுகளாக நடத்தியவர்.

ஈழத்தின் மீதும் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, 2002ஆம் ஆண்டு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த,நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, ‘பொடா‘ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் வதைப்பட்டார். அதே ஆண்டின் தொடக்கத்தில் ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னையொரு தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டு உறுதியாகக் களத்தில் நின்றதனால் இவரது தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார். தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால், பெரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் பேராளுமை.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.

நாம் தமிழர் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரானபோராட்டங்கள் உள்ளிட்ட மண்ணின் உரிமைகளுக்கானபோராட்டங்களிலும் தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சியை முன்னின்று நடத்தியவர். மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று கட்சி கட்டமைப்புப் பணிகளில் திறம்பட செயலாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி நாம் தமிழர் கட்சிக் கொள்கைகளைப் பரப்பியவர்.

Ad

அண்மையில் 'கஜா' புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர்.

naam thamizhar poda sahul hameed tamil desiyam
இதையும் படியுங்கள்
Subscribe